Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்தவின் நடவடிக்கைகள் அவருக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன. மேலும் மேலும் அதிகாரத்தைத் தம்வசப்படுத்தும் அவரின் நடவடிக்கைகள் அவரைச்சர்வாதிகாரி என்று அடையாளங்காட்ட அனுசரணையாக இருந்து வருகின்றன. அண்மைக்காலங்களில் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றே சகல நாடுகளிலும் குரல் எழும்பி வருகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி வாரத்தில் நேற்று யாழ்ப்பாணம் வலி.தெற்கு பிரதேச சபையில் நடைபெற்ற பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலவித பணிகளுக்கிடையில் இந்த விழாவில் நான் கலந்து கொள்ளக் காரணமுண்டு. நீங்கள் உள்ளுராட்சி வாரம் கொண்டாடும் போது உள்ளுராட்சி அமைச்சர் என்ற முறையில் இவற்றில் கலந்து கொள்வது எனது கடமை என்பது ஒரு புறமிருக்க, தேர்தலின் போது சுன்னாகம் வந்து பேசியதன் பின்னர் உங்கள் முன்னிலையில் என்னால் வரமுடியாது போய்விட்டது என்பதால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே வந்துள்ளேன்.

எமக்கு அமோகமான ஆதரவு அளித்து இந்தப் பதவியில் இருத்திவிட்டுள்ளீர்கள். நன்றி. ஆனால் எம் அதிகாரங்களைப் பாவிக்க இடம் தராத ஒரு நிலையே இன்னமும் காணப்படுகின்றது. எமக்கு அதிகாரங்கள் இல்லை என்று நாம் கூறுவதால் எமக்கு ஏதும் நன்மைகள் வந்து விடமாட்டா. கிடைத்திருக்கும் அதிகாரங்களையுந தடைகளையுங் கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் முடியுமான மட்டும் முன்னேறவே திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

இவ்வருடம் மார்ச் மாதத்தில் சர்வதேச ரீதியாகக் கேள்விக்குட்படுத்தப்படப் போகும் இலங்கை அரசாங்கம் அடுத்த தேர்தலை மட்டும் மனதில் எடுத்து பிழையான வழியில் போய்க் கொண்டிருக்கின்றது. எம்மைப் பொறுத்த வரை சட்டத்திற்குப் புறம்பான வழியில் அரசாங்கம் நடக்க முனைந்துள்ளது என்பதே எமது கருத்து.

1987ம் ஆண்டின் 42வது இலக்க மாகாணசபைகள் சட்டத்தின் பிரிவு 31ன் கீழ் மாகாணசபையொன்றின் பிரதம செயலாளரை அம்மாகாணத்தின் முதலமைச்சரின் இசைவுடனேயே ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அதை விடுத்து அரசியல் காரணங்களுக்காகத்தனது கடமையை உதாசீனப்படுத்தி வருகின்றது அரசாங்கம். தமக்கிசைவான தமது கைப்பொம்மையாக முன்னர் கடமையாற்றிக் கொண்டிருந்த, தனது கடமைகளைச் செவ்வனே உரிய முறையில்ச் செய்ய முடியாத ஒருவரைப் பதவியில் இருத்தி வடமாகாண மக்களின் எதிர்பார்ப்புக்களில் மண்ணை அள்ளித்தூவ நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது அரசாங்கம். 'கேட்பதைத் தருவேன். இன்றிரவே உரிய நடவடிக்கைகள் எடுப்பேன்' என்று இம்மாதம் 2ந் திகதி வாக்களித்த மஹிந்த நொண்டிச் சாட்டுக்களைக் கூறி 'தற்போது வேண்டாம். காலங் கனியட்டும்' என்று கூறுவதன் நோக்கம் அரசியல்க்காரணங்களாக இல்லாமல் வேறு என்ன காரணமாக இருக்கும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.

ஆனால் ஆகமொத்தம் மஹிந்த தாம் விரித்த வலைக்குள் தானே அகப்பட்டுத் திண்டாடுகின்றார் என்பது புரிகின்றது. முதலில் வடமாகாணத் தேர்தலை இவ்வருடம் நடத்துவேன் என்று 2009ம் ஆண்டில் கூறி அதையே 2010, 2011, 2012லும் கூறி வந்தார். ஆனால் நடத்தவில்லை.2013லும் அவ்வாறே கூறியிருப்பினும் நடத்தும் எண்ணம் அவருக்கு இல்லாது இருந்தது. இந்தியாவின் மிகக் கடினமான நெருக்குதலே அவரைத்தேர்தலை நடத்த வைத்தது. அப்போது அவரின் எண்ணம், எப்படியாவது இராணுவத்தின் உதவியுடன் வடமாகாணத் தேர்தலை வென்றுவிடலாம், என்றே இருந்தது.

