Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது.

2010 அக்டோபர் 25 ல் சனல்-4 ல் வெளியான காணொளியில், 8 தமிழ் இளைஞர்கள் அம்மணமாக கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோரக் காட்சி,

அதே ஆண்டின் டிசம்பர் 2 ல் வெளியான காணொளியில் தமிழ்ப் பெண் இசைப்பிரியா சிங்கள இராணுவ மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட காட்சி,

2013 பெப்ரவரி 17 ல் வெளியான காணொளியில் மாவீர மகன் 12 வயதான பாலச்சந்திரன் மார்பில் 5 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், மண்ணில் சடலமாகக் கிடந்த காட்சி,

இந்த 2014 ஜனவரி இறுதி வாரத்தில் தெரிய வந்த காணொளியில் தமிழ் இளம்பெண்கள் சிங்கள இராணுவ வெறி நாய்களால் கோரமாகக் கற்பழிக்கப்பட்டு, அங்கங்களைச் சிதைத்துக் கொல்லப்பட்ட நிலையில், ஆடைகளற்ற நிலையில் கிடந்த அந்தச் சடலங்களை, சிங்களக் கூட்டத்துக்கு மத்தியில் மண்ணில் போட்டு, அந்த உடல்களின் மீது இதுவரை உலகில் எங்கும் நடைபெறாத விதத்தில் நெஞ்சை நடுங்கச் செய்வதும், சொல்லிலோ எழுத்திலோ கூற முடியாததுமான அக்கிரமத்தில் சிங்கள ஓநாய்கள் ஈடுபட்ட காட்சி,

கடந்த வாரத்தில் கிடைத்த காணொளியில் ஒரு குளக்கரையில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் அம்மணமாகத் துப்பாக்கி முனையில் உட்கார வைக்கப்பட்டு, பின்னர் ஒவ்வொருவராக கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் கொடுந்துன்பக் காட்சி

இவை அனைத்தும் அனைத்துலக மனித குலத்துக்கு இன்னமும் மனச்சாட்சி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும் அறைகூவல் ஆகும்.

நானிலத்தில் தமிழ் இனத்துக்கு நாதியே இல்லையா? நீதியே கிடையாதா? என்ற தமிழ்க் குல மக்களின் ஓலக்குரல் உலகின் மனச்சாட்சியின் கதவுகளைப் பலமாகத் தட்டியதால், அதுவரை குருடாக இருந்த உலகோரின் கண்கள் மெதுவாக விழித்தன. செவிடாக இருந்த உலகத்தின் காதுகள் மெதுவாகத் திறந்தன.

அதன் விளைவாகவே, 2009 ல் சிங்கள அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய ஜெனீவாவின் மனித உரிமை கவுன்சிலில் 2011ல் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, 2012ல் தமிழகத்தில் வெடித்த மாணவர் கிளர்ச்சியால் சிங்கள அரசுக்கான ஆதரவு நிலை மாறி, தமிழர்களுக்கான நியாயத்தின் குரல் மேலும் வலுப்பெற்று, 2013ல் அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போனது என்றாலும், எதிர்காலத்தில் நீதிக்கான நம்பிக்கையை விதைத்தது.

இந்த ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 25வது கூட்டத் தொடரில் அமெரிக்க அரசு, இங்கிலாந்து, மாண்டிநீரோ, மாசிடோனியா, மொரிசீயÞ ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழர்களுக்கு முழு நீதிக்கான அழுத்தம் குறைக்கப்பட்டது.

எனினும் இத்தீர்மானம் நேற்றைய தினம் 2014 மார்ச் 27 ல் விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது, பாகிஸ்தான் அரசின் பிரதிநிதி, இந்த விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தியாவும், சீனா, கியூபா, ரஷ்யாவும் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்து வாக்கு அளித்தன. எனினும் நீதியின்பால் தாகமுள்ள பல நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக வாக்கு அளித்ததால், அக்கோரிக்கை மனித உரிமை கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அரசு இன்னொரு அக்கிரமத்தைச் செய்தது. அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளின் வரைவுத் தீர்மானத்தில் 10வது பத்தியில் உள்ள ஏ, பி, சி, மூன்று உட்பிரிவுகள் அடங்கிய பத்தாவது பத்தியின் வாசகங்கள் முழுமையாக தீர்மானத்தில் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

10ஆவது பத்தி கூறுவது இதுதான்:

