வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா அரசுக்கு எதிராக மேற்குலகம் கொண்டுவரும் தீர்மானம் கடந்த இரு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் போன்று வலுவற்ற ஒன்றாகவே அமையும் என்ற ‘எதிர்வுகூறல்கள்’ அண்மைக் காலங்களில் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளிவந்த வண்ணமுள்ளன.
மார்ச் மாதத்தை மையப்படுத்தி ஜெனீவாவில் பெருமெடுப்பிலான எழுச்சிப் பேரணியன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஈடுபட்டு வரும் பின்புலத்திலும், இதற்கு முன்னோடியாக ஐரோப்பிய தேசங்கள் தழுவிய நடைப்பயணம் ஒன்றை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் முன்னெடுத்து வரும் நிலையிலும் வெளிவரும் இவ் ‘எதிர்வுகூறல்கள்’ சாராம்சத்தில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எழுச்சியை மழுங்கடிக்கும் வகையிலேயே அமைகின்றன.
இவ்வாறான ‘எதிர்வுகூறல்கள்’ ஒழுங்கமைக்கப்பட்ட நாசகார நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது அரசியல் கற்றுக்குட்டித்தனத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றனவா? என்பதுபற்றி ஆராய்வது இப்பத்தியின் நோக்கமல்ல. அதற்காக இவ் ‘எதிர்வுகூறல்களில்’ நாசகார நிகழ்ச்சித் திட்டம் ஒன்று பொதிந்திருப்பதையும், இவ்வாறான ‘எதிர்வுகூறல்களை’ மேற்கொள்ளும் இணையத்தளங்கள் அரசியல் கற்றுக்குட்டித்தனத்துடன் செய்திகளை வெளியிடுவதையும் நாம் மறுக்க முடியாது.
உண்மையில் வரும் மார்ச் மாதம் என்ன நடக்கப் போகின்றது? கடந்த நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்துப் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் எச்சரித்தது போன்று சிறீலங்கா அரசுக்கு எதிரான பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலகம் கொண்டு வரப் போகின்றதா? அல்லது கடந்த இரண்டு ஆண்டுகாலப் பகுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் போன்று உப்புச் சப்பற்ற இன்னுமொரு தீர்மானத்தை மேற்குலகம் கொண்டு வரப் போகின்றதா?
இதற்கான பதில் யாழ்ப்பாணத்தில் வைத்துப் பிரித்தானியப் பிரதமர் வெளியிட்ட எச்சரிக்கையிலும், அவரது எச்சரிக்கையின் தொடர்ச்சியாக மேற்குலக இராசதந்திரிகள் வெளியிட்டு வரும் கருத்துக்களிலும் பொதிந்து கிடக்கின்றது. அதாவது யாழ்ப்பாணத்தில் வைத்து பிரித்தானியப் பிரதமர் விடுத்த எச்சரிக்கை இதுதான்: “இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை விரைவாக சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கத் தவறினால் பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைக்கான ஏற்பாடுகளை மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஊடாக நாம் மேற்கொள்வோம்.” பிரித்தானியப் பிரதமரின் இவ் எச்சரிக்கையை மூன்று கோணங்களில் நாம் பார்க்கலாம்.
பிரித்தானியப் பிரதமரின் எச்சரிக்கையை நுனிப்புல் மேயும் கோணத்தில் நாம் பார்ப்போமாக இருந்தால் வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்குலகம் கொண்டு வரும் தீர்மானம் சிங்களத்தின் மீதான பொருண்மியத் தடைகளை உலக நாடுகள் விதிக்கும் வகையில் அமையும் என்ற மிதமிஞ்சிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். உண்மையில் இவ்வாறான நுனிப்புல் மேயும் கண்ணோட்டத்துடன் பிரித்தானியப் பிரதமரின் எச்சரிக்கையைப் அணுகிய சில கட்டாக்காலி இணையத்தளங்கள், மார்ச் மாதத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது பொருண்மியத் தடைகளை விதிப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டிருப்பது போன்ற தொனியில் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இது ஓர் உண்மைக்குப் புறம்பான தகவல் என்பதோடு, சிங்களத்தின் மீது உடனடியாகப் பொருண்மியத் தடைகளை மேற்குலகம் கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை இப்பத்திரிகையின் தைப்பொங்கல் சிறப்பு இதழில் நாம் நிறுவியிருந்தோம். இதனை உறுதி செய்யும் வகையில் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது பொருண்மியத் தடைகளை விதிக்கும் சரத்துக்கள் எவையும் உள்ளடக்கப்பட மாட்டாது என்ற அறிவித்தலை இம்மாதம் 1ஆம் நாளன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராசதந்திரியான நிசா பிஸ்வால் விடுத்திருந்தார்.