அதற்காகப் பல பிரயத்தனங்களில் இறங்கியும் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை அரசாங்கத்திற்கு எதிராகவே வெளிக் காட்டினார்கள். இதை அவரால் பொறுக்க முடியவில்லை. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகத் தனது பழகிய முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார்.அதாவது தெற்கில் ஒரு குறிப்பிட்ட ஆற்றின் அடுத்த புறத்தில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று சிங்கள மக்களே கூறுவர். மஹிந்த ஆற்றின் அடுத்த பக்கத்தில் பிறந்து வளர்ந்தவர்!

தேர்தலில் வடமாகாண மக்களின் ஏகோபித்த தெரிவு தெரிய வந்ததால் தாம்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் ஒத்துழைத்து வடக்கை முன்னணிப்பாதையில் செல்ல வழி  அமைப்பதாக வாக்குறுதி அளித்தார் மஹிந்த. ஜனாதிபதிச் செயலணியின் செயற்பாட்டை வடமாகாணத்தில் நிற்பாட்டுவோம் என்றார். ஒரு மாத காலத்திற்குப் பதுங்கி இருந்துவிட்டு ஜனாதிபதி செயலணி தொடர்ந்தும் வலுவில் இருக்கும் என்று சகோதரரை விட்டுச் சொல்லச் செய்தார். கேட்பது கொடுக்கப்படும் என்று என்னிடம் இம்மாதம் 2ந் திகதி உற்சாகமாகக் கூறிவிட்டு கேட்பதை எல்லாம் நிராகரித்து விட்டு கேட்காதவற்றைத் தருவதாகப் பேரம் பேசினார். அதுவும் சட்டத்திற்குப் புறம்பாக நாங்கள் நடந்து கொள்கின்றோமே என்பதை அறிந்தும் அறியாதது போல் தற்பொழுது நடந்து கொள்கின்றார். இதனால் ஏற்படப்போகும் பாதிப்பு அவரையே தாக்கவிருக்கின்றது.
தேர்தலை நடத்துவதாகக் கூறி நடத்தாது இருந்து வந்ததும், அயலவர் நெருக்குதலின் காரணமாக அதை நடத்த முன்வந்ததும், பின்னர், நடத்துகின்றோம் பாருங்கள் வடக்கில்த் தேர்தலை என்று மார்தட்டித் தன்னை ஜனநாயக முறையில் நடப்பவன் என்று ஊர் அறிய, உலகறிய உரக்கக் கூறி வநதவர் எவ்வாறு இராணுவத்தைக் கொண்டு மக்களை அச்சுறுத்தித் தனது ஆசையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்தார் என்பதும், தேர்தல் தனக்கெதிராகச் சென்றதும் நாங்கள் கேட்டதைத் தருவார்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி விட்டுச் சட்டத்தில் இருப்பதையுந் தராமல் தவிர்த்து வருகின்றார் என்பதும் மஹிந்தவின் குணாதிசயத்தையும், குண இரகசியத்தையும் அம்பலப்படுத்திவிட்டது.ஆனால் இவை யாவும் முக்கியமல்ல.

13வது திருத்தச் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது. ஒரு கையால் கொடுப்பது போல் கொடுத்து மறுகையால் திருப்பி எடுக்கும தன்மை வாய்ந்தது என்று நாங்கள் தேர்தலின் போது கூறியவை தற்பொழுது தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றது என்பதை மஹிந்தவே முன்னின்று சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தி வருகின்றார் என்பது தான் அவருக்கும், அவரின் அரசாங்கத்திற்கும் ஏற்பட்டிருக்கும் அதிபெரிய பாதிப்பு. அதுவும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டார் என்ற அவச் சொல்லுக்கு ஜெனிவாவில் முகம் கொடுத்து வரும் அவர் தமிழ் மக்களுக்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய சொற்ப சலுகைகளையுங் கொடுக்காது ஏமாற்றி வருகின்றார் என்பது தமிழ் மக்களின் மீது வைர்யத்துடன் நடந்து வருகின்றார் என்ற அவருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பது போல் அவரின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

நாளையே நாங்கள் நீதிமன்றங்களை நாடலாம். என்ன அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கருத்தொருமிப்புக்கு மாறாக அலுவலர் ஒருவர் பதவியில் தொடர்ந்திருக்கின்றார் என்ற கேள்வியை நீதிமன்றங்களைக் கேட்க வைக்கலாம். சட்டம் குறித்த நியமனத்தில் ஜனாதிபதிக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்தொருமிப்பைக் கட்டாயப்படுத்தியிருக்கும் போது எவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான முறையில் பதவியில் இருக்கின்றீர்கள் என்று கேட்கலாம்.  ஆனால் அவையல்ல எமக்கு முக்கியம்.

