Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலட்சிய வேட்கைக்காய் உறுதியுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழத்தின் தேசிய வீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் யேர்மனியின் டோர்ட்முன்ட் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்துடனும் உணர்வு பூர்வமாக உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லத்துடனும் நிகழ்வுகள்  ஆரம்பமாகின. மண்டபத்தின் ஒருபுறத்தில்  மாவீரர் களின் உறவுகள் மதிப்பளிக்கப்பட்டனர். தமிழீழ மக்களை செயற்பாட்டாளர்கள் வரவேற்றபடி இருக்க  சரியாக 12:49 மணிக்கு பங்குத்தந்தை அருட்திரு albert koeln அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர்  அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து கொடிப்பாடல் ஒலித்து ஓய்ந்தது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாயக நேரத்திற்கு ஒத்த ஐரோப்பிய நேரமான 13.37 இற்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரை நாட்டுப்பற்றாளர் ஒருவரின் மகளும் இரு மாவீரர்களின் சகோதரியுமான திருமதி குமுதா அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதன்பின்னதாக காலத்திற்குப் பொருத்தமானதாக அமைந்த  ஏற்கனவே வெளியிடப்பட்ட தேசியத்தலைவரின் உரையிலிருந்து ஒரு பகுதி ஒலித்தது. அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார பூர்வ மாவீரர் நாள் அறிக்கை யேர்மனிய மொழியிலும் தமிழ் மொழியிலும் வாசித்தளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவீரர் நினைவுகள் சுமந்தபடி கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இசைவணக்கம். கவிவணக்கம், உரை, நாடகம், நாட்டிய நாடகம் ஆகியன நடைபெற்றன. மாவீரர் ஈகம் சுமந்தபடி எமது போராட்டச் செயற்பாடுகள் அமையவேண்டும் என தனது சிறப்புரையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த  திரு. சத்தியதாசன் அவர்கள் தனது சிறப்புரையில் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் விடுதலைக்காக ஆற்ற வேண்டிய பணியினையும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இறுவட்டு வெளியீடு இடம்பெற்றது. திரு சத்தியதாசன் அவர்கள் இறுவட்டினை வெளியிட்‌டு வைக்க யேர்மனிவாழ் உறவுகள் இருவர் பெற்றுக்கொண்டார்கள். அதன் பின்பதாக யேர்மனியில் தமிழாலயங்களுக்குள்ளே இடம்பெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளுக்கான மதிப்பளிப்புகள் இடம்பெற்றன. சரியாக 17:30 மணியளவில் மாவீரர் நினைவு சுமந்த நெருப்புச்சுழி என்ற நாட்டிய நாடகம் யேர்மனிவாழ் நடன ஆசிரியர்களின் தொகுப்பில் அரங்கேற்றப்பட்டது. நவரசங்களையும் வெளிப்படுத்தி நூற்றுக்கு மேற்பட்ட இளையோர்கள் சிறப்பாக நடனம் புரிந்தனர். 
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் பாடப்பட மக்களும் எழுந்து கரவொலி எழுப்பினர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கொட்டொலியோடு 18:45 மணியளவில் தேசியக்கொடி இறக்கி வைக்கப் பட்டு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

0 Responses to யேர்மனி டோட்முண்ட் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் - 2013 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com