தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் பற்றி சில திறனாய்வுகள் வந்து கொண்டுள்ளன. அவை பற்றி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைபாட்டைத் தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழினத்தின் பொதுச் செல்வம். - கல்லில் செதுக்கப்பட்ட தமிழினத்தின் தழும்புகள். - கால காலத்திற்கும் காக்கப்படவேண்டிய இனக் கருவூலம். இக்கலைப் படைப்பை நிறுவித் தந்த உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்களுக்குத் தமிழினம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
அதே வேளை முற்றம் குறித்தும் முற்றத் திறப்புவிழா குறித்தும் செய்யப்படும் சில திறனாய்வுகள் குறித்தும் பேசவேண்டும்.
முற்றத்தின் திறப்பு விழாவிற்கு பாரதிய சனதாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர்களைச் சிறப்புரையாற்ற அழைத்தது தவறென்று நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள். தமிழீழம் - விடுதலைப் புலிகள் ஆகியவை குறித்த நிலைபாட்டில் காங்கிரசிற்கும், பா.ச.கவிற்கும் இடையே கருதத்தக்க வேறுபாடு எதுவு மில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியான இராசபட்சேயை இந்தியாவுக்கு அழைத்துச் சிறப்புச் செய்ததிலும் - இலங்கைக்குச் சென்று அக்கொலைகாரனைப் பாராட்டியதிலும் காங்கிரசுத் தலைமைக்கும் பா.ச.க. தலைமைக்கும் இடையே வேறுபாடில்லை. அத்துடன் பா.ச.க., இந்து மக்கள் கட்சி போன்றவை பார்ப்பனியப் பாசறையான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குடும்ப உறுப்புகள்! எனவே பா.ச.க., இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களை முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் சிறப்புரை ஆற்ற அழைத்திருக்க வேண்டியதில்லை என்பது த.தே.பொ.க. நிலைபாடு.
ஆனால் அந்த ஒரு காரணத்திற்காக விழாவைப் புறக்கணிப்பதோ, அதை மிகைப்படுத்திக் குற்றஞ்சொல்லி நினைவுச் சின்னத்தின் முகாமைத் தன்மையைக் கொச்சைப்படுத்துவதோ, இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் ஈகத்தைப் புறந்தள்ளிவிட்டு, உள்ளூர் மனக்கசப்புகளை உலவ விடுவதாக அமையும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் அவர்களை விழாவில் சிறப்புரை ஆற்ற அழைக்காதது பற்றி பேசப்படுகிறது. முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் உரையாற்ற தோழர் திருமாவை அழைத்திருக்க வேண்டும் என்பது த.தே.பொ.க.வின் கருத்து!
2008 - 2009 ஆம் ஆண்டுகளில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க - போர் நிறுத்தம் கோரி இந்திய அரசை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்திய அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கடும் போராட்டங்களையும் நடத்தியது. அதற்காக அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சற்றொப்ப 25 தோழர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் போட்டார். மற்றுஞ் சிலரைத் தேசியப்பாது காப்புச் சட்டத்தில் போட்டார். இன்றும் ஈழத்தமிழர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல போராட்டங்களை நடத்தி வருகிறது.
காங்கிரசு - தி.மு.க. கூட்டணியில் திருமா இருக்கிறார், இராசபட்சேயுடன் கைகுலுக்கினார் என்பதற்காக அவரைப் புறக்கணித்திருக்க வேண்டியதில்லை.
கலைஞர் கருணாநிதியை விழாவில் சிறப்புரை ஆற்ற ஏன் அழைக்க வில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் அடுத்து, சோனியா காந்தியை ஏன் அழைக்கவில்லை என்றும் கேட்கக்கூடும். எனவே இதற்கெல்லாம் விடை சொல்லத் தேவை இல்லை. அழைக்கப்படாததற்கான காரணங்கள் ஊரறிந்த உண்மைகள்!
அடுத்து, முள்ளிவாய்க்கால் முற்ற மண்டபத்தில் பெரியார் படம் வைக்கப்படாதது பற்றிய குற்றச்சாட்டு!
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நக்கீரன் இதழில் (2013 நவம்பர் 13-15) பின்வருமாறு எழுதியுள்ளார்.
“உண்மைதான்’’. முள்ளிவாய்க் கால் முற்றத்தில் இடம் பெற்றுள்ள தமிழகத் தலைவர்கள் படவரிசையில் பெரியாருக்கு இடமில்லாமல் போய்விட்டது. கலைஞர் படத்தை வைக்கும் அளவுக்கு அவர்களிடம் நேர்மை உணர்வு இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் திட்டமிட்டே பெரியாரின் படத்தையும் மறைப்பது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி!’’