தமிழ்மக்கள் இந்தத் தேர்தலில் ஈடுபட்டதற்குக் காரணங்கள் பல இருந்தன. ஒன்று – மக்களின் மனமறிய இரண்டு – மக்களைப் பிரித்தாள எத்தனித்தவர்களின் மனக் கோட்டையைத் தகர்த்தெறிய மூன்று – மக்கள் அரசாங்கம் என்று மார்தட்டித் திரிந்த அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்க நான்கு – பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு உதவாது என்று நாம் வாய் கிழியக் கூறியும் அதைச் செவிமடுக்காத அரசாங்கங்களுக்கு அதை நடைமுறைப்படுத்திக் காட்டி அவர்களுக்குப் புரிய வைக்க ஐந்து – எமது கோஷமும், கொள்கையுந் தமிழர் தன்னாட்சி என்ற நிலைப்பாட்டை உலகறியக் கூறி வைக்க இவ்வாறு பல காரணங்கள் கூறலாம். ஆனால் முக்கியமாக நாங்கள் கூறி வந்தது 13வது திருத்தச்சட்டம் மூலம் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்காது என்பதையே.

1.ஒன்று அந்தச் சட்டம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதால் மத்திய அரசாங்கத்திற்குச் சார்புடையதாகவே இருக்கும் என்பது. அதனால்த்தான் சமஷ்டி முறையை சிபார்சு செய்தோம்.

2. ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அவரை அடக்குமுறைக்குஅழைத்துச் செல்லவல்லன என்பது. இன்று அது கண்கூடு. வவுனியாவில் இன்று மாலை காக்கைக் கூட்டினுள் குயில் முட்டை போடும் நிகழ்ச்சியொன்று நடக்கவிருக்கின்றது.

3.1992ம் ஆண்டின் 58ம் இலக்கச் சட்டம் நிறைவேற்று அதிகாரங்களை மத்திய அரசாங்க அலுவலர் வசம் கொடுத்திருந்ததாலும் அவர்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்ததாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் கடமையாற்றக் கஷ்டப்படுவார்கள் என்பது. அது இன்று நடைபெறுகின்றது.

4.சட்டம், கல்வி, காணி போன்றவற்றின் மீது மாகாணங்களுக்கு அட்டவணைப்படுத்தி அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பல விதங்களில் கட்டுப்படுத்தி மத்திய அரசு தன் கையகப் படுத்தக் கூடும் என்பது. இன்றைய அரசாங்கத்தின் இது சம்பந்தமான நிலைப்பாடு நாடு அறிந்ததே.

5.தேசியக் கொள்கை என்ற அடிப்படையில் மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை வலுவற்றதாக்க முடியும் என்பது. எம்மால் இராணுவத்தை வெளியேற்ற முடியாததற்கு அரசாங்கம் முன்வைக்கும் காரணம் தேசியப் பாதுகாப்பு என்பது.

6.வடகிழக்கு அரச காணிகள் சார்பான அதிகாரம் அரசாங்கத்திடம் இருந்து வருகின்றது என்பது. இதன் காரணத்தால்த் தமிழ்மக்களின் காணிகள், வெளியிடங்களில் இருந்து வந்தவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

7.பொலிஸ் அதிகாரமும் அப்படியே  என்பது

8.ஜனாதிபதி செயலணி வடக்கில் நடக்கும் அபிவிருத்தி அனைத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கடப்பாடு இருந்து வருவது. இன்றும் அது நடைமுறையில் இருந்து வருகின்றது.

9.வருடா வருடம் நாம் செலவிடும் அத்தியாவசிய அலுவலர்கள் செலவும், அலுவலகச் செலவுமான மீண்டுவரும் செலவீனங்கள் மத்திய அரசாங்கத்தையே எதிர்பார்த்திருக்கின்றன.

