Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி மாநில முதல்வராக எதிர்வரும் வியாழக்கிழமை (டிச.26) அன்று டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார். 15 நாட்களாக தொடர்ந்து வந்த இழுபறியின் பின்னர் ஒரு வழியாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, 8 இடங்களைப் பிடித்துள்ள காங்கிரஸின் ஆதரவோடு, டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவெடுத்து விட்ட  நிலையில் இன்று கூடிய ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் நிர்வாக குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்விந்த்  கெஜ்ரிவால், டெல்லியின் துணை நிலை ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் அதன் பின்னர் டெல்லியின் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 'அர்விந்த் கேஜ்ரிவால் மாநில முதல்வராக பதவியேற்கவில்லை. ஒரு சாதாரணப் பொதுமகனே டெல்லி முதல்வராகப் போகிறான்' எனவும் தன்னைப் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது டெல்லி லெப்டினண்ட் ஆளுனர் நஜீப் ஜுங் அர்விந்த் கேஜ்ரிவாலின் முடிவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவிக்கவுள்ளார்.  இந்நிலையில்தான் தம்மை உலகத்துக்கு அடையாளம் காட்டிய, மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் துவக்க விழா நடத்திய டெல்லி ஜந்தர் மைதானத்தில், கெஜ்ரிவால் பதவி ஏற்றுக்  கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறத் தவறிய நிலையில் ஆம் ஆத்மி கட்சி முதலில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே விருப்பம் கொண்டிருந்தது. ஆனால் தமக்கு வாக்களித்த பொதுமக்களிடமே அபிப்பிராயம் கேட்ப்பொம் என இணையம், எஸ்.எம்.எஸ் மூலமாக கடந்த 10 நாட்களாக மாபெரும் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், 74%வீதமான மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லியில் ஆட்சி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே ஆம் ஆத்மி கட்சிக்கும் தமது ஆதரவைத் தர முன்வந்தன. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு தனித்தனியாக 18 நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் அனுப்பிய அர்விந்த் கேஜ்ரிவால் இவற்றை ஏற்றுக்கொள்ளத் தயார் எனில் உங்களில் ஒருவரின் ஆதரவைப் பெறத் தயார் என அறிவித்தார்.

இவற்றில் பெரும்பாலான நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி ஏற்றுகொண்டதால் காங்கிரஸின் ஆதர வுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்க்ஷித், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், தற்போது ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய காலம் வந்துவிட்டது எனக் கூறியுள்ளார். மேலும் வெளியிலிருந்து தனது ஆதரவு எப்போதும் ஆம் ஆத்மி கட்சிக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் ஆதரவைப் பெற்றதற்கு பாஜக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. என்னதான் இருந்தாலும் ஆட்சி அதிகார ஆசையில் காங்கிரஸின் ஆதரவையே ஆம் ஆத்மி பெற்றுக் கொண்டுவிட்டது.  இது ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் எனக் கூறியுள்ளது.

கேஜ்ரிவாலுக்கு மதுரையில் பிறப்புச் சான்றிதழ் சர்ச்சை?

இதேவேளை மதுரையில் அர்விந்த் கேஜ்ரிவாலின் போலிப் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அர்விந்த் கேஜ்ரிவால் மதுரையில் பிறந்தவர் என்றும் ஆனால் அவர் இரண்டு இடத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும் இதை எதிர்த்து வழக்குத் தொடரப்போவதாக மதுரையை சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதாவது 27.12.1970ல் கேஜ்ரிவால் பிறந்ததாகவும், அவருடைய தந்தை பெயர் ராம்ஜிராவ் கெய்வாக்ட், தாயார் பெயர் கீதாதேவி என்றும், நிலையான வீட்டு முகவரி புது டெல்லி என்றும் சான்றிதழில் உள்ளது. அதேசமயம், குழந்தை பிறப்பின்போது பெற்றோரின் முகவரி எண்: 27, கற்பகம் நகர், மதுரை -7 என்று உள்ளது. இது சட்டப்படி தவறானதாகும். எனவே இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரவுள்ளோம் என்று கூறினர். கேஜ்ரிவால் எங்கு பிறந்தார் என்பது தெளிவுபடுத்தப்படும் வரை அவரை முதல்வராக பதவியேற்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரவுள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

0 Responses to "முதல்வராக பதவியேற்பது அர்விந்த் கேஜ்ரிவால் இல்லை, ஒரு சாதாரணப் பொதுமகனே"

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com