Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விமானத்தில் செல்லாது உலகின் உள்ள 201 நாடுகளையும் சுற்றிப்பார்த்த முதல் நபராக லிவர்பூலை சேர்ந்த கிரஹம் ஹோக்ஸ் சாதனை படைத்துள்ளார்.
2009, ஜனவரி 1ம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த ஹோக்ஸ் மொத்தம், 1,426 நாட்கள் (4 வருடங்கள்) 160,000 மைல்கள் பயணித்து இந்தச் சாதனையை படைத்திருக்கிறார். ஆனால் இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, எந்த ஒரு நாட்டுக்கும் இவர் விமானம் ஒன்றின் மூலம் வான்வழியாக பயணிக்கவில்லை.

பஸ், கார், டாக்ஸி, புகையிரதம், கப்பல் என பொது மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் ஒன்றிலோ அல்லது கால்நடையாகவோ என இப்படித்தான் இவருடைய போக்குவரத்து இருந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு 100 அமெரிக்க டாலர்கள்  செலவு செய்வது என்பது தான் இவரது பட்ஜெட்.

தென் அமெரிக்க நாடான உருகுவேயில் தனது பயணத்தைத்  தொடங்கி இறுதியாக உலகில் உருவான புதிய நாடான தென் சூடானில் வெற்றிகரமாக முடித்திருக்கும் கிரஹம் ஹோக்ஸ் தனது பயண அனுபவத்தை நேஷனல் ஜியோகிரோஃபி ஊடகத்திற்கு டாக்குமெண்டரியாக வழங்கியிருக்கிறார். அதற்கு முன்னர் 4 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவை உருவாக்கி இணையத்தில் உலாவவிட்டிருக்கிறார். இதில் அவர் சென்ற 201 நாடுகளையும் வரிசையாகச் சொல்கிறார்.

ஒரு கவ் போய் தொப்பியும், குறுந்தாடியுமாய் இவர் ஆரம்பித்த பயணத்தில், வடகொரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குள் நுழைவதற்கு கூட கஷ்டப்படவில்லையாம். ஆனால்,  தென் பசுபிக் நாடான நௌரு, மாலைதீவு, செய்ச்செல்ஸ் போன்ற நாடுகளுக்குச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டாராம்.
உலகின் அத்தனை நாடுகளையும் இப்படி கஷ்டப்பட்டு சுற்றிவந்த ஒருவராக கிரஹம் ஹோக்ஸ் இருப்பதால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது சமூக வலைத்தளங்களில்.  அதில் பலர் 'உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. ஒரு அற்புதமான அனுபவத்தை பெற்றிருக்கிறீர்கள்' என வாழ்த்துகிறார்கள். 

மேலும் இப்படி அத்தனை நாடுகளுக்கும் சென்று வரவேண்டும் எனத் துடிப்பவர்களுக்கு ஹோக்ஸ் வழிகாட்டியாகவும் இருக்கப் போகிறார்.

0 Responses to விமானத்தில் செல்லாது உலகின் 201 நாடுகளையும் சுற்றிப்பார்த்த முதல் நபர் இவர் தான்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com