Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

'நிறைவாகும் வரை மறைவாக இரு’ என்று ஒரு கவிஞர் எழுதினார். அதுபோல எம் தலைவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் சுதந்திரத் தமிழ் மண்ணில் அவரைப் பார்ப்பேன். அப்போது முத்துக்குமார் விண்ணில் இருந்து மலர் தூவுவார் என்று முத்துக்குமார் நினைவுநாளில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

முத்துக்குமார் மரணமடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. சென்னை சாஸ்திரி பவன் அலுவலக நுழைவாயிலில் தன் உடலில் தீ வைத்துக்கொண்டு 'ஈழம் வெல்க’ என வீர முழக்கத்துடன் மரணத்தைத் தழுவிய முத்துக்குமாரை மறக்க முடியுமா?

கடந்த 29-ம் தேதி சாஸ்திரி பவன் நுழைவாயில் அருகே முத்துக்குமார் படத்தையும் தீபத்தையும் ஊர்வலமாக ஏந்தியபடி வந்து அஞ்சலி செலுத்தினார்கள் தமிழர் எழுச்சி இயக்கத்தினர்.

அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ப.வேலுமணி நம்மிடம், 'முத்துக்குமார் நினைவுநாளில் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

ஆங்கிலேயர் பெயரில் இருக்கும் ஹாடோஸ் சாலையின் பெயரை மாற்றி, ஈழத் தமிழர்களின் உயிரைக் காக்கத் தன்னுயிர் தந்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் பெயரை சூட்ட வேண்டும். வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் நினைவாக, சென்னையில் நினைவுத்தூண் எழுப்ப வேண்டும்.

தமிழக அரசு மொழிப் போர் ஈகையர்களைப் போற்றுவது போன்று முத்துக்குமார் உள்ளிட்ட தமிழ் இன ஈகையர்களையும் போற்ற வேண்டும். ஈழத் தமிழர்களைக் காக்கப் போராடிய அனைத்து இயக்கத் தோழர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும்' என்றார். அதைத் தொடர்ந்து தமிழர் எழுச்சி இயக்கத்தினர் 35 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சென்னை, தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற முத்துக்குமாரின் அஞ்சலிக் கூட்டத்தில் வைகோ பேசும்போது,

முத்துக்குமார் நினைவுநாளில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உணர்ச்சிகரமாக இருக்கிறது. இன்று காலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மூன்று பேர் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அவர்கள் கழுத்தில் ஊசலாடும் தூக்குக் கயிற்றை அறுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வரப்போவது இல்லை. அது முடிந்துபோன கதை.

தமிழ் ஈழம் என்பதுதான் நம் இலக்கு. இனியும் ஈழத்து மக்களுக்குத் துரோகம் செய்யும் வஞ்சகம் தொடரக் கூடாது. நாங்கள் தொடர விட மாட்டோம்.

தமிழனுக்காகப் புது தேசம் மலரத் துடிக்கிறேன். அந்த நாள் நெருங்கி வருகிறது. மக்களின் மனசாட்சி விழித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்தக் கொடியவன் கூண்டிலே ஏற்றப்பட வேண்டும்.

 'நிறைவாகும் வரை மறைவாக இரு’ என்று ஒரு கவிஞர் எழுதினார். அதுபோல எம் தலைவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் சுதந்திரத் தமிழ் மண்ணில் அவரைப் பார்ப்பேன். அப்போது முத்துக்குமார் விண்ணில் இருந்து மலர் தூவுவார் என்று முடித்தார்.

கோவை, சூலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த முத்துக்குமார் வீரவணக்க நாள் கூட்டத்தில் சீமான் பேசியபோது,

பாரதி பாடிய அக்னிக்குஞ்சு எங்கள் முத்துக்குமார். பாரதி, கனக சுப்புரத்தினம், பெருஞ்சித்திரனார் போன்ற எத்தனையோ புலவர்கள் தமிழனைத் தட்டியெழுப்ப உணர்ச்சி பொங்கப் பாடினார்கள்.

