Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.பிரித்தானியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழ்வில் தாயகத்திலிருந்து தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியப் பாரராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டு தமது பங்களிபபை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் கட்டமாக தாயகத்தில் இன்னுயிர் நீர்த்த எமது உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வின் முதற்கட்டமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான மதிப்பிற்குரிய சிவோன் மற்றும் லீ-ஸ்கொட் ஆகியோரும் உரை நிகழ்த்தி ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமது உரையை ஆரம்பித்த சமூக ஆர்வலரான மேதா பட்கர் பர்வின் இலங்கையில் ஆரம்பம் முதல் தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டு தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டி தமது உரையை தொடர்ந்தும் முன்னெடுத்தார்.  சமுக ஆர்வலரான மேதா தமது உரையில் புத்த தர்மத்தையும் தர்மத்தின் ஊடான சமாதானத்தின் பாதையையும் மேற்கோள் காட்டியிருந்ததுடன் எவ்வாறாயினும் புத்த தர்மத்தை பின்பற்றும் இலங்கை அரசும் பெரும்பான்மை சமுகத்தினரும் அதன்படி ஒழுக தவறி விட்டதாகவும் குற்றம் சுமத்தினர்.

உள்நாட்டில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த தமிழர்களின் நிலங்களை அபரிக்கும் இலங்கை அரசு அதற்காக வெளியுலகிற்குக் காண்பித்து வரும் கொள்ளைகள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளதுடன். இதில் முக்கியமாக அபிவிருத்தித் திட்டங்களே வெளியுலகிற்கு காண்பிக்கப்பட்டு வருவதுடன் அதிலும் அங்கு இராணுவமயமாக்கற் கொள்கைகளே வெளிப்படையாக தென்படுவதாகத் தெரிகின்றது. இதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது என பொருள்பட தமது பேச்சினை முன்னெடுத்துச் சென்றார். யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர். இனத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் அதனை மன்னிக்கவும் முடியாது என உறுதிபடத் தெரிவித்தார். எது எவ்வாறாயினும் இது இரு இனங்களுக்கு இடையிலான முரண்பாடு என கருதாமல் மனித உரிமைகளுக்கு முரணாண யுத்தம் எனவே கருத வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர் இந்த இடைவெளி தொடரும் நிலையில் எதிர்காலத்தில் என்ன நிலை ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என திடம்பட எடுத்துரைத்தார்.

இது தொர்பில் சகோதரத்துடன் தொழிற்படும் அண்டை நாடான இந்தியா தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெற உள்ள ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு முன்னதாக முடியுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு தமது உரையை நிறைவிற்கு கொண்டு வந்தார்.

அடுத்ததாக ஓக்லானட் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டால் கருத்து தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டு முதல் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. ஏவ்வாறாயினும் இது சர்வதேச ரீதியாக ஆங்காங்கே இடம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டிய அவர். இது இலங்கையிலும் தமிழர்களுக்கும் இழைக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு என மேற்கோள் காட்டினார். இன்று இந்த நிலமைகளை கண்டும் காணாதது போல இருந்தோமானால் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் மாபெரும் சீரழிவுகளுக்கும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கும் எதிராக நிகழும் அநீதிகளுக்கு நாமும் பொறுப்பாளிகளாகிவிடுவோம் என தெரிவித்ததுடன். இதனால் பாதிக்கப்படுவது முழு உலகமுமே என சுட்டிக்காட்டினார்.

நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக அங்கு சமாதானம் நிகழ்கிறது என்று பொருளல்ல என தமது உரையை ஆரம்பித்த தழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா தமது உரையை எல்லோருக்கும் வணக்கம் என ஆரம்பித்து ஈழத்தில் தமிழர் நில அபகரிப்பு சம்மந்தமாக தமது உரைய மேலும் எடுத்துச் சென்றார். இலங்கை அரசு வடக்கு கிழக்கின் தமிழர் தாயகப்பிரதேசத்தில் உள்ள நில அபகரிப்பு மற்றும் தமிழ் இனத்தை அழிப்பதற்கான திட்டங்களும் வெளிப்படையாகவே அனைவராலும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது தமிழர்களது இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் ஒரு திட்டமேயாகும். இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தோம் எவ்வாறாயினும் நீதிமன்று நில உரிமையாளர்களை அங்கு மீள குடியமர அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அதனையும் இலங்கை அரசும் இராணுவமும் மீறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மலேசியாவின் பாராளுமன்ற உறுப்பிர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் தொடர்ந்தும் உரை நிகழ்த்தினார். இதில் நில அபகரிப்பு தொடர்பில் தெளிவான விளக்கத்தினை கொடுத்தார். மனித உரிமை மீறல் நடவடிக்கையான நில அபகரிப்பு சர்வதேச ரீதியில் இடம் பெற்று வருவதாக கவலை வெளியிட்டதுடன் இது இலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றமை கவலை அளிப்பதாக கருத்து வெளியிட்டார். யுத்தத்துக்கு முந்தைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி தமிழர்களுக்குப் பல தடைகளும் இடர்களும் தொடரப்பட்டு வந்தது. எவ்வாறாயினும் தற்போதும் இந்த நிலமையே அங்கு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகிறதாக தெரிவித்தார். இராணுவத்தினர் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு துறையிலும் தலையீடு செய்து வருகின்றமை மிகுந்த கவலையளிக்கிறது என குறிப்பிட்ட அவர் இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து பார்க்கும் போது உள்நாட்டில் அரசின் நடவடிக்கை நகைப்பிற்கு உரியதாக உள்ளது என பொருள்பட தெரிவித்தார். நில அபகரிப்பு குறித்து மீண்டும் கரிசனை கொண்டால் இலங்கையில் தமிழர்கள் மெது மெதுவாக தமது நிலத்திலிருந்து அகற்றப்படுவதை காணக் கூடியதாக உள்ளதுடன் இந்த நிலமை தொடரும் இடத்தில் எதிர்காலத்தில் தமிழர்களது நிலமை எவ்வாறிருக்கும். இதற்கு என்ன தீர்வு என்பதே என்பது தெரியாமல் இருக்கின்றது. எவ்வாறாயினும் சர்வதேசம் ஒருங்கிணைந்து தமிழருக்கு குரல் கொடுக்க வேண்டும் என அழுத்திக் கூறியதுடன் இதனைத் தமிழர்களுக்கான பிரச்சினையாக மாத்திரம் கருதாமல் மனித உரிமைக்கு எதிரான செயற்பாடு என கருதிச் செயற்படுவோம் என கேட்டுக் கொண்டு தனது உரையை முடிவிற்கு கொண்டுவந்தார்.

இஸ்ரேலிய பேராசிரியர் கருத்தினை முன்னெடுத்துச் சென்றார். மனித உரிமை செயற்பாட்டாளரான அவர் தனது வாழ்க்கையில் தாம் எதிர் கொண்ட , குரல் கொடுத்த மனித உரிமை தொடர்பான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். மனித உரிமையும் அது மீறப்படும் சந்தர்ப்பங்களின் முக்கியமானதும் எடுத்துக்காட்டானதுமான நில அபகரிப்பு குறித்தும் அவற்றின் அடிப்படை கட்டுமானங்கள் குறித்து தெளிவு படுத்தினார். குடியுரிமையே சக்தியின் முக்கிய குரல் என்பதை சுட்டிக்காட்டிய அவர். இலங்கையில் தமிழ்களின் நிலை குறித்தும் அவர்களது மீது கட்டவிழ்த்து விடப்பட்டு தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களது போக்கு குறித்தும் அதனூடான இலங்கை அரசின் நடவடிக்கை குறித்தும் சுட்டிககாட்டிய அவர் தமிழர் நிலை குறித்து பெரும் கவலை வெளியிட்டார்.

