Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது போராட்டம் மடிந்துவிடவில்லை, மீண்டும் மீண்டும் எழுவோம்.தமிழருக்கெதிரான ஆக்கிரமிப்புப் போரை நிறுத்து! பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து! அண்மையில் மேற்கொள்ளப்படும் கைதுகளை நிறுத்துவதோடு இதுவரை கைதுசெய்யப்பட்ட சிறுமி, தாய், கர்ப்பிணிப்பெண், குடும்பத் தலைவர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட அனைவரையும் விடுதலை செய்!!

தாயகத்தில் மக்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி ஐ.நா நோக்கிய அடுத்தகட்டப் போராட்டம் விடுதலைக்காகப் போராடும் தேசத்தின் ஒவ்வொரு சம்பவமும் அதன் எழுச்சிக்கு அடிப்படையாக அமையும். இன்றைய பதிவே நாளைய வரலாறு. எமது சுதந்திர வரலாற்றை இன்றே உருவாக்கவேண்டிய பொறுப்பு இன்றுள்ள தமிழர்களின் கடமையாகும். அதிலும், புலம்பெயர் தேசத்தவர்க்கே அது முக்கிய பொறுப்பாகும்.

அந்த வகையில் 10.03.2014 அன்று ஐரோப்பிய நாடுகளிலிருந்து, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள், தங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து, ஐ.நா முன்றல் முருகதாசன் திடலில் மாபெரும் எழுச்சிப் போராட்டத்தை நிகழ்த்திக் காட்டி, உலகின் காதுகளில் ஓங்கியறைந்து, எமக்கான நீதியை மீண்டும் ஒருமுறை கேட்டுள்ளார்கள். எமது சொந்தங்களின் உயிர்போன வலியை ஓங்கியுரைத்துள்ளார்கள். தமிழரின் தாகத்தைக் கூவியுரைத்துள்ளார்கள். சிங்களத்தின் முகமூடியை மீண்டுமொருமுறை கிழித்தெறிந்துள்ளார்கள்.

இப்பேரெழுச்சியை எத்தனையோ சவால்களுக்கு மத்தியில், மகத்தான முறையில் நெறிப்படுத்திய எமது இன உணர்வாளர்களுக்கும், இளையோரிற்கும், செயற்பாட்டாளர்களுக்கும் எமது பாராட்டுக்கள். இந்தப் பேரெழுச்சியில் ஐ.நா சபையின் முன்னாள் உதவிப் பொதுச்செயலாளர் டாக்டர் டெனிஸ் கலிடே அவர்கள் கலந்துகொண்டு எமது விடுதலைக்காக உரையாற்றியமை, புலத்தினிலே எமது தமிழ்மக்களின் போராட்ட வளர்ச்சியைக் கட்டியம்கூறி நிற்பதோடு, ஐ.நா. சபை எங்கள் நியாயமான கோரிக்கைகளை ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

இருந்தபோதிலும், சிங்கள தேசம் தமிழர்களது உரிமையை மதிப்பதற்குத் தயாராகவில்லை. தனது திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை மேலும் வேகப்படுத்துவதிலேயே அக்கறைகொண்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனிதவுரிமை மாநாட்டில் சிங்கள தேசத்தின் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்திப் போராடிவரும் தமிழர்களை அடக்குவதற்கான திட்டங்களையே சிங்கள அரசும் சிங்களப் பாசிச இராணுவமும் முன்னெடுத்து வருகின்றன.

தமிழீழப் பிரதேசமெங்கும் இளைஞர்கள் கடத்தல், இனந்தெரியாப் படுகொலைகள். இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமல்போன மக்களின் உறவினர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது செய்து தடுத்துவைக்கப்படுதல், முன்நாள் போராளிகளை அச்சுறுத்தும் பெருமெடுப்பிலான கைதுகள், மூலை முடுக்கெல்லாம் புலிதேடும் சிங்களப் படைகள் நிற்கின்றபோது குறிப்பாக யாழிலிருந்து தென்தமிழீழம் நோக்கிப்;பயணித்த இளம் குடும்பப்பெண் காணாமல் போதல் உட்படப் பெண்கள் காணாமல் போதல், தமிழ் பெண்களை சிறிலங்கா இராணுவத்தில் இணைத்து இராணுவத் தளபதிகளாலும் சிப்பாய்களாலும் பாலியல் வன்கொடுமை ஊடாக கேவலப்படுத்துதல், படுகொலை செய்தல், இளைஞர்களின்மீது இராணுவ வண்டியால் மோதி படுகொலைசெய்தல், அப்பகுதியில் கூடிநின்ற மக்கள்மீது வன்முறைத் தாக்குதலை மேற்கொள்ளல் போன்ற மனிதவுரிமை மீறல்களையும் மானுடம் வெறுக்கும் செயல்களையும் சிங்களப் பேரினவாதிகள் வெளிப்படையாகவே செய்துவருகின்றனர்.

ஐ. நா. மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிங்களத்துக்கு எதிராக ஏதாவது அறிக்கை வராமல் இருப்பதற்கே மீண்டும் புலிகள் வந்துவிட்டனர் என்ற போர்வையில் இக்கைதுகள் இடம்பெறுகின்றன. ஒரு பக்கம் சர்வதேசத்தைத் தன்வசப்படுத்தும் புலிக்கெதிரான பரப்புரை செய்வதோடு, தமது உரிமைக்குத் தொடர்ந்தும் போராடிவரும் தமிழர்களை அடக்குவதற்கும் அவமானப்படுத்துவதற்குமே மேற்குறிப்பிட்ட வன்செயல்களில் சிங்களப் பாசிசவாதிகள் ஈடுபடுகின்றனர்.

