Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாதென தமிழ் நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை தமிழ்த்  தேசிய முன்னணி வரவேற்றுள்ளது.

கடந்த 24-10-2013 திகதியன்று தமிழ் நாடு சட்டசபையில் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள கொமென்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை இந்தியப் பிரதமர் முற்றுமுழுதாக புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கேனும் அம்மாநாட்டில் அமையக் கூடாதென்றும், அத்துடன் தமிழர்கள் சுதந்திரமாகவும் சிங்களவர்களுக்கு இணையாகவும் இலங்கையில் வாழக்கூடிய சூழலை இலங்கை அரசு உருவாக்கும் வரையில் கொமென்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கை தற்காலிகமாக நீக்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ் நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

முதலமைச்சரும், அ.தி.மு.க தலைவியுமான மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் இத்தீர்மானத்தை முன்மொழிந்திருந்த நிலையில் மேற்படி தீர்மானம் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்ச்சியான கட்டமைப்புசார் இன அழிப்புக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் அந்த மக்கள் துணிந்து தமது உயிர்களைப் பணயம் வைத்து கடந்த 21-09-2013 அன்று இடம்பெற்ற தேர்தலின்போது இலங்கை அரசுக்கு எதிரான தமது உணர்வுகளையும், தமது விடுதலைத் தாகத்தையும் தமது வாக்குகளை பயன்படுத்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் நாட்டு சட்டசபைத் தீர்மானம் ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்களுக்கும் பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்களுடைய இனப்பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் அந்த சர்வதேச சமூகத்தை சரியாகக் கையாள்வதிலேயே எமது உரிமைப் போராட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது.

சர்வதேச சமூகம் என்கின்றபோது இந்தியாவும் மேற்கு நாடுகளும் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசை எமக்கு சதாகமான நிலைப்பாட்டை எடுக்கவைக்கக் கூடிய ஒரே சக்தி தமிழ்நாடு ஆகும்.

அந்த வகையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு அணிதிரண்டு ஈழத் தமிழர்களுடைய இன அழிப்புக்கு எதிராகவும், அவர்களது சுயநிர்ணய உரிமையின் அங்கீகாரத்திற்காகவும் தொடர்ந்து செயல்ப்பட்டால் இந்திய மத்திய அரசு அதற்கு செவிசாயக்க நிர்ப்பந்திக்கப்படும். அந்த வகையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை தீவிரப்படுத்திவரும் சிறீலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும்விதமாக நிறைவேற்றப்பட்டுள்ள மேற்படி தீர்மானத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேற்கின்றது.

இதற்கு மேலதிகமாக ஈழத்தமிழ் மக்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதுடன், சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்றும் அந்த அந்தஸ்த்தை இந்திய மத்திய அரசு முழுமையாக அங்கீகரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தையும், தொடரும் இன அழிப்பை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பின் கீழ் உடனடியாக இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற தீர்மானத்தையும் தமிழ்நாடு சட்டசபை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென உரிமையுடன் கோருகின்றோம்.

0 Responses to தமிழ்நாடு சட்டசபைத் தீர்மானத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அனந்தி சசிதரன் வரவேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com