படங்கள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளாமலே சுபவீ சீற்றம் கொள்கிறார். அங்கு வைக்கப் பட்டிருப்பவை சுபவீ சொல்வது போல் “தமிழகத் தலைவர்களின்’’ படங்கள் அல்ல. மறைந்த தமிழறிஞர்களின் படங்கள்! பெரியார் தமிழகத் தலைவர்களில் முகாமையானவர் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை. ஆனால் அவர் தமிழறிஞர் அல்லர். அரசியல் தலைவர்களாகவும் தமிழறிஞர்களாகவும் இருந்த தலைவர்கள் சிலரின் படங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அறிஞர் அண்ணா, பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவா ஆகியோர் படங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அறிஞர் அண்ணா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், திரைக்கதைகள் தீட்டியவர். இலக்கியச் சொற் பொழிவுகள் ஆற்றியவர். தோழர் ஜீவா கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், இலக்கியச் சொற்பொழிவுகள் வழங்கியவர். இவ்வாறான இலக்கியப் படைப்புகள் செய்தவர் அல்லர் பெரியார். எனவேதான் அங்கு பெரியார் படம் வைக்கப் படவில்லை.
திரு பழ.நெடுமாறன் அவர்கள், இன்றும் தம் தலைவராகக் காமராசரை மதிக்கிறார்; போற்றுகிறார். ஆனால் காமராசர் படம் அங்கு வைக்கப்படவில்லை. காரணம் படம் வைக்கும் அளவுக்குக் காமராசர் தகுதியுடைய தலைவர் அல்லர் என்பதன்று. அவர் இலக்கியப் படைப்பு எதுவும் வழங்கியவர் இல்லை என்பதுதான்!
இயல், இசை, நாடகம் (திரைத் துறை உட்பட) என்ற முத்தமிழ்த் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் படங்கள் அங்கு வைக்கப் பட்டுள்ளன. அந்த வகையில்தான் நடிகவேள் எம்.ஆர்.இராதா படம் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
“சாதிப்பட்டங்கள் தாங்கிய பெரியவர்களின் படங்களெல்லாம் அங்கு இடம் பெற்றிருக்க சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரின் படத்திற்கு இடமில்லாமல் போய் விட்டது. ஒரு வேளை அதுதான் காரணமோ என்னவோ’’என்று சுபவீ மேற்படி இதழில் எழுதியுள்ளார்.
அக்காலத் தமிழறிஞர்கள் சிலர் பெயருடன் இயற்பெயர் போல் சாதிப்பெயர் ஒட்டிக் கொண்டுள்ளது. அந்த ஒட்டுப் பெயரை நீக்கி விட்டால் அவர்கள் யாரென்று தெரியாத நிலை உள்ளது. எடுத்துக் காட்டாக ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களை சேது என்று மட்டும் குறித்தால் இக்கால இளையோர் அவரை அடையாளம் காண முடியுமா? அ.சிதம்பரநாதன் செட்டியாரை, சிதம்பரநாதன் என்று குறிப்பிட்டால் அவரை அடையாளம் கண்டு கொள்வதில் குழப்பம் வருமல்லவா? அவரை, கற்றோர் உலகம் ஏ.சி. செட்டியார் என்றே அறிந்திருக்கிறது. சாதிப்பெயர்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சாதிவாதத்தை ஏற்பதற்காககத்தான் சாதிப் பெயர்கள் போடப் பட்டுள்ளன என்ற தமது குற்றச்சாட்டை, சுபவீ ஓர் ஐயம் போல் கிளப்பிவிடுவதில் வாதத்திறமை வெளிப்படவில்லை. வன்னெஞ்சம்தான் வெளிவந்திருக்கிறது. “சாதிப் பெயர் தாங்கிய பெரியவர்கள்’’ என்று சுபவீயே அவர்களை மதிப்போடு குறிப்பிடுகிறார். சாதிப் பெயர் தாங்கிய சிறியர் அல்லரே அன்னார்!