இதேபோன்று பிரித்தானியப் பிரதமரின் எச்சரிக்கையை விமர்சனக் கண்ணோட்டத்துடன் நாம் பார்ப்போமாக இருந்தால், சிறீலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே உள்ளக விசாரணை பற்றியும், நல்லிணக்கம் பற்றியும் மேற்குலகம் பேசுவது போன்ற தோற்றப்பாடு எமக்கு ஏற்படும். மகிந்த ராஜபக்சவை எதிரியாக அன்றி நண்பனாகக் கருதியே உள்நாட்டு சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தான் அழைப்பு விடுப்பதாக தனது எச்சரிக்கையின் பொழுது பிரித்தானியப் பிரமதர் தெரிவித்தமை இத்தோற்றப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அமைவதையும் நாம் மறுக்க முடியாது.
ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த காலங்களில் நேர்மையுடன் மேற்குலகம் நடந்து கொள்ளத் தவறிய படிப்பினையை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியப் பிரதமரின் எச்சரிக்கையின் சாத்தியத்தன்மை குறித்து எம்மவர்கள் ஐயம் கொள்வது ஒரு விதத்தில் நியாயபூர்வமானதே. இவ் ஐயத்திற்கு வலுவூட்டும் வகையில் சிறீலங்காவின் நன்மைக்காகவே மார்ச் மாதம் வரை அதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்குள் நம்பகமான உள்நாட்டு சுயாதீன விசாரணைகளையும், நல்லிணக்க நடவடிக்கைகளையும் சிறீலங்கா மேற்கொள்ள வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், கடந்த மாதம் 27ஆம் நாளன்று பிரித்தானிய அமைச்சர் கூகோ சுவையர் அவர்களும், இம் மாதம் 01ஆம் நாளன்று அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சின் தெற்காசிய விவாகாரங்களுக்குப் பொறுப்பான இராசதந்திரியான நிசா பிஸ்வால் அவர்களும் வெளியிட்ட கருத்துக்கள் அமைவது ஏதோ உண்மைதான்.
ஆனால் இராசதந்திரம் என்பது வெறுமனவே நுனிப்புல் மேயும் கண்ணோட்டத்துடனோ அன்றி விமர்சனக் கண்ணோட்டத்துடனோ அணுகப்பட வேண்டிய ஒன்று அல்ல. நுனிப்புல் மேயும் கண்ணோட்டத்துடன் இராசதந்திர உச்சரிப்புக்களை நாம் அணுகினால் இறுதியில் எமக்கு ஏமாற்றமே மிஞ்சும். அதேபோன்று ஒவ்வொரு இராசதந்திர உச்சரிப்புக்களையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் நாம் பார்ப்போமாக இருந்தால் எமக்கு இறுதியில் விரக்தியே மிஞ்சும்.
‘உண்மை என்று எதுவும் இல்லை. உண்மை என்பது விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றும் அல்ல. சமூகம் எதை உண்மையாகப் பார்க்க விரும்புகின்றதோ, அது உண்மையாக்கப்படுகின்றது: எதைப் பொய்மையாக்க விரும்புகின்றதோ, அது பொய்மை ஆக்கப்படுகின்றது.’ என்கின்றார் பிற்கால நவீனத்துவத்தின் தந்தையான மிஷேல் பூக்கோ.
எனவே வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலகம் கொண்டு வரவுள்ள தீர்மானம் எவ்வாறானதாக அமையும் என்பது பற்றிய உண்மையை நாம் தேட முற்பட்டால் எமக்கு மிஞ்சப் போவது ஏமாற்றமும், விரக்தியுமே. எனவே இவற்றைத் தவிர்த்து இராசதந்திரத்தை இராசரீகக் கண்ணோட்டத்துடன் நாம் பார்க்க வேண்டும்.
