வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் பிரதம கணக்காளர் கிரிதரன் ஆகிய இருவருக்கும் தொடர்ச்சியாகக் கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக உள்ளூர் தொலைபேசி இலக்கம் ஒன்றிலிருந்து இனந்தெரியாதவர்கள் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு இலக்கமொன்றிலிருந்தும் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். அத்துடன் குறுந்தகவல்கள் மூலம் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் பதவியை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், நேற்றும் தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு மிரட்டியதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் முறைப்பாடொன்றினை செய்துள்ளார்.
இதேவேளை, அமைச்சின் பிரதம கணக்காளருக்கும் இதே இலக்க தொலை பேசியிலிருந்தும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையினில் அவரும் ஏற்கனவே மற்றொரு புகாரினை அளித்துள்ளார். எனினும் இத்தகைய முறைப்பாடுகள் தொடராவிட்டால் அம்முறைப்பாடுகளை வாபஸ் பெற்றுக்கொள்ள பொலிஸார் நிர்ப்பந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதனால் குறித்த மிரட்டல் பின்னணிகள் பற்றி சந்தேகம் எழுந்துமுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை கல்வி அமைச்சினை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் முன்னர் அதனை முன்னிறுத்தி பிழைப்பு நடத்திய அரச தரப்புக்கள் சில பெரிதும் இதனால் நட்டமடைந்துள்ளன. அத்தகைய தரப்புக்கள் இதன் பின்னணியில் இருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
0 Responses to வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதம கணக்காளருக்கு கொலை அச்சுறுத்தல்!!