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.மாதவன் நாயரை டி.எம். நாயர் என்று வீரமணி, சுபவீ உள்ளிட்ட திராவிடத் தலைவர்கள் அழைப்பார்கள். தமிழறிஞர்கள் சேதுப்பிள்ளை, சிதம்பரநாதன் செட்டியர் என்றால் இவர்களுக்கு எரிச்சல் வந்துவிடுகிறது. நாயர் என்பது திராவிட மலையாள சாதி அல்லவா! அது “பகுத்தறிவானது’’; “முற்போக்கானது’’
சாதிவாதத்தைத் தீவிரப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக உயர்சாதிக் கூட்டணி அமைத்துச் செயல்படும் மருத்துவர் இராமதாசு அவர்களைத் தம்முடன் கூட்டணி சேர வருந்தி வருந்தி அழைக்கிறார் கலைஞர் கருணாநிதி. மாநிலங்களவைத் தேர்தலில் தம் மகள் கனிமொழிக்கு வாக்களிக்குமாறு வேண்டி பா.ம.க. தலைவர்களுக்குத் தூதுவிட்டார் கலைஞர் கருணாநிதி. ஏதோ ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் தி.மு.க.வும் அதன் பரப்புரையாளர் சுபவீயும் நிற்பதுபோல் பேசுவது அறமா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோல் “பெரியார் படம் வைக்கப்படாததற்கு அவர் சாதிகளை எதிர்த்ததுதான் காரணமோ’’ என்று ஊகம் கிளப்பிவிடுவதும் ஞாயமா?
“கலைஞர் படத்தை வைக்கும் அளவுக்கு அவர்களிடம் நேர்மை உணர்வு இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம்’’ என்கிறார் சுபவீ (மேற்படி நக்கீரன்)
சுபவீ கூறும் “நேர்மை’’ அவர் உட்பட யாருக்கும் வேண்டாம். ஏனெனில் அங்கு “மறைந்த தமிழறிஞர்கள்’’ படங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர்கள் படம் எதுவும் வைக்கப்படவில்லை. “கலைஞர் விசுவாசிகள் சங்கப்’’ பொதுச் செயலாளர் போல் தமது பயணத்தை அமைத்துக் கொண்ட பிறகு சுபவீ அவர்களுக்குப் பல தடுமாற்றங்கள் வந்து விட்டன! அச்சங்கத்தின் தலைவர் போல் ஆசிரியர் வீரமணி இருக்கிறார்.
திருச்சியில் 9.11.2013 அன்று திராவிடர் கழகம் “திராவிடர் எழுச்சி மாநாடு’’ நடத்தியது. தமிழர் என்றாலே ஆசிரியர் கி. வீரமணி, சுபவீரபாண்டியன் ஆகியோர்க்கு ஒவ்வாமை வந்து விடும். தமிழ் இனத்தின் மீது ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டதோ! தமிழர் திருநாளாக இது வரை கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் விழாவைக் கடந்த இரண்டாண்டுகளாக “திராவிடர் திருநாள் விழா’’ என்று கொண்டாடுகிறார் வீரமணி.
திராவிடர் திருநாள், திராவிடர் எழுச்சி மாநாடு என 'திராவிட'த்தைக் கொண்டாடும் ஆசிரியர் கி.வீரமணி, தமக்கு மட்டும் 'தமிழர்' தலைவர் என பட்டமளித்துக் கொள்வது எந்த வகையில் ஞாயம்? மற்றவர்கள் தமிழர் என்றால் பாய்வதும், தாம் மட்டும் தமிழர் பட்டம் சூட்டிக் கொள்வதும் பகுத்தறிவுதானா?
திருச்சியில் நடந்த “திராவிடர் எழுச்சி மாநாட்டில்’’ பேசிய சுபவீ இது திராவிடர் எழுச்சி மாநாடு, தமிழர் எழுச்சி மாநாடாக இருந்திருந் தால் அதில் பொன். இராதா கிருஷ்ணனும், அர்ச்சுன் சம்பத்தும் இடம் பெற்றிருப்பார்கள். இங்கே செகத்கஸ்பரும், பேராசிரியர் காதர்மொய்தீனும் இடம் பெற்றிருக்க மாட்டார்கள்”என்று பேசியுள்ளார். (“உண்மை’’ 2013 நவம்பர் 16-30 இதழ்) முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்புவிழா பற்றி பேசிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் பேராசிரியர் ஜவஹிருல்லா, ஹென்றிடிபேன், இன்குலாப் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பது சுபவீக்குத் தெரியுமா தெரியாதா? பேரா. ஜவஹிருல்லா வரவில்லை. மற்ற இருவரும் வந்து அவரவர் அரங்கத்தில் கலந்து கொண்டனர். தமிழினத்தின் மீது உங்களுக்குக் காழ்ப்புணர்ச்சி இருந்தால் அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள். கிறித்துவர்கள் - இசுலாமியர்கள் தமிழ்த் தேசிய மேடையில் இடம் பெற முடியாது என்றும் அதனால்தான் முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் அவர்கள் இடம் பெற வில்லை என்றும் விவரப் பிழையாகக் கூறி கோயபல்சின் கொள்ளுப் பேரர் ஆகாதீர்கள்.! அதே போல் புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமியை முள்ளிவாய்க் கால் முற்றத் திறப்புவிழாவிற்கு அழைக்கவில்லை என்று நக்கீரனில் எழுதினார். மருத்துவர் கிருட்டிணசாமி அழைக்கப்பட்டார். அவர் பெயர் அழைப்பிதழில் உள்ளது. அவர் வராததற்குக் காரணம் மொரீசியசில் 8.11.2013 அன்று நடந்த ஈழத் தமிழர் ஒன்று கூடலுக்கு அவர் போனதுதான்! தமிழர் என்றால்- அதில் கிறித்துவர் இசுலாமியர் வர மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியம் ஒரு போதும் சொல்ல வில்லை.
