கடந்த 12ம் திகதி தேவயானி அமெரிக்க போலீசாரால் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். கைதுக்கான காரணம் என்று பணிப்பெண்ணுக்கு குறைவான சம்பளம் கொடுத்ததும், பணிப்பெண் விசா விவகாரத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததும் என்று சொல்லப் பட்டது.
இதற்கு இந்தியாவில் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கண்டன குரல்கள் எழும்பிய நிலையில், அமெரிக்கா நிபந்தனை அற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் கூறியிருந்தார். இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவஷங்கர மேனனிடம், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இதை அடுத்து அமெரிக்காவுடன் இந்தியா பல்வேறு முதலீடுகளுடன் தொழில்கள் தொடங்கி வரும் வேளையில் இரு நாட்டு நல்லுறவு பாதிக்கப் படக் கூடாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,
தேவயானி மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதோடு இந்திய துணை தூதர் கைது விவகாரத்தில் இரண்டு அமெரிக்க வாழ் இந்தியர்களின் சதி உள்ளது என்று கூறியுள்ள சல்மான் குர்ஷித்,
இதை அமெரிக்க அதிகாரிகள் கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் பணிப்பெண் விசா விவகாரத்தில் சிக்கல் இருக்கும் போது அவரது கணவர் மற்றும் குழந்தைக்கு அமெரிக்கா கடந்த மாதம் 19ம் திகதி விசா வழங்கி இருப்பது எப்படி என்றும் குர்ஷித் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Responses to இந்திய துணை தூதர் கைது விவகாரத்தில் இரண்டு இந்தியர்களின் சதி உள்ளது! - சல்மான் குர்ஷித்