Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போது நடப்பது சமாதான காலம் அல்ல, இது ஒரு இன சுத்திகரிப்பு காலம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளதாக சிங்கள செய்தி இணையம் செய்தி வெளியிட்டுளளது. யாழ். நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினால் காணி வழங்குவதற்கு காணி அளக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து நேற்று (15) மாலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள சிங்கள மக்களுடன் உரையாடும் போதே அவர் இக் குற்றசாட்டை முன்வைத்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

யாழ். நாவற்குழி பிரதேசத்தில் யு 32 வீதியில் உள்ள தேசிய வீடமைப்பு சபைக்கு சொந்தமான காணியில் கடந்த 3 வருடங்களாக வசித்து வரும் சிங்கள மக்களுக்கு அக்காணியை பகிர்ந்தளிப்பதற்காக வீடமைப்பு அதிகார சபையினால் காணி அளக்கப்பட்டது. அக்காணியையே அங்கு குடியேறியுள்ள 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக பகிர்ந்தளிக்கவே  அக் காணி அளக்கப்பட்டது.

அங்குள்ள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட காணிகள் அளக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியதால் குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கிஷோர் ஆகியோர் நேரில் சென்றிருந்தனர்.

இவர்கள் நேரில் செல்வதற்கு முன்னர் காணி அளக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து வீடமைப்பு அதிகார சபையினர் அங்கிருந்து சென்றிருந்தனர். ஆனாலும் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர் நின்றிருந்தனர். அவர்கள் இவர்களை கண்டதும் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அதனை அடுத்து அங்குள்ள மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தனர். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் முரண்பட செய்யவே அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை செய்கின்றது. இதனை மஹிந்த அரசாங்கம் மட்டுமல்ல சகல சிங்கள தலைமைகளும் விரும்புகின்றன.இது கூட ஒருவகை இனசுத்திகரிப்பே, தற்போது நடப்பது சமாதான காலம் அல்ல, இனசுத்திகரிப்பு காலம். தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதவாறு இருக்கும் நிலையில் இந்த அரசாங்கம் சிங்கள மக்களை தமிழர் தாயக பிரதேசங்களில் குடியேற்றி வருகின்றது.

இதனால் மீண்டும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் முரண் பட கூடிய சூழ்நிலையை உருவாக்குகின்றது என அவர் உரையாடி கொண்டு இருந்தபோது, தீடிரென அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் முரண்படும் விதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியதால் பாராளுமன்ற உறுப்பினர் மாகாண சபை உறுப்பினர் மற்றும் நகர சபை உறுப்பினர் ஆகியோர் அங்கிருந்து வெளியேறி சென்றதாக அச்செய்தியினில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தற்போதும் இனசுத்திகரிப்பே தொடர்கின்றது! சிறீதரன் கூறியதாக சிங்கள இணையம் செய்தி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com