Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டுபாயில் வணிக சம்பந்தமாக பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை வடிவமைப்பாளரான மார்ட்டே டெபோராஹ் டலேல்வ் எனும் 24 வயதுடைய நோர்வே பெண்மணி ஒருவர் கடந்த மார்ச் மாதம் இவருடன் பணி புரியும் ஒரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருந்தார்.

இச்சம்பவத்தை முறைப்பாடு செய்வதற்காக இவர் கடந்த வாரம் காவல் நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

இதன் போது அவரின் கடவுச்சீட்டு மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்த போலிசார் சட்டவிரோத பாலியல் உறவு கொண்டது, அல்கொஹோல் பாவித்தமை மற்றும் பொய் சொன்னமை ஆகிய குற்றங்களின் கீழ் இவர் மீதே வழக்குப் பதிந்து 16 மாத சிறைத் தண்டனை அளித்துள்ளனர். ஆனால் இவரைப் பலாத்காரம் செய்தவருக்கு வெறும் 13 மாத சிறைத் தண்டனையே விதிக்கப் பட்டுள்ளது. டுபாய் நீதித்துறையின் இச்செயல் நோர்வே மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சு ஆகியவற்றுக்குக் கோபமூட்டியதுடன் அவை இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதேவேளை டெபோராஹ் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பான நீதி விவாதம் செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. மேலும் தனக்கு வழங்கப் பட்ட தண்டனை மிகக் கொடூரமானதும் இதனால் தான் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர் விரைவில் தனக்கு உரிய நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தற்சமயம் இவர் சிறையில் அடைக்கப் படாமல் டுபாயில் உள்ள நோர்வேயின் சீமான்ஸ் (Seamans) நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். எனினும் இவர் சட்ட அடிப்படையில் டுபாய் அதிகாரிகளால் வேண்டப் படும் நபராக உள்ளார்.

மேலும் டுபாய் போலிசின் இந்த நடவடிக்கையை நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்பென் பார்த் எயிடே நீதிக்குப் புறம்பான செயல் என வர்ணித்துள்ளார். 5 ஸ்டார் ஹோட்டெல்கள், மிக உயர்ந்த கட்டடங்கள், சுற்றுலா மையங்கள் எனப் பல வெளிநாட்டு ஊழியர்கள் வேலை பார்த்து வரும் டுபாயில் அவர்களுக்கான சட்ட ஒழுங்கிலும் மிகுந்த அவதானம் தேவை என மனித உரிமை அமைப்புக்கள் கருதுகின்றன.

இதற்கு முன் டுபாயில் பல வெளிநாட்டினர் விடுதிகள் மற்றும் கடற்கரை எனப் பொது இடங்களில் கட்டிப் பிடித்தல் முத்தமிடல் ஆகிய செய்கைகளுக்காக கைது செய்யப் பட்டு மாதக் கணக்கில் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to டுபாயில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட நோர்வே பெண்ணுக்கு சிறைத் தண்டனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com