வடகிழக்கு நைஜீரிய மாநிலமான போர்னோவில் போக்கோ ஹராம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடந்த இரு நாட்களில் மேற்கொண்ட இரு பாரிய தாக்குதல்களில் குறைந்தது 56 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 10 ஆம் திகதி மேற்கொள்ளப் பட்ட முதலாவது தாக்குதலில் 44 பேர் கொல்லப் பட்டனர்.இத்தாக்குதல் நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் இருந்து வடகிழக்கே 700 Km தொலைவில் அமைந்துள்ள கொடுங்கா என்ற நகரிலுள்ள பள்ளிவாசலுக்குள் மேற்கொள்ளப் பட்டது.
2 ஆவது தாக்குதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி கொடுங்கா நகருக்கு அண்மையில் உள்ள ந்கொம் கிராமத்தில் மேற்கொள்ளப் பட்டது. இதில் 12 பொது மக்கள் கொல்லப் பட்டனர். இவ்விரு தாக்குதல்களிலும் சுமார் நூற்றுக் கணக்கான தீவிரவாதிகள் இராணுவத்தினர் போல் சீருடை அணிந்து வந்து பொது மக்களைச் சராமரியாகச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மே மாதம் போர்னோ மாநிலத்தில் அவசர காலச் சட்டம் அமுல் படுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக் கிழமை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப் பட்ட போதும் மிகத் தாமதமாகவே வெளியுலகுக்கு இச்சம்பவம் தெரிய வந்துள்ளது. இதேவேளை இத்தாக்குதல்கள் குறித்து போக்கோ ஹராம் தலைவர் ஒரு வீடியோப் பதிவை வெளியிட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போக்கோ ஹராம் என்றால் மேற்குலகக் கல்வி பாவமானது எனப் பொருள் படும். இத்தீவிரவாதக் குழு 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஆயிரக் கணக்கான பொது மக்களைத் துப்பாக்கியால் சுட்டும் குண்டுத் தாக்குதலிலும் கொன்று குவித்துள்ளனர். இவர்களின் முக்கிய நோக்கமாக ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி ஸ்தானமான அபுஜாவில் ஆதிக்கம் செலுத்துவது அமைந்துள்ளது.
சுமார் 160 மில்லியன் பொது மக்களைக் கொண்டிருக்கும் நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.




0 Responses to நைஜீரியா பள்ளிவாசலிலும் கிராமம் ஒன்றிலும் தீவிரவாதிகள் கடும் தாக்குதல்: 56 பேர் பலி