மத்திய பிரதேசம் போபாலில் நாடு முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசுகையில்,
இங்குள்ள பெண்களுக்கு நிறைய திறமைகள் உள்ளது. உங்கள் பேச்சை கவனிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.என்னுடைய சிறிய வயதில் எனது பாட்டி இந்திராதான் எங்கள் வீட்டு நிர்வாகத்தை பார்த்தார். ஆண்களுக்கு நிகராக பெண்களை சமமாக நடத்த வேண்டும் பெண்களுக்கு யாருடைய பாதுகாப்பும் அவசியமில்லை, அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமை மற்றும் இடத்தை கொடுத்தாக வேண்டும்.
நான் எனது பாட்டி மற்றும் அம்மாவிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதேபோல் அமேதி தொகுதியில் உள்ள பெண்களிடம் ஏராளமானவற்றை கற்றுக்கொண்டேன்.அதில் பெண்கள் அதிகாரமிக்கவர்களாக மாறினால், அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
வன்முறை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்பை உருவாக்க கூடியது. வன்முறையை எதிர்த்து போராடவேண்டும். அதேநேரத்தில் வன்முறை மனப்பாண்மையை நாம் கட்டாயமாக மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் இந்தியாவின் சொத்து. பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தேர்தல் அறிக்கையில் இணைக்க திட்டமிட்டுள்ளேன். பல்வேறு கடும் போராட்டத்திற்கு பின் உணவு பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளோம்.
தேர்தல் அறிக்கையில் என்ன மாதிரியான வாக்குறுதிகள் அளிக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்பதை எனக்கு தெரிவியுங்கள். பெண்களுக்கு எதிரான வன்முறை துரதிருஷ்டமானது. இது தவறான செயல் ஆகும். இது போன்ற பல்வேறு வன்முறைக்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டியுள்ளது. மகளிருக்கு பாதுகாப்பு கிடைக்காத வரை நாடு வளர்ச்சி அடைய முடியாது.
அதிகார மையத்தில் பெண்கள் வரும்போது இந்த நாட்டையும் உலகையும் மாற்ற முடியும். பெண்கள் அதிகாரம் பெறும்போது எதையும் சாதிக்க முடியும். பெண்கள் அதிகாரம் பெறும்போது இவர்களை யாரும் வளர்ச்சியில் இருந்து தடுக்க முடியாது. பெண்களுக்கான அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். இவர் பெண் இவரால் எதுவும் செய்ய முடியாது என சிலர் நினைக்கக்கூடும். இந்த பார்வை மாற வேண்டும். பெண்கள் தங்களை காத்திட தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.
0 Responses to ஒவ்வொரு பெண்ணும் இந்தியாவின் சொத்து: ராகுல்காந்தி பேச்சு