Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் லயோலா கல்லூரியின் விழாவுக்கு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் இன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டிருப்பது தமிழர்களின் மனதை வேதனையுற செய்துள்ளது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :

2009-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பான வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி். ஆனால் தமிழர்களைக் காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அவர், “இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெற்றிச் செய்தி வரும்” என இலங்கையின் அமைச்சரைப் போல நாடாளுமன்றத்திலேயே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனார். பல்லாயிரக்கணக்கில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது “போரை நிறுத்துவது என் வேலை இல்லை” என்று கைவிரித்தவர் அவர்.

இலங்கையில் நடந்திருப்பது இனப்படுகொலையே என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உட்பட பல பன்னாட்டு ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில், “இந்தியாவின் போரையே நாங்கள் நடத்தினோம். இந்தியாவின் முழு ஒத்துழைப்புடனேயே எங்களுக்கு வெற்றிக் கிட்டியது” என்று இன்று இலங்கையின் அதிபர் மகிந்த இராஜபக்சேயும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய இராஜபக்சேயும் வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில், பிரணாப் முகர்ஜி உட்பட 2009-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த அனைவருமே இனப்படுகொலைக் குற்றத்திற்கு துணை போனவர்களாக நிற்கின்றனர்.

இச்சூழலில் பிரணாப் முகர்ஜியை லயோலா கல்லூரி தனது விழாவிற்கு அழைத்திருப்பது தமிழர்களின் வேதனைப் புண்ணைக் கீறிப் பார்க்கும் செயலாகும்.இதனை ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பி, கோரிக்கை விடுத்த மாணவர் தலைவர் ஜோ பிரிட்டோவை கல்லூரி விடுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருப்பது கல்லூரியின் மதிப்பிற்கு மேலும் கேட்டினை ஏற்படுத்தும் செயலாகும்.

தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று முன்னேற அருந்தொண்டாற்றி வரும் லயோலாக் கல்லூரி தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்த போது தமிழர் பக்கம் நின்று நியாயத்திற்கு குரல் கொடுத்தது என்பதே வரலாற்றில் அக்கல்லூரிக்குப் பெருமை சேர்த்தது. ஆனால் இன்று நீதியின் பக்கம் துணிச்சலுடன் நிற்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் லயோலாக் கல்லூரி தனது பெருமைக்கு தானே களங்கம் தேடிக் கொள்ள வேண்டாம் என வேண்டுகிறோம். மேலும் ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களையும் அதற்கு துணையாக நின்றதாக இயக்குநர் வ. கவுதமனையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை கைது செதிருப்பதை வன்மையாகக் கண்டிக்கறோம். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பில் கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.

0 Responses to லயோலா கல்லூரி விழாவுக்கு பிரணாப் முகர்ஜியை அழைப்பதா? : சீமான் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com