Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க.வில் நடிகை குஷ்பு ஓரம் கட்டப்படுகிறாரா? என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நடிகை குஷ்பு

கேள்வி:–தி.மு.க. முன்னணிப்பேச்சாளர்களில் ஒருவரான குஷ்பு, தி.மு.க.வில் ஓரம் கட்டப்படுவதாகவும், தேர்தல் பிரசாரம் செய்ய தடை செய்திருப்பதாகவும் செய்தி வருகிறதே?

பதில்:–குஷ்பு புறக்கணிக்கப்படவும் இல்லை, தேர்தல் பிரசாரத்திற்குத்தடை விதிக்கப்படவும் இல்லை. தி.மு.க.வின் முன்னணிப்பேச்சாளர்கள் அனைவருமே என்னுடைய சுற்றுப்பயணம் வெளி வருவதற்காகக்காத்திருந்தார்கள்.

காரணம், எந்தத் தேதியில் நான் எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப்பொறுத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக்கொள்வதற்காகத்தான் தாமதம். தற்போது என்னுடைய சுற்றுப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டு ஏடுகளில் வெளிவந்து விட்டதால், அவர்களின் சுற்றுப் பயணங்கள் தலைமைக்கழகத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை வெளிவந்துவிடும்.

அனல் மின்திட்டம்

கேள்வி:–‘‘எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டம் குறித்து சில தவறான தகவல்களை கருணாநிதி தெரிவித்ததற்கு நான் விரிவாகப் பதில் அளித்திருந்தேன்’’ என்று ஜெயலலிதா சங்கரன் கோவிலில் பேசியிருக்கிறாரே?

பதில்:–மார்ச் 13–ந் தேதியன்று முதல்–அமைச்சர் அளித்த விளக்கத்தில், ‘‘எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டம் என்னால் (ஜெயலலிதாவால்) 29–3–2012 அன்று அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு மின் திட்டத்தை அறிவித்தாலும், அதைத் துவக்குவதற்கு முன் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பல்வேறு அனுமதிகள் பெற வேண்டும். மத்திய அரசின் அனுமதி 24–1–2013 அன்று கிடைத்தது. இதன் பின்னர் ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது. இதற்கான பணி ஆணையினை மேற்படி நிறுவனத்திடம் 27–2–2014 அன்று நான் வழங்கினேன்’’ என்று பேசியிருந்தார். நான் கூறியதைத்தான் ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா அப்படியே பேசியிருக்கிறாரே தவிர, தவறான தகவல்கள் என்று எதையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.

இட ஒதுக்கீடு

கேள்வி:–சங்கரன்கோவிலில் பேசிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இன்று வரை பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசின் ஏ,பி,சி,டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். இதைத் தீர்க்க தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., இதுபற்றி மத்திய அரசை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறாரே?

பதில்:–இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமானது. சமூக நீதியின் ஓர் அடிப்படைக் கூறுதான் இட ஒதுக்கீடு. மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் 12–5–1989 அன்று நான் முதல்–அமைச்சராக இருந்த போது, தி.மு.க. ஆட்சியில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கைகொடுக்காது

2006–ம் ஆண்டு தமிழக முதல்–அமைச்சர் பொறுப்பிலே 5–வது முறையாக நான் அமர்ந்தவுடன், அனைத்து மாநில முதல்–அமைச்சர்களுக்கும் இட ஒதுக்கீடு குறித்து விரிவாகக் கடிதம் எழுதினேன். அந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று 10–4–2008 அன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நண்பர் அர்ஜுன் சிங் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த அளவிற்கு தொடர்ந்து பாடுபட்டு வந்த, போராடி வந்த என்னைப் பார்த்து ஜெயலலிதா, மத்திய அரசை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று கேட்டிருப்பது விந்தையான ஒன்றல்லவா? ஜெயலலிதா எதை வேண்டுமானாலும் பேசட்டும், இட ஒதுக்கீடுப் பிரச்சினை எப்போதும் அவருக்குக் கைகொடுக்காது! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

திமுகவில் பிரசாரம் செய்ய குஷ்புவுக்கு தடை?

0 Responses to திமுகவிலிருந்து குஷ்பூ ஓரம் கட்டப்படுகிறாரா? : கருணாநிதி விளக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com