பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களைக் குறி வைத்து குவெட்டா நகரில் கடந்த இரு நாட்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் 54 பொது மக்கள் வரை கொல்லப் பட்டுள்ளனர்.
இத் தாக்குதல்கள் யாவும் உள்ளூர் அரச அதிகாரிகளையும் ஷியா முஸ்லிம்களையும் குறி வைத்து மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகின்றது. முஸ்லிம்கள் ரம்ழான் நோன்பு மாதம் முடிவுற்று ஈத் எனும் பண்டிகை அனுசரிக்கப் படும் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பலோகிஸ்டான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு அருகே நிறுத்தப் பட்டிருந்த காரின் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் இதில் 10 பேர் கொல்லப் பட்டதுடன் பள்ளிவாசலில் பிரார்த்தனைக்கு முன்னரே 30 பேர் காயமடைந்துள்ளனர். வியாழக்கிழமை குவெட்டாவில் போலிஸ் அதிகாரியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேளையில் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டதில் 30 பேர் கொல்லப் பட்டும் மேலும் 40 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் முன்னால் மாகாண சட்ட அமைப்பாளர் ஒருவரைக் குறி வைத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும் இதில் கொல்லப் பட்டவர்களில் அரைவாசிப் பேர் குறித்த அரசியல்வாதியின் மெய்ப் பாதுகாவலர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை அடுத்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய 8 பேரைப் போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் பாதுகாப்பும் பலப் படுத்தப் பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பலோகிஸ்தான் மாகாணத்தில் ஆயுததாரிகள் பஸ் வண்டி ஒன்றை வழிமறித்து அதிலிருந்த 13 பேரைக் கடத்திச் சென்றனர். இவர்களை அருகே உள்ள மலைப் பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.




0 Responses to பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்து குவெட்டா நகரில் 2 ஆவது தடவையாக தீவிரவாதத் தாக்குதல்:54 பேர் பலி