அவுஸ்திரேலிய வரலாற்றிலேயே முதலாவது முஸ்லிம் அமைச்சராகத் தேர்வு செய்யப் பட்ட 43 வயதாகும் எட் ஹுயூசிக் எனப்படுபவர் பதவியேற்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆன் மீது சத்தியப் பிரமாணம் (Oath) மேற்கொண்டார்.
சில மணி நேரங்களுக்குள்ளே இவரின் இந்த செய்கை மீது இனத்துவேசத்துடன் பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் இணையம் வாயிலாக அவுஸ்திரேலிய மக்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ளன.
எட் ஹுயூசிக் திங்கட் கிழமை அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட்டின் பாராளுமன்ற செயலாளராகவும் Broadband இற்கான பாராளுமன்ற செயலாளராகவும் தேர்வு செய்யப் பட்டிருந்தார். போஸ்னிய நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் இனத்தவரின் மகனான இவர் அரச பாராளுமன்றத்தில் பைபிளுக்குப் பதிலாக குர் ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்தது மட்டுமல்லாது தனது செய்கை எந்த வித பாரபட்சத்துக்கும் கட்டுப் படாத நேரடியான ஒன்று எனவும் இதனால் தான் சிறிதும் வெட்கப் படவில்லை எனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இச்செய்கையை அவுஸ்திரேலியாவின் ஆளுநர்கள் உட்பட பல தலைவர்கள் எதிர்க்கவில்லை என்பதுடன் அவுஸ்திரேலியா பன்முக கலாச்சாரம் நிலவும் நாடு எனத் தெரிவித்துள்ள போதும் எட் ஹுயூசிக் இன் ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் ஓர் அவுஸ்திரேலியனே அல்ல. இது அருவருப்பை ஏற்படுத்தும் செயல்! போன்ற கருத்துக்கள் உட்பட பல இனத்துவேசமான கருத்துக்கள் வந்து குமிவதாக எட் ஹுயூசிக் தெரிவித்துள்ளார். எனினும் இக்கருத்துக்களினால் வருத்தப் படாத எட் ஹுயூசிக் தவறான வார்த்தை பிரயோகங்களை மட்டும் நீக்கினால் இக்கருத்துக்களை ஜனநாயகத்தின் ஓர் அம்சம் எனத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.
0 Responses to குர் ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்த முதல் அவுஸ்திரேலிய முஸ்லிம் அமைச்சர் மீது இனத் துவேசம்