Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தில் இணைந்த புதிய வீராங்களைகள் சிலர் பயிற்சியின் போது பயிற்சியாளர்களினால் கேலி, கிண்டல் மற்றும் திட்டல் உள்ளிட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ உண்மையானது என்று இலங்கை இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

குறித்த பயிற்சியின் போது பயிற்சி பெறும் வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இராணுவ சட்டவிதிகளுக்கு முரணாக நடந்துகொண்ட இராணுவ வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு இராணுவ சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்படும் என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அனுராதபுரத்தில் பெண் இராணுவ அணியொன்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியே தற்போது வெளியாகியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பி.பி.சி.யிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இராணுவ வீரர்கள் தங்களின் இராணுவ பயிற்சி விதிமுறைகளை மீறி பயிலும் வீராங்கனைகளுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். தவறிழைத்தவர்களுக்கு இராணுவ சட்டத்தின் படி தண்டனை கொடுக்கப்படும். அத்தோடு, இனிமேல் இப்படியான சம்பவமொன்று நடக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோவை எடுத்தவரும் இருக்கிறார். அதில் வருகின்ற இராணுவ வீரர்களும் தாங்கள் தான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம் வீடியோ உண்மையானது தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மோதல்கள் முடிவடைந்த பின்னர் இலங்கை இராணுவம் தமிழ்ப் பெண்களையும் இராணுவத்தில் சேர்த்துவருகிறது. இலங்கை இராணுவம் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

இலங்கை இராணுவத்தின் மீது மேலும் மேலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை தடுப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று பி.பி.சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர், ‘இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களை அனுமதிக்கும் இராணுவம் அல்லவென்பது இந்த வீடியோ தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதன் மூலமே உறுதியாகிவிட்டது’ என்றுள்ளார்.

0 Responses to இராணுவ வீராங்கனைகள் பயிற்சியின் போது துன்புறுத்தப்பட்டது உண்மை: இலங்கை இராணுவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com