புராதன காலத்தில் இராசதந்திரம் என்பது மன்னர்களின் சொத்துடமையாக இருந்தது. தனது எதிரி நாட்டுடன் நட்புறவைப் பேணுவதற்காக தனது எதிரிக்கே தனது சொந்த மகளை மணம்முடித்துக் கொடுப்பது அன்றைய காலத்தில் இராசதந்திரமாகக் கருதப்பட்டது. இந்த இராசதந்திரம் இப்பொழுதும் புராதன மகாவம்ச மனோபாவத்தில் மூழ்கிக் கிடக்கும் சிங்களத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் இன்றைய உலகில் இராசதந்திரம் என்பது யுத்தத்தை முன்னெடுக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது. புராதன காலத்தில் ஆயுதப் படைகள் ஊடாக சாதிக்கப்பட்ட பல விடயங்களை இன்று இராசதந்திரம் சாதிக்கின்றது.
எனவே இராசதந்திர உச்சரிப்புக்களில் எப்பொழுதும் பூடகமான கருத்துக்கள் பொதிந்திருக்கும். ஒருவனைப் பார்த்து ‘நீ எனது நண்பன்’ என்று இன்னொருவன் அடிக்கடி கூறுகின்றான் என்றால் அதன் அர்த்தம் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதன்று. தனது எதிரியை வீழ்த்துவதற்காகத் தான் எடுக்கும் நகர்வுகளை நட்பு பாராட்டும் நடவடிக்கைகளாகச் சித்தரித்துத் தனது பகைமை நடவடிக்கைகளை அவன் நியாயப்படுத்த முற்படுகின்றான் என்பதுதான் அதன் அர்த்தம்.
சிங்களத்தின் விடயத்திலும் இதுதான் நடக்கின்றது. நம்பகமான உள்நாட்டு சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளையும், நல்லிணக்க முயற்சிகளையும் மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்தை மேற்குலகம் வலியுறுத்துவதன் நோக்கம் அவ்வாறான நடவடிக்கைகளை மகிந்தர் எடுப்பார் என்ற நம்பிக்கையில் அல்ல. அவ்வாறான நடவடிக்கைகளை மகிந்தர் எடுக்க மாட்டார் என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அவருக்கு மாற்றீடாகத் தோன்றக்கூடிய சிங்களத் தலைமைகளையும், சிங்கள வாக்காளர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனேயே இவ்வாறான வலியுறுத்தல்களில் மேற்குலகம் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறான வலியுறுத்தல்களின் மூலம் மாற்றுச் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள வாக்காளர்களுக்கும் மேற்குலகம் கூறும் செய்தி இதுதான்: மகிந்த ராஜபக்சவை வழிப்படுத்துவதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தோம். அவர் அதற்கு மசியவில்லை. பின்னர் அவருக்கு காலக்கெடு விதித்தோம். அதற்கும் அவர் மசியவில்லை. எனவே இனி எமக்கு வேறு வழி இல்லை. ஆனால் பிரச்சினை எமக்கும், மகிந்தருக்கும் இடையில் மட்டும்தான். உங்களுக்கும், எங்களுக்கும் இடையில் அல்ல.
இந்த வகையில் ‘நீ எமது நண்பன்’ என்று மகிந்தரைப் பார்த்து அண்மைக் காலமாக மேற்குலகம் கூறிவருவதன் அர்த்தம் ‘நீ எமது எதிரி’ என்பதுதான். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு காலத்தை எமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளை சோர்வின்றியும், வினைத்திறனுடனும், சாணக்கியத்துடனும் நாம் முன்னெடுக்க வேண்டும்.
சிறீலங்காவிற்கு எதிராக மேற்குலகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டவையல்ல. மாறாக மேற்குலகின் பொருண்மிய நலன்களை அடிப்படையாகக் கொண்டே அவை ஒவ்வொன்றும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அதற்காக நாம் விரக்தியுற்று சோர்ந்து போக முடியாது. மாறாக எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களையும் சரியாகப் பயன்படுத்தி எமது தேச விடுதலையை விரைவுபடுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
நன்றி: ஈழமுரசு
0 Responses to உண்மைக்கான தேடலும், இராசதந்திரமும் - சேரமான்