தமிழ்நாட்டில் திராவிடர் என்று இயக்கம் வைத்துக் கொண்டு தெலுங்கர், கன்னடர்,மலையாளிகளுக்காகப் பரிந்து பேசுவதும், தமிழர்களை இழிவுபடுத்துவதும் என்ன ஞாயம்? பழைய காலம் போல் திராவிடப் பல்லவியைத் தமிழ் இளைஞர்கள் ஒப்பவில்லை என்பதைக் கண்டு கொண்ட சுபவீ, “திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை’’ என்று ஒட்டுப் போட்டுத் தமிழரைச் சேர்த்துள்ளார். தமிழர் மண்ணில் வாழ்ந்து கொண்டு தமிழர்களுக்கு ஒட்டுத் திண்ணையில் இடம் ஒதுக்குகிறார். ஏன் திராவிடர் பேரவை என்று வைத்துக் கொள்ள வேண்டியது தானே! வீரமணி - சுபவீ அகராதியில் மாற்றுக் குறையாத தங்கம் “திராவிடர்’’ என்ற சொல்; மானக்குறைவான சொல் “தமிழர்’’!
மேற்படி திருச்சி மாநாட்டில் பேசிய செகத்கஸ்பர் “மதவாத சக்திகள் தமிழ்த் தேசியத்தில் அடைக்கலம் கொண்டுள்ளன’’ என்று பேசியுள்ளார்.
ஒரே நேரத்தில் கிறித்துவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இரண்டகம் செய்தவர் செகத்கஸ்பர். யூதாஸ் கூட கடைசி நேரத்தில் தனது துரோகத்திற்காக வெட்கப் பட்டு எதிரி கொடுத்த வெள்ளிக் காசுகளை வீதியில் எறிந்து காரித் துப்பினான். யூதாஸ் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட செகத்கஸ்பருக்குக் கிடையாது! அவர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் பங்கு பெற்றது பொருத்தமே!
பா.ச.க.வின் திசைப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காத செம்மாந்த கொள்கைப் பட்டாளத்தின் அணி வகுப்பில்தாம் இருப்பது போல் இப்பொழுது கித்தாப்பு பேசுகிறார் சுபவீ!
அந்தக் காலத்தில் அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் பற்றப், பரதன் வெண்குடை கவிக்க பாக்கியுள்ள இருவரும் கவரி வீச இராமனுக்கு முடி சூட்டுவிழா நடந்ததாகக் கம்பர் கூறுகிறார். இந்தக் காலத்தில் அட்டல்பிகாரி வாஜ்பாயி அரியணையை நவீன அனுமனாக மாறி கருணாநிதி அல்லவா தாங்கினார். அந்தக் கால அனுமன் கைமாறு கருதாமல் இராமனுக்கு அரியணை தாங்கினான். இந்தக் கால அனுமன் கருணாநிதியோ கண்மணி மாறனுக்கு அரண்மனையில் சேவகம் வாங்குவதற்காக ஆரியத்துக்கு அரியணை தாங்கினார். ஆர்.எஸ். எஸ்.சின் அரசியல் பிரிவான பா.ச.க.வின் அமைச்சரவைக்கு ஆறு ஆண்டுகள் ஆதரவளித்து, ஈழத்துக் கருணாவைப் போல், டக்ளஸ் தேவானந்தாவைப் போல் ஆண்டையின் அதிகாரத்தில் பங்கு வாங்கிக் கொண்டது தி.மு.க.
தி.மு.க.வின் இந்தத் துரோகங்கள் பற்றித் துளி உறுத்தல் கூட வீரமணிக்கும் சுபவீக்கும் இல்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல், தி.மு.க.வின் பா.ச.க.பிணைப்புப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “கவலைப்படாத கலைஞர் விசுவாசிகள் சங்கம்’’ நடத்துகிறார்கள் வீரமணியும் சுபவீயும்! பார்ப்பன அம்மையாருக்கு “சமூக நீதி காத்த வீராங்கனை’’ பட்டம் கொடுத்த சுயமரியாதைச் சுடரொளி அல்லவா வீரமணி!
