தமிழீழம் பற்றிப் பேசுவோம்’ எனும் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள்
நினைவாக தமிழ் இளையோர் அமைப்பு - கனடாவால் நடத்தப்பட்ட நிகழ்வில் கனடாவின்
பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகளில் இருந்து பெருந்திரளான
மாணவர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வு ரொறன்ரோவிலுள்ள யோர்க் பல்கலைக்கழக
மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பல
மாணவர்கள் தமது திறமைகளினூடாக தாம் எவ்வாறு தமிழீழத்துக்காகச்
செயற்படுகின்றோம் என்பது பற்றி எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்வானது உலகளாவிய ரீதியில் இளையோர்களின் கவனத்தைப்
பெற்றிருந்ததுடன், ரொறன்ரோவில் அதிகளவில் டுவிட்டர் சமூகத்தளதில் பேசப்பட்ட
நிகழ்வுகளில் ஒன்றாகவும் அமைந்திருந்தது.
நிகழ்வின் ஆரம்பத்தில் கனடிய தேசியக்கொடியும் தமிழீழத் தேசியக்
கொடியும் ஏற்றிவைக்கப்பட்டதுடன், அமைதி வணக்கம் இடம்பெற்று பின்னர் தமிழீழ
விடுலைப் போராட்டத்தில் தன் உயிரினை ஈந்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை
உருவாக்கிய தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் திருவுருவப் படத்துக்கு
மலர்வணக்கம் செய்யப்பட்டது.
பல்வேறுபட்ட திறமைகளையுடைய மாணவர்கள் இங்கு பேசினர். இசை, நடனம்,
ஓவியம் போன்ற பல்துறைகள் இதில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் வட்டுக்கோட்டைத்
தீர்மானத்தின் மீதான பங்கு, தமிழீழ தேசியக் கொடி மீதான பற்று, சிறிலங்கா
ஜனாதிபதி ராஜபக்சவின் இனப்படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும்
விழிப்புணர்வு, தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான தெளிவுபடுத்தல் போன்றவை
பற்றிப் பேசிய மாணவர்கள், அவற்றைத் தமது வேறுபட்ட திறமைகளினால் எவ்வாறு
தாம் தமிழீழ விடுதலை நோக்கி முன்னெடுத்து வருகின்றார்கள் என்பது பற்றிப்
பேசினார்கள். அத்தோடு ஏனைய மாணவர்களும் எவ்வாறு தம் திறமைகளைப்
பயன்படுத்தலாம் என்பது தொடர்பான ஓர் விழிப்புணர்வினையும் ஏற்படுத்திச்
சென்றார்கள்.
இதன்போது தனது ஓவியத் திறமை பற்றியும் அதனை எவ்வாறு தான் தமிழீழம்
நோக்கிப் பயன்படுத்துகிறேன் என்பது தொடர்பாகவும் பேசிய மாணவர்களில் ஒருவரான
கீரா ரட்னம், “உலகமே உங்கள் திரை, உங்கள் திறமையே உங்கள் தூரிகை. எனவே,
அதில் தமிழீழத்தினை வரையுங்கள்" என இந்நிகழ்வின் நோக்கம் பற்றி மிகத்
துல்லியமாக எடுத்துரைத்தார்.
"நாம் இதுவரையும் நடத்திய நிகழ்வுகளிலிருந்து இந்நிகழ்வு முற்றிலும்
வேறுபட்டது. இது இன்னொரு புதிய அத்தியாயத்தினையும் அவர்களின் திறமைகள்
தொடர்பான விழிப்புணர்வினையும் இளையோர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் உலகின் வெவ்வேறு நாடுகளிலும்
தொடர்ந்து எம்மால் நடத்தப்படும்” என இளையோர் அமைப்பு உறுப்பினர் ஒருவர்
தெரிவித்தார்.
0 Responses to தமிழீழம் பற்றிப் பேசுவோம்’ எனும் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள் நினைவாக நிகழ்வு - தமிழ் இளையோர் அமைப்பு - கனடா