நிலப் பதிவு முதல் அதன் உரிமைத்துவம் வரை தமிழர்களின் நிலமும் அது தொடர்பில் தமிழர்களின் ஒவ்வொரு விடயமும் பெரும்பான்மை அரசினால் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மனித உரிமையே முற்றாக மீறப்படுவதுடன் சட்டமும் ஒழுங்கும் கைக் கொள்ளப்படவில்லை. இதனால் சிறுபான்மை தமிழர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ளதுடன் பாதுகாப்பு இன்மையையே எடுத்துக் காடடுவதாக தெரிவித்தார். இது தொடர்பில் சர்வதேச சமுதாயம் இந்த விடயத்தில் தலையீடு செய்து தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில். இலங்கை அரசுக்கு இருக்கும் ஒரே ஒரு கொள்கை என்னவென்றால் இலங்கையை சிங்கள பௌத்த பேரினவாத நாடாக மாற்றிக் கொள்வதாகவே உள்ளதாக தெரிவித்ததுடன் இலங்கை பிரித்தானிய ஆட்சியிலிருந்து வெளி வந்த காலம் முதல் மாறி வரும் எந்த ஒரு அரசாயினும் அவர்களது கொள்கை ஒன்றாகவும் மேற்குறிப்பிட்டதாகவுமே உள்ளது. தற்போது இலங்கை அந்த கட்டுமான முயற்சியிலேயே உள்வாங்கப்படுவதுடன் அங்கு இராணுவ மயமாக்கலும் ஆட்சியுமே காணப்படுவதாகம் சுட்டிக்காட்டியதுடன். யுத்தத்தின் கொடுமை குறித்து சுருக்கமாக தெளிவு படுத்திய அவர் யுத்தத்தின் ரணம் மற்றும் அதனூடு அனாதைகளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் விதவைகளின் நிலமைகள் குறித்தும் தெளிவாக புள்ளி விபரத்துடன் எடுத்துரைத்தார். வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இலங்கை அரசினால் மேற் கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தமிழர்களின் பொருளாதார வளங்களும் முதலீடுகளும் இலங்கை அரச படையினரின் கரங்களுககும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபர ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். எனவே நேரத்தை வீணடிக்காமல் இது குறித்து சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் தீர்வினை பெற ஆதரவு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.


சிட்னி பல்கலைக்கழகத்தின் சமாதானக் கற்கை நெறிகளுக்கான இயக்குனர் பேராசிரியர் ஜேக் லின்ச் தெரிவிக்கையில், இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்ச யுத்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர். சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை அரசுக்கு எதிரான குரலை திரிவு படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். விக்கிலீக்ஸின் இலங்கை குறித்த ஆதாரத்தை மேற்கோள் காட்டிய அவர் விக்கிலீக்ஸ் அமெரிக்க இராஜதந்திர நடவடிக்கைகளை வெளியிட்டு வந்திருந்தது அதன் ஒரு கட்டமாக இலங்கையில் அமெரிக்க தூதரக இரகசிய ஆவணம் ஒன்றின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற சற்லைட் புகைப்படத்தின் அடிப்படையில் இறுதியுத்தத்தன் போது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரச தலைவர் ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் யுத்த குற்றம் தொடர்பிலும் தெளிவான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். இது மறுக்கவோ எவராலும் மறைக்கவோ முடியாத ஒரு ஆதாரமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வருடம் பிரித்தானியப் பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் குறித்தும் அது குறித்து அவர் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்புக்கள் குறித்தும் நினைவு படுத்தினார். இது தொடர்பில் அவரது விளக்கங்கம் நாளையும் தொடரும்.