“எப்பொழுதோ நடந்தகதை அது. அப்போது நான் வேறொரு முகாமில் இருந்தேன்’’ என்று சுபவீ கூறக்கூடும்! இப்பொழுது ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு கலைஞர் கருணாநிதி பா.ச.க.வுக்குக் கடிதம் எழுதினாரே அது பற்றி அவர் என்ன சொல்கிறார்? “தன்னெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்’’ என்றான் நம் ஆசான் வள்ளுவப் பெருந்தகை! இதெல்லாம் மனச்சான்றைக் கொல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும்! இப்பொழுதும் சொல்கிறோம். முள்ளிவாய்க்கால் திறப்பு விழாவிற்குப் பா.ச.க. தலைவர்களை அழைத்ததை த.தே.பொ.க. ஏற்கவில்லை. அதற்காக அந்த விழாவைப் புறக்கணிக்கவும் புறங்கூறவும் த.தே. பொ.க.விரும்பவில்லை.
பா.ச.கவை த.தே.பொ.க. எதிர்ப் பதற்குக் காரணம் அது மதநம்பிக்கையுள்ள கட்சி என்பதற்காக அன்று. அது ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வெறி அமைப்பு என்பதற்காக! சமய நம்பிக்கையுள்ள சைவர்கள், வைணவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் கடவுள்மத நம்பிக்கையற்றவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொண்டதுதான் தமிழ்த் தேசியம்!
திராவிடத்தை த.தே.பொ.க. எதிர்ப்பதற்கு சமூக அறிவியல் காரணம் இருக்கிறது. அது தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோருடன் தமிழர்களையும் இணைத்து இன்றும் பேசிக் கொண்டிருப்பது சமூக அறிவியலுக்கு எதிரானது என்று கருதுகிறது. அது தமிழர்களுக்கு இனத்துரோகம் செய்யும் கோட்பாடாகும். தமிழ்நாட்டை முந்நூறு நானூறு ஆண்டுகளாகத் தாயகமாக ஏற்று இன்றும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களை எதிர்ப்பதற்காகத் திராவிடத்தை எதிர்க்க வில்லை. ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் தமிழினப் பகையோடு அரசியல் நடத்தும் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர்க்குத் தமிழினத்தை அடங்கிப் போகச் செய்யும், இணங்கிப் போகச் செய்யும் இனத்துரோகக் கோட்பாடு என்பதற்காகவே திராவிடத்தை எதிர்க்கிறோம்.
மொழிவழி மாநிலமாகத் தமிழகம் அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்துவரும் தெலுங்கு, கன்னடம், உருது முதலிய பிறமொழி பேசும் மக்களைத் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களாகத்தான் த.தே.பொ.க.கருதுகிறது. மரபு வழிப்பட்ட தமிழர்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு என்கிறது. அவர்களும் சேர்ந்ததுதான் தமிழ்த்தேசியம் என்கிறது.
திராவிடம் என்ற பெயரில் ஓர் இனமும் இருந்ததில்லை, ஒரு மொழியும் இருந்ததில்லை, திராவிடம் என்ற நாமகரணம் ஆரியத்தின் கைச்சரக்கு! ஐரோப்பியரான கால்டுவெல் ஆரியத்திடமிருந்து கடன்வாங்கிய பொய்ச்சரக்கு! அன்று சென்னை மாகாணத்தில் ஆந்திரத் தெலுங்கரின் ஆதிக்கத்திலிருந்த நீதிக்கட்சியின் தலைமையை ஏற்க பெரியார் தேர்ந்தெடுத்த போலிச் சொற்கட்டு திராவிடம்!
சுபவீ நடத்தும் “கருஞ்சட்டைத் தமிழர் ஏட்டில் (கவனிக்கவும் கருஞ்சட்டைத் திராவிடர் என்று பெயர் வைக்கவில்லை) தோழர் இரா.உமா முள்ளிவாய்க்கால் முற்றத்திறப்புவிழா பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் பெரியாரைத் தவிர்த்துவிட்டுத் தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது என்று கொதித்துள்ளார்.
