Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொமன்வெல்த் மாநாட்டை இலங்கை அரசாங்கம், கொழும்பில் பெரும்பாடுபட்டு நடத்தியது. இந்த மாநாட்டை நடத்துவதற்காக இலங்கை பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

அதுபோலவே, இந்த மாநாட்டை நடத்துவதற்காக, இலங்கை விட்டுக் கொடுப்புகளை செய்திருந்தாலும், கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளைப் பேணிக் கொள்வதிலும் கூடவே விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.

சனல்-  4 குழுவினர் தடுக்கப்பட்ட விவகாரம், ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை என்றும் பல்வேறு விடயங்களில் இலங்கை அரசாங்கம் கொமன்வெல்த் அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் மூலம், இறுதிப் போரில் நடந்த பல போர்க்குற்றங்கள் தொடர்பான வீடியோக்களையும், படங்களையும் வெளியிட்டதன் மூலம் சனல் - 4 தொலைக்காட்சிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒரு பனிப்போர் பல ஆண்டுகளாகவே நடந்து வந்திருந்தது.

இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் எவரையும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், புலிகளின் பணத்துக்காக செயற்படுபவர்கள் என்று முத்திரை குத்திப் பழக்கப்பட்டு விட்டது இலங்கை அரசாங்கம்.

இந்தநிலையில், சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்திய சனல்- 4 மீதும், அரசாங்கம் அத்தகைய குற்றச்சாட்டை சுமத்தியது ஆச்சரியமானதல்ல.

போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி வந்த சனல்– 4 மீது கடும் கோபத்தில் இருந்த அரசாங்கம், அதன் ஊடகவியலாளர்களை இலங்கைக்குள் வரவிடாமல் இறுக்கத்தைப் பேணிவந்தது.

ஆனால், கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் பொறுப்பு இலங்கையிடம் வந்தபோது, சனல்– 4 தொலைக்காட்சிக்கு மட்டும் அனுமதி மறுத்தால், அது கொமன்வெல்த்தின் கோட்பாடுகளுக்கு விரோதமாகி விடும் என்பதைப் புரிந்து கொண்டே, சனல்– 4 குழுவினர் கொழும்பு வர அனுமதி வழங்கியது.

சனல்- 4 குழுவினருக்கு கொழும்பு அனுமதி வழங்கியதை இலங்கையின் உச்சபட்ச ஊடக சுதந்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.  இதனை, உச்சக்கட்டமான நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இலங்கையின் ஊடக சுதந்திர நிலை எந்த நிலையில் உள்ளதென்பதை, வெளியிலுள்ள எவரும் வந்து கூறவேண்டியதில்லை.

இத்தகைய நிலையில் சனல் – 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஊடக சுதந்திரத்தின் உச்சக்கட்டம் என்பது எந்தளவுக்கு பொருத்தமானது?

சனல் – 4 குழுவுக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது ஒரு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே தவிர, விரும்பிக் கொடுத்த அனுமதியல்ல.

எங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ செய்தியாளர் சந்திப்புகளில் கூறினாலும் – எவரும் வரலாம், எங்கும் சென்று பார்வையிடலாம் என்று உத்தரவாதம் கொடுத்தாலும், சனல் –4 குழுவினருக்கு அத்தகைய சுதந்திரத்தை அரசாங்கம் அளிக்கவில்லை.

சனல் – 4 குழுவினருக்கு அனுமதியும் கொடுத்து விட்டு, அவர்களை முடக்கிப் போடுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டே செயற்பட்டுள்ளது என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.  ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் பிடுங்கிக் கொள்ளும் உத்திதான் சனல் – 4 விடயத்தில் கையாளப்பட்டது.

சனல் - 4 குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கி, வெளியே வந்தபோதே அவர்களை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் தான் வரவேற்றனர்.  அவர்களை சமாளித்துக் கொண்டு, கொழும்பு சென்ற குழுவினர் மறுநாள் கிளிநொச்சி செல்வதற்காக ரயிலில் சென்ற போது அனுராதபுரத்தில் வழிமறித்து போராட்டம் நடத்தப்பட்டது.