இலங்கையில் நீதிக்கான நம்பகமான விசாரணை உள்நாட்டு அளவில் நடைபெறாத சூழலில், மனித உரிமைகள் அழிக்கப்பட்டது குறித்துச் சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையர் தந்துள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளவும், சிங்கள அரசே நியமித்த நல்லிணக்க ஆணைய விசாரணை நடத்தியதாகச் சொல்லும் கால கட்டத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மனித உரிமை கவுன்சிலின் 27 வது கூட்டத் தொடரில் வாய்மொழியாக மனித உரிமை ஆணையர் அறிக்கை தர வேண்டும். 25வது கூட்டத் தொடரில் இப்பொழுது நிறைவேற்றப்படும் தீர்மானம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விவாதித்து, எழுத்து மூலமாக ஒரு விரிவான அறிக்கையை 28 வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழர்களுக்கு நீதிக்கான வெளிச்சத்தை தர முற்பட்ட இந்த பத்தாவது பத்தியை முழுமையாக நீக்க வேண்டும் என்று நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைப்பதற்காக சிங்களக் கொலைகார அரசுக்குக் கைக்கூலியாக பாகிஸ்தான் அரசு கொண்டு வந்த அயோக்கியத்தனமான இந்தக் கோரிக்கை மீது, மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்து, சீனா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஓட்டுப்போட்டது. எனினும் உலகில் நீதி செத்து விடவில்லை என்பதால், ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் கோரிக்கையை எதிர்த்துப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்துத் தோற்கடித்தன.

அதன்பின்னர் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்க அரசின் தீர்மானத்தை ஆதரித்து 23 நாடுகள் ஓட்டுப்போட்டன. கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, பாகிÞதான், பெலாரஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன.

வாக்கெடுப்பில் பங்கு ஏற்காமல், பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகிற விலாங்கு மீன் ஏமாற்று வேலையைச் செய்த 12 நாடுகளின் பட்டியலில் இந்திய அரசும் சேர்ந்துகொண்டது. இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து இந்தியாவின் பிரதிநிதி திலீப் சின்கா தனது அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்:

அமெரிக்கத் தீர்மானம், இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்து உள்ளது. இலங்கை அரசு ஆக்கபூர்வமான புனரமைப்பு வேலையைச் செய்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 2009, 2012, 2013 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது’ என்கிறார் இந்த யோக்கிய சிகாமணி.

1970 ஆம் ஆண்டில், பாகிÞதானின் ஒரு பகுதியான கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திர வங்கதேசம் வேண்டும் என்று முஜிபுர் ரகுமான் தலைமையில் கிழக்கு வங்காள மக்கள் போராடியபோது, முக்தி வாகினியை ஆதரித்து இந்தியத் தளபதி மானக்ஷா தலைமையில், இந்திய இராணுவத்தை கிழக்கு பாகிÞதானுக்குள் அனுப்பி, பாகிஸ்தான் இராணுவத்தோடு போர் புரிந்து, தோற்கடித்து, பாகிஸ்தான் இராணுவத்தினரை கைதாக்கிச் சரணடையச் செய்து, சுதந்திர வங்கதேசத்தை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அமைத்துத் தந்தபோது, கிழக்கு பாகிஸ்தானில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, அனைத்துலகத்தின் மனித உரிமைகள் பிரச்சினை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த வரலாறு சோனியா காந்தியின் கைப்பாவையான மன்மோகன் அரசுக்கு மறந்துவிட்டதா? அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு புத்தி பேதலித்துவிட்டதா?

1983 ஆகஸ்ட்16 ல், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இலங்கையில் நடப்பது தமிழ் இனப்படுகொலை. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்வகுடிமக்கள் என்று அறிவித்ததை அறியாத முட்டாள்களின் அரசா இன்றைய காங்கிரஸ் அரசு.

2009ம் ஆண்டு மனிதகுல வரலாற்றின் பேரழிவுகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை மே 17, 18 தேதி வரை நடத்தப்பட்ட பிறகு, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகள் ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கான தாக்கீதை எழுத்து மூலமாகத் தந்ததால், 2009 மே 26ம் தேதி, மனித உரிமை கவுன்சில் அவசரக் கூட்டம் கூடியது.

