Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் தலைநகர் கொழும்பில் கடந்த 15ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த 23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வுகள் இன்று 17ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)  பிற்பகலுடன் நிறைவுக்கு வந்தது.

இம்முறை மாநாட்டில் 51 நாடுகளே கலந்து கொண்டிருந்தன. அதில், 27 நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக, இந்தியா, கனடா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கவில்லை. மற்றயை நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி தலைமையில் மூன்று நாட்களாக தொடர்ந்து வந்த மாநாட்டில் அரச தலைவர்களுக்கிடையில் 98 விடயங்களுக்கு இணைக்கம் காணப்பட்டுள்ளது. அத்தோடு 15 யோசனைகள் அடங்கிய “கொழும்பு பிரகடனமும்“ வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்த நிலையில் இலங்கை அரசாங்கம் மிகுந்த அழுத்தங்களுக்கு மத்தியில் மாநாட்டை பொதுநலவாயத்துடன் இணைந்து நடத்தி முடித்திருக்கின்றது.

பிரித்தானியா போர்க்குற்ற விசாரணைகளை நீதியான முறையில் இலங்கையிடம் கோரியிருக்கின்றது. அது சாத்தியப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அழுத்தங்களை வழங்கி மாநாட்டில் பங்களித்துச் சென்றிருக்கிறது.

இந்தியவின் பிரதமர் மன்மோகன் சிங், இம்முறை மாநாட்டில் கலந்து கொள்ளாத பட்சத்திலும் இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு மிகுந்த அனுசரணையாகவே கருத்துக்களை முன்வைத்துள்ளார். அத்தோடு, நியூஸிலாந்தும் இணக்கமாக செயற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா இன்றைய இலங்கை இன்னமும் எல்லா விடயங்களும் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்று நடுநிலையான தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறது. சர்வதேச ஊடகவியலாளர்களின் இலங்கைக்கான அதீத வருகை இலங்கை அரசாங்கத்துக்கு பல விதங்களில் அழுத்தங்களையும், அபரிமிதமான கேள்விகளையும் எதிர்கொள்ள வைத்துள்ளது.

இதனிடையே, இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கு உலக நாடொன்றில் தலைவர் பொதுநலவாய நாடுகளின் போது விஜயம் செய்தார். அந்த விஜயத்தினை மேற்கொண்டவர் 1949ஆம் ஆண்டு வரையில் இலங்கையை தன்னுடைய ஆளுகைக்குள் வைத்துக் கொண்டிருந்த பிரித்தானியாவின் தற்போதைய பிரதமரான டேவிட் கமரூன். அவரின் யாழ் விஜயம் சர்வதேச ரீதியில் முக்கியத்துடன் கவனிக்கப்பட்டது.

கொழும்பு பொதுநலவாய மாநாட்டினால் களைகட்டியிருந்த போது வடக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களினால் கவனம் பெற்றிருந்தது. இப்படி, பல்வேறு அவதானிப்புக்களுடன் இம்முறை பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நிறைவுக்கு வந்திருக்கிறது.

பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் பல்வேறு காலகட்டங்களில் இருந்த 53 நாடுகளை ஒருங்கிணைத்தே பொதுநலவாயம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்களுக்கிடையிலான மாநாடு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.

22வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை அவுஸ்திரேலியா 2011ஆம் ஆண்டு நடத்தியது. 23வது மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது. இந்த நிலையில் 24வது மாநாட்டை நடத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த, மொரீஷியஸ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக குற்றஞ்சாட்டி இம்முறை இடம்பெற்ற மாநாட்டை புறக்கணித்ததுடன், அடுத்து மாநாட்டை நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பையும் நிராகரித்தது.

இதனையடுத்து, 24வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை நடத்துவதற்கான வாய்ப்பினை மோல்டா பெற்றுக்கொண்டுள்ளது. அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பையும் பொதுநலவாயம் இன்று வெளியிட்டுள்ளது.

0 Responses to பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013: கொழும்பு பிரகடனத்துடன் நிறைவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com