பெரியாரைத் தவிர்த்துவிட்டுத் தமிழர் வரலாற்றை எழுத வேண்டு மென்று தமிழ்த் தேசியவாதிகள் யாரும் கூறவில்லை. ஆனால் பெரியாரிலிருந்து தான் தமிழினத்தின் வரலாறு தொடங்குகிறது என்று கூறி மூடநம்பிக்கைகளை விதைக்காதீர்கள் என்கிறோம்! பெரியார் பிறப்பதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தமிழினத்தில் தொடங்கிய ஆரிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பெரியார் பிறந்த 19 ஆம் நூற்றாண்டில் அவர் பிறப்பதற்கு முன் தமிழ் நாட்டில் தோன்றிய வர்ண-சாதி எதிர்ப்பு சங்கங்கள், அமைப்புகள், இலக்கியங்கள் அனைத்தையும் மறுக்கும் பகுத்தறிவுப் பக்தி மார்க்கத்தில் மூழ்கிவிடாதீர்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்!
திராவிட இயக்கங்களில் இளைஞர்களே இல்லாமல் போனது போல் தமிழ்த் தேசிய இளைஞர்களைப் பார்த்து “ஏன் சோவை எதிர்த்துப் போராடவில்லை? ஏன் செயமோகனை எதிர்த்துப் போராட வில்லை என்று இரா. உமா கேள்வி கேட்கிறார்.
“ஒரு தலைமுறைக்குள் தமிழ்வரி வடிவத்தை விட்டுவிட்டு ஆங்கில வரிவடிவத்திலேயே தமிழர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டு மென்று ஆர்.எஸ்.எஸ். எழுத்தாளர் செயமோகன் தி இந்து தமிழ் இதழில் எழுதினாரே எத்தனை இளைஞர்கள் அதைக்கண்டு பொங்கி எழுந்தனர்’’ என்று கேட்கிறார் இரா. உமா!
தமிழ் வரிவடிவத்தைக் கை விட்டு விட்டு ஆங்கில (ரோமன்) வரிவடிவத்தில் நெடுங்கணக்கில் தமிழை எழுத வேண்டும் என்ற கோரிக்கையின் பிதாமகர் பெரியார் தாம்!
1939 ஆம் ஆண்டில் கோவைக் கல்லூரியில் பேசிய போது ஆங்கில வரிவடிவத்தில் தமிழை எழுத வேண்டுமென்று கூறியதாக பெரியார் 1962ல் நினைவு கூர்கிறார்.
“நான் 1939 இல் கோவைக் கல்லூரியில் அதன் பிரின்சிபாலின் தலைமையின் கீழ் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசும் போது எடுத்துச் சொல்லியிருக்கிறேன்... மொழி என்னும் தலைப்பில் பேசிய பேச்சில் குறிப்பிட்டிருக்கிறேன். அப்பேச்சில் ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துகளுக்கு நெடுங்கணக்காக - அகரவரிசையாக எடுத்தக்கொள்ளலாம் என்றும் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலாமென்றும் சொன்னதோடு மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சுமொழியாக ஆகும் படியான காலம் ஏற்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன். சமீபத்தில் (1957) நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக் கட்சிக்காரர்களும் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். பிறகு நான் பேசும்போதும் அது போலவே பேசிவிட்டு ஆங்கிலம் பேச்சுமொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன்’’ - 1957, 1962 பெரியார் ஈவெரா சிந்தனைகள் -2 தொகுப்பு வே. ஆனைமுத்து பதிப்பு 1.7.1974 பக்கம் 988
ஆங்கில வரிவடிவத்தில் தமிழை எழுத வேண்டும் என்று கட்டுரை எழுதிய செயமோகனைக் கண்டித்தும் அதை வெளியிட்ட தி இந்து தமிழ் நாளிதழைக் கண்டித்தும் சுபவீ தலைமையில் அந்த இதழின் ஆசிரியரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்த குழுவில் த.தே.பொ.க. தோழர்களும் இதரத் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தோழர்களும் இருந்தார்கள். முதலில் சுபவீ, ஆசிரியர் கி.வீரமணி போன்றோர் பெரியாரின் மேற்படிக் கருத்து பிழையானது. அதை நாங்கள் ஏற்க வில்லை என்று கூறிவிட்டு செயமோகனை எதிர்த்துக் கருஞ்சட்டைத் தமிழரில் எழுதியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். சுபவீ பாணியில் சொல்வதென்றால் அது “நேர்மையாக’’ இருந்திருக்கும்.
மறைந்த தமிழறிஞர் படங்களின் வரிசையில் பெரியார் படம் வைப்பது சரிதானா என்பதைக் கீழ்வரும் அவரது தமிழ் வெறுப்புக் கருத்துகளைப் படித்துவிட்டு படிப்பாளர்கள் முடிவு செய்யட்டும். 1967 -இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் அமைச்சர் கருணாநிதி ஏதோ ஒரு கூட்டத்தில் “தமிழுக்குக் கேடு வந்தால் அமைச்சர் பதவியை விட்டுவிடுவேன் என்று பேசினாராம். அதற்காகக் கருணாநிதியைக் கடிந்து கொண்டார் பெரியார்.