எத்தனையோ தமிழ்க் கவிகள் தங்கள் பாடலில் நெருப்பேற்றித் தந்தனர். ஆனால், தன் உடலில் நெருப்பேற்றி முத்துக்குமார் தன்னையே தந்ததும்தான் அனைவருக்கும் உறைத்தது. முத்துக்குமார் செய்துகொண்டது தற்கொலை அல்ல. அது வீர மரணம்.

முத்துக்குமார் மாவீரன். நாம் இப்போது நிற்பது சாதாரணக் கிராமத்து மண் அல்ல. என்னுள் இருந்த சிந்தனைகளை வெளியில் கொண்டுவந்த என் தகப்பன் மணிவண்ணன், புலமைப்பித்தன் போன்றவர்கள் பிறந்த மண். முத்துக்குமார் ஏற்றிய தீ இன்னும் எங்கள் நெஞ்சில் எரிந்தபடியே இருக்கிறது. அதை மனதில் சுமந்தபடி எங்கள் பயணம் தொடர்கிறது'' என்று கர்ஜித்தார்.

பயணங்கள் முடிவதில்லை!

2ம் இணைப்பு

ஈழத்தின் விடியலுக்காக ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில் கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் : வைகோ

இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கடந்த 60 ஆண்டு களில் இலங்கைத்தீவில், ஈழத்தமிழ் மக்களுக்கு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழ் இனப்படு கொலையால் நேர்ந்த அழிவு, மனித மனங்களைத் துடிதுடிக்க வைக்கும் கொடுந்துயரம் ஆகும்.

உலகெங்கும், தமிழகத்திலும் நீதிக்காகத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளந்தலைமுறையினர் நடத்திய அறவழிக் கிளர்ச்சிகளால், மனித குலத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது. சிங்கள அரசு நடத்திய இப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளும் ஆயுத உதவி செய்து உள்ளன என்று கூறியதோடு, இந்திய அரசு இலங்கை அரசுக்குச் செய்த அனைத்து உதவிகள் குறித்தும் ஆய்வு நடத்துவதாகவும் அறிவித்துள்ளது.

எனவே, நடந்தது தமிழ் இனப்படுகொலை; இனி நடக்க வேண்டியது கொலைகாரக் கொடியோரைக் கூண்டில் நிறுத்தும் விசாரணை என்பதை, உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உரத்த குரலில் சொல்வோம்.சுதந்திரத் தமிழ் ஈழத்தை மீட்க வேண்டிய கடமை, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு உண்டு. ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, மார்ச் 10–ந் தேதி ஜெனீவா முருகதாசன் திடலில் ஒன்றுகூடிக்குரல் எழுப்ப, முத்துக்குமார் நினைவு நாளான ஜனவரி 29–ல் நீதிக்கான ஒரு நடைபயணத்தையும் தொடங்கி உள்ளனர்.

தரணி வாழ் தமிழர்கள் அனைவரும், சாதி மதம், கட்சி, தேச எல்லைகளைக் கடந்து, ஒன்றாகச் சங்கமித்து, ஈழத்தமிழர் விடியலுக்கும் நீதிக்கும் ஓங்கிக்குரல் கொடுப்போம்.

தமிழர்களின் அறப்போர்க் குரல் ஒலிக்க வேண்டிய தினமாக பிப்ரவரி 26–ந் தேதியை அறிவிக்க லண்டன் மாநகரிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தீர்மானித்து உள்ளனர்.

எனவே, பெப்ரவரி 26–ந் தேதி, உலகம் எங்கிலும் தமிழர்களின் நீதிக்கான முழக்கம் வீறுகொண்டு எழட்டும். தாய்த் தமிழகத்திலும், நீதி கேட்கும் முழக்கம் விண்ணை எட்டட்டும். தலைநகர் சென்னையிலும், மாவட்ட, வட்டத் தலைநகரங்களிலும், நீதி கேட்கும் குரல் எட்டுத் திசையிலும் ஒலிக்கட்டும். ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக நாம் ஒன்றுகூடிக் குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில் கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன்’’ என்று  கூறியுள்ளார்.

0 Responses to நிறைவாகும் வரை மறைவாக இரு! வைகோ சொல்லும் சீக்ரெட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com