இலங்கையின் அரசியல் கட்சிகளில் ஒன்றான நவசமசமாஜக் கட்சியின் உறுப்பினரும் பெரும்பான்மை சகோதர இன மூத்த ஊடகவியலாளர் உரையை முன் கொண்டு சென்றார். தாயகத்தில் தமிழர்களது நில ஆக்கிரமிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார். மேலும் தலைநகருக்கு அண்மித்த பிரதேசமான மாளிகாவத்தையில் மக்கள் கட்டாயத்தின் அடிப்படையில் குடியிருப்புக்களுடன் முற்றாக குடி பெயர்க்கப்பட்ட நிலையில் அங்கும் பெரிதும் பாதிக்கப்பட்டது சிறுபான்மை இனத்தவர்களாக காணப்பட்டதாக தெரிவித்தார். இது தவிர இலங்கையில் பல பாகங்களிலும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கவலை வெளியிட்டதுடன் புள்ளி விபரத் தகவல்களையும் சமர்ப்பித்தார். மேலும் மலையகத்தில் வாழும் இலங்கை அரசின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வரும் தோட்டத் தொழிலாழர்கள் மற்றும் அவர்கள் எதிர் கொண்டு வரும் இன்னல்கள் குறித்தும் மேலோட்டமாக கோடிட்டுக் காட்டினார். மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இவ்வாறான சர்வதேச அமைப்புக்களை தாம் பெரிதும் வரவேற்பதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரை நிகழ்த்திய மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி எனும் போர்வையில் இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு குறித்து புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடர்ந்து உரையாற்றினர். இதன் போதும் வடக்குக் கிழக்கில் இலங்கை அரச படையினர் அபிவிருத்தி எனும் போர்வையில் மேற்கொண்டு வரும் நில அபகரிப்பு மற்றும் கலாச்சார சீர் கேடுகள் குறித்தும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். தமிழர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் உடன் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கெர்ணடார்.

ஐக்கிய நாடுகள் பேரவையின் முன்நாள் உதவிப் பொதுச் செயலாளர் டெனிஸ் கலிடே இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பிலும் அதனைத் தொடர்ந்தும் அங்கு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் குறித்தும் தாம் கண்ட அனுபவங்கள் மற்றும் ஆதாரங்களையும் சபையில் எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நியாயத்தை எடுத்துரைக்க தகுந்த மற்றும் அது தொடர்பில் இறுக்கமான தீர்மானம் இயற்றக் கூடிய தளமாக ஐநா வின் பாதுகாப்பு பேரவையே உள்ளதாக தெரிவித்த அவர். அன்றேல் தனிப்பட்ட முறையில் ஐநா பொதுச்செயலாளர் பான் கீன் மூனுக்கு அதிகாரம் இல்லை என்பதுடன் அவர் ஒரு ஊழியர் மாத்திரமே என குறிப்பிட்டார். ஆதலால் எதிர்வரும் மனித உரிமை பேரவையின் ஊடாக அழுத்தங்களை வழங்குவதுடன் நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் எதிர்காலத்தில் நாம் இவ்வாறான ஒரு தேவையை ஒட்டி இப்படியானதொரு மாநாடு இடம்பெறும் தேவை ஏற்படக் கூடாது என சுட்டிக்காட்டினார்.

எதிர்கொள்ள இருக்கும் மிகப் பெரிய ஆபத்தை தடுப்பதற்கு முன்வந்த பிரித்தானிய தமிழர் பேரவைக்கு நன்றி தெரிவித்து தமது உரையை ஆரம்பித்த மட்டக்களப்பின் நாகேஸ்வரன். தாயகத்தில் தமிழர் பிரதேசங்கள் இலங்கை அரசினால் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்டு வருகின்றமையை புள்ளி விபரத் தகவல்களுடன் கோடிட்டுக் காட்டனார். தமிழர்களின் பூர்வீக பிரதேசமான சம்பூரில் தமிழர்கள் திட்டமிடப்பட்டு வெளியேற்றப்படும் திட்டமிட்ட செயல்களைச் சுட்டிக்காட்டிய அவர் குறித்த பிரதேசமானது இயற்கையாகவே பொருளாதார வளங்களை தன்னகத்தை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர். அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட தந்திரோபாயத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என குறிப்பிட்ட அவர். இதற்கு சட்டம் கூடத் துணை நிற்பதாக இலங்கை நீதித் துறையினரை சாடிய அவர். இவ்வாறான நடவடிக்கைகள் மெம் மேலும் இடம் பெறுவதை தடுப்படுதுடன் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கோரிக்கையை முன்வைத்தார்.