“அட பாவமே! மந்திரி கலைஞர் கருணாநிதி தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டு விடுவேன் என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? ஏன் அனாவசியமாய் முட்டாள்கள் வைத்த கண்ணியில் மாட்டிக்கொள்ள வேண்டும். அப்துல் காதருக்கும் ஆடி அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?
நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம் மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம். சமயத்தை சமயநூல்களை இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! இதற்குமேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்.?
- மேற்படி நூல் பக்கம் 985
பகுத்தறிவாளரான பெரியார் தமிழின் மீது கொண்டுள்ள அடங்கா வெறுப்பின் காரணமாக மூடநம்பிக்கை மொழியில் தமிழை “சனியன்’’ என்று சாடுகிறார். (“தமிழைப் பழித்தவரைத் தாய் தடுத்தாலும் விடேன்’’- என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலை அருள் கூர்ந்து இந்த இடத்தில் மறந்து விடுங்கள்.)
பெரியாரின் தமிழ் அழிப்புத் திட்டங்கள் பற்பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொரு வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம். இறுதியாக ஒன்றே ஒன்றைப் பார்ப்போம்.
“எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால் ஆங்கிலமே பொது மொழியாக அரசாங்க மொழியாக தமிழ்நாட்டுமொழியாக தமிழன் வீட்டு மொழியாக ஆகவேண்டும் என்பதற்காகத்தான்.
“நாம் இவ்வாறு கூறுவது தமிழன் உலக மனிதனாக விஞ்ஞான உருவாக ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மக்களை விஞ்ஞானத்தில் தோற்கடிக்கத்தக்கவனாக ஆகவேண்டும் என்பதற்காகவேயாகும். நாம் இன்று கிணற்றுத் தவளைகளாக இருக்கிறோம். நமக்குக் கம்பனுக்கு மேல் புலவன் இல்லை. வள்ளுவனுக்கு மேல் தீர்க்கதரிசி இல்லை. இக்கருத்தில் நாம் உலக மனிதனாக ஆக முடியாது என்பது எனது பலமான கருத்து. ஆகையால் தமிழர் தோழர்களே உங்கள் வீட்டில் மனைவியுடன் குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப்பழகுங்கள். பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். என்னை வையாதீர்கள் மனிதனாக வாழ முயலுங்கள்.
-விடுதலை அறிக்கை 27.1.1969 மேற்படி பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் 2 பக்கம் 989
பார்ப்பனியத்தின் பாதுகாவலர் என்று பெரியாரால் வர்ணிக்கப் பட்ட இராஜாஜி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று இரா. உமாவால் அடையாளம் காட்டப்பட்ட செயமோகன், பார்ப்பனிய நஞ்சையே குருதி ஓட்டமாகக் கொண்டுள்ள சோ ஆகியோரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கில ஆதரவுக் கருத்துகளும் பெரியாரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கிலத் திணிப்புக் கருத்துகளும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனவே அது எப்படி? பெரியார் புறப்பட்ட இடம் வேறு. இரு தரப்பாரின் உள் நோக்கங்களும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் இரு தரப்பாரும் தமிழ் மக்களை கால வளர்ச்சிக்கேற்ப மேம்படுத்துவதற் காகவே ஆங்கிலத் திணிப்பைச் சொல்வதாகக் கூறிக் கொள்கிறார்கள்.
நஞ்சை நஞ்சென்று தெரிந்து நமக்குக் குடிக்கக் கொடுத்தாலும் நஞ்சைப் பால் என்று நம்பி நமக்குக் குடிக்கக் கொடுத்தாலும் -அதை நாம் குடித்தால் விளைவு ஒன்று தானே! பெரியாரின் நோக்கம் வேறு, பார்ப்பனர்கள் நோக்கம் வேறு என்று கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. நோக்கம் வேறாக இருக் கட்டும், விளைவு ஒன்றுதானே!
தமிழ் மொழி அழிப்புதான் விளைவு; தமிழ் ஒழிந்தால் தமிழர்கள் பார்ப்பனர்களுக்கும் ஆரியத்திற்கும் அடிமை ஆவார்கள். இந்த விளைவு ஒன்றுதானே!