ஈற்றில் எமக்குப் பாதீட்டில் கிடைப்பது அந்தத் தொகையுடன் சேர்த்து ஒரு சிறுதொகையே. ஆதலால் எமது அபிவிருத்தியை நாமே பார்த்துக் கொள்ள இடமளியாதிருப்பது. எனவே தான் இந்தப் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாகச் செயற்படுத்தினாலும் எமக்குக் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை என்பதை நாமே தேர்தல்க் காலத்தில் வலியுறுத்திவிட்டு அதே நேரம் இருக்குங் கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையுங் கைவிட்டுவிட்டால் கிழக்கில் நடந்தது எமக்கு இங்கும் நடக்கும் என்று கூறினோம். அப்பேர்ப்பட்ட ஒரு நிகழ்வு நடைபெறுவதை நிறுத்தவும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த எத்தனித்துச் சட்டத்தில் இருக்கும் நட்டங்களை வெளிப்படுத்தவுந் தான் நாம் தேர்தலில நின்றோம்.

இப்பொழுது எமது எண்ணங்கள் ஈடேறி வருகின்றன. எது எது நடக்கும் என்று நாம் கூறினோமோ அவை நடக்கின்றன. அதற்கு மேலாகவும் நடக்கின்றன. அதற்கு மேலாக நடந்தேறியுள்ளது தான் மஹிந்தவின் தான்தோன்றித்தனமாகத் தான் அளித்த வாக்கை மீறி நடந்து கொள்வது. அதுவும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்வது.

தமிழ் மக்களை இனரீதியாகப் படுகொலைக்கு ஆளாக்கியது அரசாங்கம் என்று அகில உலகமும் கூறும்போது அவர்களின் இன்றைய மாகாண சபைக்கு எதுவுமே வழங்கமாட்டோம் என்று அடம்பிடிக்கின்றார் ஜனாதிபதி என்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும். அது தான் வரப்போகும் தேர்தல். தமிழருக்கு எதுவும் கொடுக்கவில்லை, மறுத்துவிட்டேன் என்று கூறினால்த்தான் தனக்குச் சிங்களவர் வாக்குக் கிடைக்கும் என்று எண்ணுகின்றார் ஜனாதிபதி என்று தெரிகின்றது.

ஆனாலும் அவரின் நடவடிக்கைகள் அவருக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன. மேலும் மேலும் அதிகாரத்தைத் தம்வசப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அவரைச் சர்வாதிகாரி என்று அடையாளங் காட்ட அனுசரணையாக இருந்து வருகின்றன. அண்மைக் காலங்களில் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றே சகல நாடுகளிலும் குரல் எழும்பி வருகின்றன. இந்தியா கூட அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தென்ஆபிரிக்கா முன்னரே அதைச் செய்து வந்துள்ளது. அதாவது உள்ளுர் ஆட்சி அமைப்புக்களுக்குப் போதிய அதிகாரங்களை அவை வழங்கியுள்ளன.

எப்பொழுது அதிகாரங்களை தனிப்பட்டவர்கள் அல்லது குடும்பங்கள் அல்லது கடசிகள் அல்லது இராணுவம் தம்வசம் பதுக்கிப் பாதுகாக்க எத்தனிக்கின்றனவோ அது ஈற்றில் கவலையையே அவர்களுக்கு உண்டாக்கும். அண்மைக்காலத்தில் அவ்வாறு சர்வாதிகளாக மாறிய நபர்கள் பலர் இறுதியில் தமது தவறுகளை உணர்ந்து கொள்ளும் படியாக நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. எகிப்தின் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தானின் பேர்வேஸ் முஷாரவ், ஈராக்கின் சதாம் ஹீசேன் எவ்வாறு தமது தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டி வந்தது என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு ஆண்ட நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையையும் அவருக்கு உலகம் ஈந்த மதிப்பையும் ஆட்சியாளர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்த வரையில் கூட்டுறவு அடிப்படையில், இருப்பவற்றை வைத்து இசைவாக இயங்கும் அடிப்படையில், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற அடிப்படையில் இயங்கி முன்னேற முடிவு எடுத்துவிட்டார்கள். நடக்க வேண்டியவை நன்றாகவே நடப்பன என்ற நம்பிக்கையில் இருங்கள் என தெரிவித்ததார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

0 Responses to மஹிந்தவின் நடவடிக்கைகள் அவரை சர்வாதிகாரியாக காட்டுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com