ஓய்வு பெற்ற நில ஆணையாளர் எட்வேட் தொடர்ந்தும் உரை நிகழ்த்தினார். ஆரம்பம் முதல் தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழ்நது கொண்டிருக்கும் வேளையிலேயே தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர். முந்தைய நாட்கள் முதலாக தமிழர்களது உழைப்பிற்கு ஏற்ப இடம் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் அதன் தொடர்ச்சியாக நிலச் சுரண்டல் மற்றும் நில அபகரிப்புக்களும் இடம் பெற்று வருவதாக தெரிவித்தார். இது தொடர்பில் தற்போதாவது ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படா விடின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என தெரிவித்தார்.

கஜேந்திர குமார் பொன்னம்பலம் உரை நிகழ்த்தினார். இன முரண்பாடுகள் தொடர்பில் பேசினால் இது எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டது என பார்த்தால் தமிழர்களது நில ஆக்கிரமிப்பே மூலாதாரமாக உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டே ஏனைய  பிரச்சினைகளும் அதனூடான போராட்டங்களும் தலை தூக்கியது என குறிப்பிட்டார். கடந்த 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசு முடிவிற்குக் கொண்டு வந்ததாக அறிவித்தது முதல் அரசின் திட்டமிட்ட இல அபகரிப்பு மேலும் துரிதப்படுத்தப்பட்டதைக் காணக் கூடியதாக உள்ளது. இது ஒரு திட்டமிட்ட நில அபகரிப்புத் திட்டமே ஆகும். ஈழத்தமிழர்கள் திட்டமிடப்பட்டு நாட்டை விட்டு வெளியயேற்றப்படுகிறார்கள். அது மாத்திரமல்லாமல் திட்டமிடப்பட்ட வகையில் தமிழர்கள் திட்டமிடப்பட்ட வகையில் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அதனூடு  பேரின சக்திகள் தமது இலக்கினைப் பூர்த்தி செய்து கொள்கிறது என்றே கூற முடியும். அதுவே உண்மையாக உள்ளது. என்றுமில்லாத வகையில் தற்போது சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களது பிரச்சினைகள் தொடர்பில் முன்வந்துள்ளனர். தற்போது ஐக்கிய நாடுகள் பேரவை இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை அடிப்படையாக கொண்டே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் எனலாம். சர்வதேச நிறுவனங்களின்  பார்வை தமிழர் பிரச்சினை பால் திரும்பியுள்ள நிலையில் இந்தப் பிரச்சினை ஆழமாக உற்று நோக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதற்குத் தேவையான தீர்வினை எடுப்பதற்கு சர்வதேச சமுகத்துடன் இணைந்து நாம் உறுதியாக செயற்பட வேண்டும். அதனூடாகவே தமிழர் தாயக நில ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தி நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழர் பால் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளமையை இந்த மாநாட்டின் ஊடாக தன்னால் காணக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆதலால் நாம் ஒன்று சேர்ந்து எமக்கு என்ன தேவை என்பதை தெரிவிப்பதுடன் அதனை பெற்றுக் கொள்ளவும் முடியும் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரன் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் தாம் ஈழத்தில் இராணுவ மயமாக்கலின் கீழுள்ள தமிழர்கள் படும் துயரம் குறித்தும் அது குறித்து தாம் தயாரித்துள்ள 3 நிமிட ஆவணக் காட்சிகளையும் சபையில் சமர்ப்பித்தார்.

0 Responses to தமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான இலண்டன் மாநாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com