மற்றபடி மேற்படி மேற்கோளில் உள்ள பெரியாரின் கருத்துகள் பலவும் வரலாற்றுப் பிழையானவை; சமூக அறிவியலுக்குப் பொருந்தாதவை. திருவள்ளுவருக்குப் பிறகு புதுக் காலத்துக்கேற்ற புலவர் தமிழில் இல்லை என்கிறார்; அதுவும் 1969 -இல்! ஏன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இல்லையா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மொழியில் திருவள்ளுவர் போல் ஒரு புலவர் தோன்றியதுண்டா? திருவள்ளுவர் காலத்தில் ஆங்கில மொழியே தோன்றவில்லையே! ஆங்கில மொழி பேசும் மக்களுக்குத் திருக்குறளின் அரிய கருத்துகள் தேவை என்று கருதித்தான் அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார் ஆங்கிலேயரான ஜி.யு.போப்! இதர பல ஐரோப்பியர்களும் ஐரோப்பிய மொழிகளில் திருக்குறளைப் பெயர்த்தெழுதினார். கம்பர் காலத்தில் அவருடைய இலக்கியச் செழுமைக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு வேறு எந்த மொழியில் இலக்கியம் இருந்தது? கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்ற முகாமைச் சேர்ந்த கருணாநிதி கூட இப்பொழுது கம்பர் விழாவில் கலந்து கொள்வதற்குக் காரணம் கம்பனின் கவிய முதுதானே
பெரியார் குறிப்பிடுவது போல் ரசியாக்காரனும், சப்பான்காரனும் விஞ்ஞான மனிதர்கள் ஆனதற்குக் காரணம் என்ன? அவரவர் தாய் மொழியில் கற்றதுதான்! தமிழைவிட ரசிய மொழியும் சப்பானிய மொழியும் வளமானவை அல்லவே! தமிழை விஞ்ஞான மொழியாக்குவது எளிதாயிற்றே! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழர்களும் தமிழும் அயல் இனத்தார்க்கு அடிமைப் படுத்தப்பட்டு, அயல் மொழிகளின் ஆதிக்கத்தின் கீழ் ஒடுக்கப்பட்டுக் கிடப்பதால் உலகின் முதற்செம்மொழியான தமிழை நாம் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமற் போய்விட்டது.
தமிழ் மொழி அழிப்பிற்கு 1969 இல் கூட வேலைத்திட்டம் வகுத்த பெரியாரின் படத்தை, தமிழ் வளர்க்கப் பாடுபட்ட மறைந்த தமிழறிஞர்கள் வரிசையில் எப்படி வைக்க முடியும்?
வர்ண சாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவக் கருத்துகள், மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற வற்றில் பெரியாரின் பங்களிப்பைத் தமிழர்கள் ஏற்றுப் போற்ற வேண்டும். அதே வேளை மொழி, தேசிய இனம், இனம் ஆகியவை குறித்த அவரது தவறான கருத்துகளை தமிழர்கள் ஏற்கக் கூடாது என்பதே தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சியின் நிலைபாடு!
இறுதியாக ஒரு வினா?
பெரியார் அவ்வப்போது தமிழ்நாடு விடுதலை முழக்கத்தை முன் வைத்துள்ளார். 1973 செப்டம்பர் 17 விடுதலை மலருக்கு அவர் கடைசியாக எழுதிய பிறந்த நாள் செய்திக் கட்டுரையில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை மட்டும் முதன்மைப்படுத்தி - போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார். ஆனால் அவர் 1973 டிசம்பர் 24இல் காலமாகி விட்டார். ஆசிரியர் கி.வீரமணி அவர்களோ, சுபவீ அவர்களோ, உமா போன்றவர்களோ தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி மேடையில் பேசுவதில்லை. அதற்காகக் கட்டுரைகள் எழுதுவதில்லை. ஏன்? பிறகென்ன பெரியாரியவாதிகள் அவர்கள்? முன்னாள் பொடாச் சிறையாளியான சுபவீ இந்நாளில் பொழுது போக்கு அரசியல்வாதி ஆகிவிட்டார்! பகுத்தறிவு ஆதீன கர்த்தரான ஆசிரியர் வீரமணி அவர்களின் “புரட்சி’’ பற்றியும் தற்சார்பு செயல் பாடுகள் பற்றியும் கேட்கவே வேண்டாம்!
தமிழினத்தை வீழ்த்த - தமிழ்த் தேசிய வளர்ச்சியைத் தடுக்க பெரியாரை ஒரு கருவியாகப் பயன் படுத்துகிறார்கள் அவர்கள்!
பெரியாரியவாதிகளாக அவர்கள் இருக்கட்டும்! அதற்காகத் தமிழின வெறுப்பாளர்களாக இருக்க வேண்டாம்!
இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2013 டிசம்பர் 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் தோழர் பெ.மணியரசன், இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

0 Responses to முள்ளிவாய்க்கால் முற்றமும் முக்காடு நீங்கிய தமிழின வெறுப்பும் - பெ.மணியரசன்