Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கச் செனட் சபை அறிவித்துள்ளது.

அமெரிக்கச் செனட் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான பணிப்பாளர் பெப் ரொபேர்ட் மெனென்டஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எழுதியுள்ள கடிதமொன்றின் மூலம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக அமெரிக்கச் செனட் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஜனநாயகக் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான நிலமைகள் தொடர்பில் முழுமையாக அதிர்ப்தி அடைந்துள்ளதாக ரொபேர்ட் மெனென்டஸ் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சரியான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வரை அதன் பொறுப்புக்கூறல், அரசியல் நல்லிணக்கம், மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பிரயத்தனங்கள், சர்வதேச சமூகத்தினருக்கு பதிலளிக்கும் வகையில் உரிய காலவரையறைக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டமானது, மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு காரணியாக அமைந்துள்ளதுடன், பிரதேச மட்டத்தில் உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்கும் வழிகோலியுள்ளது. இதன் மூலம் மறுசீரமைப்புக்கும், கலந்துரையாடலுக்கும் சட்ட ரீதியில் வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், துரதிர்ஷ்டவசமாக 13வது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், வடக்கு மாகாண சபையின் தலைமைத்துவத்துடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலையும், அரசியல் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாகவும் ரொபேர்ட் மெனென்டஸ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான அரசியல் நல்லிணக்கத்திற்கு, அபிவிருத்தித் திட்டங்கள் என்றைக்குமே மாற்றீடாக அமையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சர்வதேச விசாரணை கோரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு: அமெரிக்க செனட் சபை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com