ஒரு இனத்தின் பெண்சமுதாயத்தையே கேவலப்படுத்தும் இந்தச் சிங்களம் நிச்சயம் ஒருநாள் தோற்பது உறுதி. சில வல்லாதிக்க சக்திகளின் துணைகொண்டு எம்மை அழித்துவிட்டு தான் வெற்றிநாயகன் போல் பாசாங்கு செய்கின்றது சிங்களம். இதில் வேதனையானது எதுவெனில், 'தமிழர்களைத் தாமே வென்றோம்' என்று தன்னை அது நம்பத்தொடங்கிவிட்டது. இந்த நினைப்பில்தான் எங்கள் பெண்களை உயிரோடுவைத்தே உருசித்து சதைதின்னும் கொடிய மிருகங்களாக எங்கள் மண்ணில் உலாவருகின்றது. தமிழரைக் கொன்றால் கேட்பதற்கு யாருமில்லை என்று இரத்தக்கறைபடிந்த பற்களோடு திமிர்கொண்டு நிற்கின்றது சிங்களம்.

இங்கேதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனை நம்முன்னே விரிகின்றது. எமது தலைவரின் Àரநோக்குப் பார்வையில் மக்கள் போராட்ட காலமாக இக்காலம் உள்ளதையும், தமிழீழஅரசு நோக்கிய எமது போராட்டத்தினை சர்வதேசம் அங்கிகரிக்காமையால் ஏற்பட்டிருக்கும் இன்றைய தமிழினச் சீரழிவிற்கு பதில் சொல்லும் பொறுப்பில் சர்வதேசம் இருப்பதையும் நாம் பார்க்கின்றோம்.

'பல்லாண்டுகளாக அகிம்சைவழியில் பயணித்த தமிழனை சிங்களம் ஒருபோதும் மதிக்கவில்லை. பிரித்தானியர் வெளியேறிய காலம்தொட்டு தமிழரை அவமதிக்கவும், சிங்களவர்களது கேவலமான பாலியல் கலாசாரத்துக்கு வடிகாலாகவும் தமிழ்ப்பெண் சமூதாயத்தினை இலக்குவைத்து சிங்களப் பாசிசம் நகர்கின்றது. ஆகவே, தமிழினத்திற்கு, குறிப்பாக தமிழ்ப் பெண்ணினத்திற்கு பாதுகாப்பினைத் தரக்கூடிய ஒரேவழி தமிழர்கள் தமது தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது பூர்வீக தாயகமான தமிழீழத்தில் தமக்கான ஆட்சியை நிறுவுவதே ஆகும். தமிழினத்தின் இவ் அடிப்படை உரிமையினை உலகம் அங்கிகரிக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு' என்று தலைவர் அவர்கள் அனைத்துலகத்தை நோக்கி விடுத்த செய்தியை உலகுக்கு நினைவூட்ட வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே, சுவிஸ்வாழ் தமிழக உறவுகளே, மனிதநேயம் உள்ளவர்களே, ஈழத்தில் தமிழர்படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. 1948ஆம் ஆண்டுமுதல் இனஅழிப்பிற்கு முகங்கொடுக்கும் இனமாக தமிழினம் உள்ளது. இந்தக் கொடுமைகளைச் செய்பவன் அனைத்துலக நாடுகளின் பிச்சையில் வாழ்ந்துகொண்டுதான் தமிழருக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் செய்கின்றான். சர்வதேசமும் பேச்சளவில் மனிதவுரிமை பேசியவாறே நிபந்தனைகளற்ற உதவிகளைத் தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்குச் செய்து வருகின்றது. இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படுவதோடு, தங்களின் உதவிகளைப் பெறும் சிங்களத்தின் தமிழர்மீதான வன்முறையினை இனம்கண்டு அதனைத் தடுத்து நிறுத்துவது அனைத்து நாடுகளினதும் தார்மீகக்கடமையாகும்.

ஆகவே, தமிழரின் இனஅழிப்பிற்கு நீதி கேட்டும், தமிழருக்கெதிரான ஆக்கிரமிப்புப் போரை நிறுத்தக்கோரியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக்கோரியும், அண்மையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கைதுகளை நிறுத்துவதோடு இதுவரை கைதுசெய்யப்பட்ட சிறுமி, தாய், கர்ப்பிணிப்பெண், குடும்பத் தலைவர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய சிறிலங்காவை வற்புறுத்தக் கோரியும் 25.03.2014 ஜெனிவா ஐ.நா. முன்றலில் நடைபெறவிருக்கும் 'நீதிகேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடலில்' நீங்கள் ஒவ்வொருவரும் கலந்துகொண்டு எமது வாழ்வுரிமைக்காகத் தொடர்ந்து போராடவருமாறு உரிமையோடு வேண்டுகின்றோம்.

நீதியின்பால் நிற்கும் நமக்கு நிச்சயம் விடிவு பிறக்கும். அந்த விடிவொன்றே எம் இனத்தின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தும் என்பதால் துணிந்து போராடுவோம் - எழுந்து, மீண்டும் மீண்டும் போராடுவோம்.

மானமாவீரர்களின் அடிச்சுவட்டில் உன் பாதம் பதியட்டும். மானமுள்ள இனமாய் மண்ணில் தமிழன் வாழட்டும்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

பேர்ண், 23.03.2014


0 Responses to தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி - 25.03.2014 படைஎடுப்போம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com