Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் றெஷியானின் கொலையுடன் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில், அவரது மனைவி அனிதா றெஷியானையும் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

டானியல் றெஷியானின் கொலை தொடர்பிலான விசாரணைகளின் போது வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனின் உதவியாளர் சசீந்திரன் ஏற்கனவே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். அவர் வழங்கிய தகவல்களை அடுத்து, நேற்று திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனும் கைது செய்யப்பட்டிருந்தார்.

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் றெஷியான் கடந்த 27ஆம் திகதி தலையில் சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் அவரது மரணம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலையினால் நிகழ்ந்துள்ளதாக அவரது மனைவி அனிதா றெஷியான் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார். ஆனாலும், பிரேத பரிசோதனையில் றெஷியானின் தலையிலிருந்து 9 மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கியின் குண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த கொலையுடன் தொடர்புள்ளதாக தெரிவித்தே கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளது.

இதனிடையே, இந்த கொலைகளின் பின்னணியில் றெஷியானின் மனைவிக்கும்- கந்தசாமி கமலேந்திரனுக்கும் இடையில் தகாத உறவு இருந்த விவகாரம் உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் கொலை: அவரது மனைவி உள்ளிட்ட மூவர் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com