ஆனால், அனைத்துலகத்தின் நீதி பகிரங்கமாகத் தூக்கில் இடப்பட்டது போல, கவுன்சிலில் உறுப்பினர் அல்லாத சிங்கள அரசு தன்னைத்தானே பாராட்டித் தயாரித்த தீர்மானத்தை கியூபாவும், இந்தியாவும் வரிந்துகட்டிக் கொண்டு ஆதரவைத் திரட்டி, நிறைவேற்றியபோது, இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் தமிழ் இனக்கொலை செய்ததற்காக மகிந்த ராஜபக்சே அரசுக்குக் கிரீடம் சூட்டிய தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தன.

12 நாடுகள் இப்பாராட்டுத் தீர்மானத்தை எதிர்த்து வாக்குப்போட்டன. மொத்தம் உள்ள 47 நாடுகளில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அப்பொழுது மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க நாடு உறுப்பினர் அல்ல.

தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க முடியாத துரோகத்தை அன்றும் செய்த இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து ஊர் ஊராகச் சென்று என் மனக்குமுறலை மேடைகளில் கொட்டினேன். “ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என நான் தயாரித்த குறுந்தகட்டில் மேற்கூறிய செய்தியை ஆவணம் ஆக்கினேன்.

இந்திய அரசின் பிரதிநிதி 13 வது சட்டத் திருத்தம் பற்றி உளறி இருக்கிறார். 1987 ல் விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து, ஜெயவர்த்தனவோடு இணைந்து ராஜீவ் காந்தி போட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றிச் சொல்லப்பட்டது. ஒப்பந்த மையின் ஈரம் உலர்வதற்குள் ஜெயவர்த்தன இணைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றார். ராஜீவ் காந்தி அரசு வாய்மூடி பதுங்கியது. 13 வது சட்டத் திருத்தத்தை அப்போதே ஈழத் தமிழர்கள் ஏற்கவே இல்லை.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் கொழும்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, இந்திய அரசு அதனை எதிர்த்து முணு முணுக்கக்கூட இல்லை. அப்படியானால், இந்திய அரசு தன்நினைவு இழந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டதா? என்பதே கேள்வி ஆகும்.

ராஜீவ்காந்தி பிரதமரானதில் இருந்து நேற்று வரை, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் மன்னிக்கவே முடியாத துரோகம் செய்வதற்குக் காரணம் என்ன?

ஒரே ஒரு காரணம்தான். கடந்த பத்து ஆண்டுகளாக நான் கூறிவரும் காரணம்தான். ஈழத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளி என்பதே அக்காரணம் ஆகும்.

நீர்த்துப்போன தீர்மானம் என்று நான் குறை கூறியபோதிலும், உலகில் நீதி மரித்துப் போகவில்லை என்பதால், சிறிதளவாவது நீதிக்கான நகர்வாக அமெரிக்க வரைவுத் தீர்மானம், ஜெனீவா வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.

உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களும், தமிழ்க்குல மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இனி மேற்கொள்ள வேண்டிய சூளுரை ஒன்றுதான். இனக்கொலைக் குற்றவாளியான ராஜபக்ச அரசையும், கூட்டுக் குற்றவாளியான சோனியா காந்தி இயக்கிய இந்திய காங்கிரஸ் அரசையும், அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.

ஈழத் தமிழர் தாயகத்தில், சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, இராணுவமும், போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஐ.நா.சபையின் மேற்பார்வையில் ஒரு இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

2011 ஜூன் 1 ம் தேதி பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிட அரங்கில் நான் முதன்முதலாகப் பிரகடனம் செய்ததுபோல், அகிலத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பில் அவர்கள் வாழும் நாடுகளிலேயே பங்கு ஏற்கும் நிலையை ஐ.நா.மன்றம் ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் இனப்படுகொலை செய்த சிங்கள அரசையும், கூட்டுக் குற்றவாளியான இந்தியக் காங்கிரஸ்  அரசையும் அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

தமிழ் ஈழ விடுதலைக்காக செங்குருதி சிந்தி உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் மீது ஆணை! சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தின் மீது ஆணை! ஈழத் தமிழரைக் காக்க மரணத் தீயை தழுவிய முத்துக்குமார் முதல் முருகதாஸ் வரை உயிர்த் தியாகம் செய்த உத்தமர்கள் மீது ஆணை!

அறம் வெல்லும்! தமிழர்களுக்கான நீதி கிடைக்கும்!  நாளைய பொழுதில் தமிழ் ஈழம் மலரும்!

0 Responses to காங்கிரஸ் அரசையும் அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்!- வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com