பொலிஸார் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி, கிளிநொச்சி அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, கொழும்புக்கே கொண்டு சென்றனர்.

குறிப்பிட்ட நேரத்தில், சனல் 4 குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் வரும் தகவலையும், ரயிலில் அவர்கள் பயணம் செய்யும் தகவலையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு யார் கொடுத்தது என்ற கேள்வி எழுந்தது.

தாம் கொழும்பில் வந்திறங்கியதில் இருந்தே புலனாய்வாளர்கள் தம்மைப் பின்தொடர்வதாக சனல் – 4 குழுவினர் கூறியிருந்தனர்.

ஆக, சனல் – 4 குழுவினருக்கு கொழும்பு வர அனுமதித்த அரசாங்கமே, அவர்களை வடக்கிற்குச் செல்ல விடாமல் போராட்டக்காரர்கள் மூலம் முடக்கியது.

இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் அரசாங்கத்துக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

கலம் மக்ரே இலங்கை வந்து நிலைமைகளைப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளட்டும் என்று கூறிய அரசாங்கம், அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

சனல் – 4 போன்ற ஊடகவியலாளர்களும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் வடக்கிற்கு செல்வதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் பலாலி – இரத்மலானைக்கு இடையிலான விமான சேவைகளையும் கடந்த ஒரு வாரமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

சனல் - 4 குழுவினருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள், பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு என்று எல்லாமே, சனல் – 4 குழுவினர் கொமன்வெல்த் மாநாட்டுக்கு அப்பால் செயற்படவோ நகரவோ முடியாதபடி போடப்பட்ட திட்டமாகவே கருதப்படுகிறது.

ஒரு பக்கத்தில் கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளின் பெறுமானங்களை கட்டிக் காப்பதாக, கூறிக் கொள்ளும் அரசாங்கம், ஊடகங்கள் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை.

ஜனாதிபதியை நெருங்க விடாமல் பி.பி.சி. செய்தியாளர்கள் தடுக்கப்பட்டது இதற்கு இன்னோர் உதாரணம்.

அதுபோலத் தான், காணாமற்போனோரின் உறவினர்கள் கொழும்பில் போராட்டம் நடத்தச் சென்றபோது வழி மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவையெல்லாமே, அரசாங்கம் இந்த மாநாட்டை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கும், கொமன்வெல்த் பண்புகளை மதிக்கவில்லை என்பதற்கும் சான்றுகளாகவே அமைந்தன.

ஒரு சர்வதேச மாநாட்டை நடத்த ஆசைப்பட்ட அரசாங்கம், பாரபட்சமின்றி ஊடகங்களையும் ஜனநாயக பண்புகளையும் மதிக்கும் அளவுக்கு செயற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அரசாங்கத்தினால் அவ்வாறு இருக்க முடியவில்லை. ஒன்றையும் தாம் மறைக்கவில்லை என்று அரசாங்கம் கூறு வது சரியானால், ஊடகவியலாளர்களின் சுயாதீனத்தை எதற்காகத் தடுக்க வேண்டும்?
இந்தக் கேள்விதான் இன்று உலகெங்கும் எழுப்பப்படுகிறது.

சனல் – 4 குழுவினர் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுத்திருந்தால் கூட, இந்தளவுக்குப் பெரிய விவகாரமாக மாறியிருக்காது. அனுமதியைக் கொடுத்து, கொழும்புக்கு அழைத்து விட்டு, அவர்களை அடக்க முனைந்தது தான், இலங்கைக்கு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் இதுபோன்ற பல விடயங்களில் இலங்கை அரசாங்கம் தனது தலையிலேயே மண்ணை வாரிக் கொட்டியுள்ளது.

நன்றி
கபில்

0 Responses to கொமன்வெல்த் பண்­பு­களை மீறும் சனல் 4 மீதான நட­வ­டிக்­கைகள்! - கபில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com