Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடிப்படைவாதமும், இனவாதமும் பேசும் பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் போல ஐக்கிய தேசியக் கட்சியும் கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளமை வருத்தமளிப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டுக்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை நிராகரித்த இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அழைப்பையேற்று வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்தால்; அதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்றக்குழு அமைப்பாளர் ஜோண் அமரதுங்க அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், பட்டாலி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச, பொதுபலசேனையின் கலபொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட அடிப்படைவாதிகளின் இனவாத பட்டியலில் ஜோண் அமரதுங்க இணைந்து கொண்டுள்ளமை வருத்தமளிக்கிறது. அவரது கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் இயக்கத்தினரின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறு சம்பிரதாயபூர்வமாக இந்தியப் பிரதமரை அழைத்துள்ளார். இது, புதிய விடயம் அல்ல. வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறு கோருவது நேரடியாக வடக்கிற்கு மட்டுமே வருமாறு கோருவதல்ல. அந்த அழைப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடே விடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கிற போது ஐக்கிய தேசியக் கட்சி ஏன் அதை எதிர்க்க வேண்டும்? இந்திய பிரதமர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்வதினூடு இலங்கையில் தனிநாடு அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்ற கூற்றுக்களின் சிறிதளவும் உண்மையில்லை. ஏனெனில், வடக்கில் தனிநாடு உருவாவதை இந்தியா என்றைக்குமே விருப்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியான நிலையில், அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நல்லதல்ல. தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் வாக்குகளைப் பெற்று முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது உண்மை. அதை நானும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு இனவாதம் பேசுவது வழியல்ல. மஹிந்த ராஜபக்ஷ பின்பற்றும் வழிமுறைகளின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியும் வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சிக்கக் கூடாது. இப்படி இனவாதிகளாக செயற்படும் போது சிறுபான்மை மக்களும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்து விடுவார்கள் என்று மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இனவாதம் பேசுவோருடன் ஐ.தே.க இணைந்து கொண்டுள்ளமை வருத்தமளிக்கிறது:மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com