Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்த அவலங்களைத் தாங்கி நிற்கும் முல்லைதீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தண்ணி முறிப்புக்குள கட்டுமானங்களில் நடந்ததாகக் கூறப்படும் பல கோடி மோசடி பற்றிய புதிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. சுமார் 60 வருடப் பழமை வாய்ந்த இக்குளத்தினை நம்பி சுமார் 2ஆயிரத்து 750 ஏக்கர் விவசாய நிலம் பயிர்செய்கை செய்யப்பட்டு வந்திருந்தது. எனினும் அதே அளவுக் காணியில் பயிர் செய்ய ஏதுவாக புனரமைக்கப்படுவதாகக் கூறப்பட்ட குளத்தில் தற்போது வெறும் 600 ஏக்கர் நிலத்தில் மட்டுமே  பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுவதாக தண்ணி முறிப்பு கமக்காரர் அமைப்பு அறிவித்துள்ளது.

அனுராதபுரத்தினைச் சேர்ந்த சண் கொன்ஸ்ரக்சன் எனும் ஒப்பந்த கார நிறுவனமே இக்கட்டுமான பணிகளை முன்னெடுக்க தன்னிச்சையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக நீடித்த மந்தகதி வேலைகள் மிக மோசமான கட்டுமானப் பணிகளையே அங்கு தந்துள்ளது இந்நிலையில்  கெயார் திட்டத்தின் கீழ்  இலங்கை அரசின் பங்காளி அமைப்பான மத்திய பொறியியல் மதியுரையகமே இவ்வேலைகளை  கேள்வி கோரி குறித்த சண் கொன்ஸ்ரக்சன் எனும் ஒப்பந்தகார நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 25 சதவீத வேலைகள் கூட பூரணப்படுத்தப்பட்டிராத நிலையில் ஒப்பந்த தொகையான 285 மில்லியன் பணத்தினை வேலைகள் திருப்திகரமாக பூரணப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறி ஒப்பந்த நிறுவனம் சுருட்டிச்சென்றுள்ளது. இப்பாரிய மோசடியினில் பங்காளிகளாக நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கெயார் திட்ட உள்ளுர் அதிகாரிகள்  இலங்கை அரசின் பங்காளி அமைப்பான மத்திய பொறியியல் மதியுரையகத்தினரென பலரும் இருப்பதாக கூறப்படுகின்றது. இவர்களிற்கு அப்பால் அரசியல்  பின்புலமாக இலங்கை அமைச்சர் றிசாத்பதியுதீன் மற்றும் வடக்கு ஆளுநர் போன்றவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

நிர்மாண வேலைகள் முடிவுற்றதாகக் கூறி மோசடிகள் அரங்கேறியுள்ள நிலையில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களது அன்றாட வாழ்வு மிகவும் மோசமடைந்துள்ளது. உரிய கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்படாமையினால் பொதுமக்கள் பயணிக்கும் வீதிகள் எங்கும் குளத்து நீர் தேங்கிப்போய் நிற்கின்றது. அத்துடன் போதிய அளவீடுகளில் நீர்வாய்க்கால்கள் அமைக்கப்படாமையினால் நீர் வழியெங்கும் வழிந்தோடுவதாக கூறப்படுகின்றது.

குளக்கட்டுக்கள் தரமற்ற நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் அவை எந்நேரமும் உடைப்பெடுக்கலாமென அஞ்சப்படுகின்றது. இதனால் குளத்தைச் சூழவுள்ள மக்கள் தமது உயிரினை கைகளில் பிடித்தவாறே வாழ்வதாகவும் கூறுகின்றனர். தாம் பல தடைவைகளாக முறைப்பாடுகளை செய்துவந்துள்ள போதும் அதிகாரிகள் எவருமே திரும்பிக்கூட பார்க்கவில்லையெனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இம்முறைப்பாடுகள் தொடர்பாகப் அப்பகுதி நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் செந்தூரன் மற்றும் இலங்கை அரசின் பங்காளி அமைப்பான மத்திய பொறியியல் மதியுரையக பணிப்பாளர் ஆரியரட்ண ஆகியோருடன் தொடர்பு கொண்ட வேளை அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனிடையே குறித்த ஒப்பந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது நீங்கள் எழுதுவதை எழுதுங்கள் எங்களை ஒன்றுமே செய்யமுடியாதென தெரிவித்தனர்.

இதனிடையே யுத்தத்தின் பின்னராக வன்னிப்பகுதியில் உரிய மேற்பார்வை கட்டமைப்புக்கள் இன்மையால் சர்வதேச தரப்புக்களால் ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் மோசடி செய்யப்படுகின்றது. குறிப்பாக வவுனிக்குளம் உள்ளிட்ட பல குளங்கள் சிங்கள ஒப்பந்த நிறுவனங்களிற்கு ஒதுக்கி வழங்கப்பட்டு மோசடிகள் பில்லியன் கணக்கில் நடந்து வருவதாக தெரியவருகின்றது. வன்னியின் ஏதேச்சாதிகார அரசியல்வாதியாக செயற்பட்டு வரும் அமைச்சர் றிசாத்தே அனைத்தினதும் சூத்திரதாரியாக இருந்துவருவதாக நம்பப்படுகின்றது. இலங்கை அரசோ ஒப்பிற்கு வடக்கில் வசந்தம் வீசுவதாக கூற மறுபுறமோ கறையான்கள் புற்றெடுத்தது போன்று சத்தமின்றி அனைத்தும் உருவப்படுவது தொடர்கின்றது.

0 Responses to வடக்கில் வசந்தமாம்! ஊழல் மோசடிகளினால் அதிர்கின்றது வன்னி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com