Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தாயகம் முழுவதும் சிங்கள பேரினவாதத்தின் ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மந்தமான பெருமௌனப் பொழுதொன்றில் இம்முறை கரும்புலிகள் நாள் வந்துள்ளது.

விடுதலைப் போராளிகள் என்றாலேயே தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் என்பதே ஆகும். அதிலும் கரும்புலிகள் இன்னும் முன்னின்றவர்கள். நாள்குறித்து, இடம் தெரிவு செய்து, நிதானம் காத்து, நாள்க் கணக்கான வருடக் கணக்கான பொறுமை கடைப்பிடித்து இலக்கின் அண்மையில் போய் வெடிக்கும் தற்கொடையாளர்களின் தியாகம் ஒப்புவமை இல்லாதது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அதி உயர்ந்ததும், உச்சமானதுமான போர் ஆயுதமாகவே கரும்புலிகள் எழுந்திருந்தார்கள். உலக வரலாறு முழுவதும் சமூக மாற்றங்களுக்காகவும், சுதந்திரத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் எண்ணிலடங்காத போராட்டங் ள் நடைபெற்றுள்ளன.
அந்தப் போராட்டங்களுக்கு உள்ளாகவே உலக வரலாறு நகர்ந்து வந்துள்ளது. அப்படியான அனைத்து போராட்டங்களிலும் வெளிக்காட்டப்பட்ட அர்ப்பணிப்புகளில் மிக உயர்ந்த ஈகத்தை செய்தவர்களில் கரும்புலிகள் முதன்மையானவர்களாக என்றும் இருப்பார்கள்.
தேசியத் தலைவர் கரும்புலிகளின் உருவாக்கம் பற்றி சொன்னதைப் போலவே 'பலவீனமான எமது இனத்தின் பலமிக்க ஆயுதம்' என்பதே கரும்புலிகள் என்பதற்கான வரைவிலக்கணமாக எக்காலமும் இருக்கும்.
இதற்கு முன்னரே எல்லோரும் சொன்னதைப்போலவே கரும்புலிகள் பற்றி முழுமையாக எழுதவோ பேசவோ யாராலும் முடியாதிருக்கும். ஆனாலும் கரும்புலிகளை எழுதவோ பேசவோ மறுத்து தமிழர் வரலாறு எழுதப்பட இனி முடியாது.
நீண்ட நாள்க்கணக்கான, மாதக்கணக்காக நீடிக்கும் சமர்கள் செய்து முடிப்பவற்றை கரும்புலிகள் ஒரு நொடிக்குள் தங்களின் வெடி அதிர்வுடன் செய்து முடித்திருக்கிறார்கள்.
பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீரர்கள் இணைந்து செய்து முடிக்க வேண்டிய முன்னெடுப்பை கரும்புலி தனி ஒருமனிதனாக செய்து முடித்திருப்பான்.
எந்த யுத்தவரையறையும் ,போரியல் வியூகமும் அவர்களை அளவெடுக்க முடிந்ததில்லை. வெறும் கட்டுரையால் அவர்களின் விஸ்வரூபத்தை வெளிக்காட்டுவது கொஞ்சம் கடினம் என்பதால் ஒரு சின்னக் கவிதையால் அவர்களை எழுதுகிறேன்.
அக்கினிக்குஞ்சுகள்
  ஆதிக்கப்பெரும் காடெரிக்க எழுந்த

  அக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5.

  தேச விடுதலைக்காக தேகமுழுதும்

  வெடிகுண்டு காவிய வீரக் கரும்புலிகளின்

  நினைவு சுமந்த பொழுது அது.

  கரும்புலிகள்!

  காரிருளே எங்கும் நிறைந்த

  இரவைக் கிழித்து

  சோதிப்பெரு வெளிச்சம் காட்டிய

  எங்களின் குட்டிச் சூரியன்கள்.

  வெந்நீர் விரலில பட்டாலே

  விதி முடிந்தது போல கதறும்

  நம்மில் இருந்து

  வெடியதிர்வில் உடல்சிதறும்

  நேரம் அறிந்தும் புன்னகை ஒன்றுடனேயே

  உலாவந்த அதிசயப் பிறவிகள் இவர்கள்.

  உயிர்பூவை ஒருகணத்தில் ஊதிவிட்டு

  வெடியதிர்வை திசைகளெங்கும் பரவவிட்டு

  உடல்சிதறப் போய்வெடிக்கும் உன்னதத்தின்

 உன்னதங்கள் இவர்கள்.

 போய்வெடிக்கும் நேரம் தெரிந்திருந்தும்

 ஏதும் கலக்கமின்றி இலக்கை தேடிநடந்து

 ஒரு சின்ன நொடிக்குள்ளாக

 காற்றில் கலந்துவிட இவர்களால்

 எப்படித்தான் முடிகிறதோ..?

 எல்லோருக்குள்ளும் இல்லாத பெருநெருப்பு

 எப்படியாய் இவர்களுக்குள் மட்டும்

 மையம் கொள்கிறதோ...

 சின்னத் தடிமன் காய்ச்சல் என்றாலே

 இல்லாத மருந்தெல்லாம் தேடும் உலகில்

 எல்லாம் உதறிவிட்டு போய்வெடிக்க

 இவர்களுக்கு மட்டும் எப்படி முடிகிறது..?

 தங்களையே தற்கொடைதந்த எங்கள்

 பிள்ளைகளுக்காய் என்ன கைமாறு செய்தால்

 நன்றிக்கடனை அடைக்கலாம் நாம்.

 கைகுவித்து கும்பிடலாம்.

 கவிதை வடிக்கலாம்.- நினைவுப்

 பொழுதில் ஒன்றுகூடலாம்.

 ஏதோ ஒரு மலரை எடுத்து அவர்

 நினைவில் வைக்கலாம்.- ஆனால்

 இவை மட்டும் போதுமா அவர்

 நினைவை மீட்க..?

 இன்னும் இருள்கலையாதிருக்கும்

 எங்கள் தேசத்தின் விடுதலைக்காய்

 ஏதேனும் செய்வதுதான்

 இந்த அக்கினிக் குஞ்சுகளுக்கு

எம்மால் ஆன நன்றிகள் ஆகும்.

0 Responses to வீசும் காற்றுடன் கலந்தவர்கள் - ச.ச.முத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com