வடக்கில் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும் அங்குள்ள இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி தவறான பாதைகளில் நடக்க தூண்டும் சூழ்ச்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோஷலிச இளைஞர் சங்கம் குற்றஞ் சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் இன்னமும் இராணுவத்தின் ஆட்சியே இருக்கிறது. பாடசாலையில் மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளை வழங்க வேண்டுமென்றாலும், மாகாண ஆளுநரின் அனுமதி தேவை. வடக்கு மாகாண ஆளுநர் தன்னுடைய பழைய இராணுவ கால நிர்வாக முறையையே அங்கு நடைமுறைப்படுத்த முயல்கிறார். இது அசாதாரண நிலையைத் தோற்றுவித்துள்ளது. அங்கு சிவில் நிர்வாகத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோஷலிச இளைஞர் சங்கம் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. அதில், கலந்து கொண்டு பேசிய போது அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்கவே மேற்கொண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடத்தல் கைதுகள் தொடர்கின்றன. வடக்கு இளைஞர்களுக்கு இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள் என்கிற பெயரில் அங்கு மது மற்றும் போதையூட்டும் பொருட்கள் வழங்கப்பட்டு கெடுக்கப்படுகின்றனர். விபசாரம் அத்துமீறி நடைபெறுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மாறாக ஊக்குவிக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுகிறது. மோதல்களுக்குள் சிக்கி துன்பப்பட்ட மக்களை அரசாங்கம் காப்பாற்ற நினைக்கவில்லை. கெடுக்கவே நினைக்கிறது என்று அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.




0 Responses to வடக்கு இளைஞர்களுக்கு போதையூட்டும் சதித்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது: ஜே.வி.பி