Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையின் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகள் தொடர்பிலேயே சர்வதேச ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனை அனைத்து தமிழ் மக்களும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கேட்டுக் கொண்டுள்ளார்.


‘ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கையினை முறியடிப்போம்’ என்ற கோசத்தோடு திருகோணமலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஹர்த்தாலுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச, தனியார் நிலையங்களை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு கோரியுள்ள இரா.துரைரெட்னம், கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருட காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வீரமுனைப் படுகொலை, காரைதீவு படுகொலை, வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, உடும்பன்குள படுகொலை என படுகொலைகளின் பட்டியல்கள் நீண்டுசெல்கின்றன.

இந்த படுகொலைகள் நடந்து இன்று வரையில் எதுவித விசாரணைகளும் அற்ற நிலையே உள்ளது. இவைகள் நீதிக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட கொலையாகும். ஒரு நாட்டின் அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்களையே கொலை செய்த வரலாறாகும். இவற்றினை நாங்கள் சர்வதேசம் மூலம் இன்று வெளிக்கொணர்ந்துள்ளோம். இந்த படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணை நடத்த மறுத்ததன் காரணமாகவே நாங்கள் சர்வதேச விசாரணையை நாடவேண்டிய தேவையேற்பட்டது.

எங்களை அடக்கியாள நினைத்த சக்திகளுக்கு எதிராகவே நாங்கள் போராடி வருகின்றோம். நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை. எங்களை கொன்று குவித்தவர்களுக்கு எதிராகவே போராடுகின்றோம். வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச ரீதியில் இன்று தமிழ் மக்களுக்கு சார்பான ஒரு நிலை தோன்றியுள்ளது. இதனை வலுவாக்க வேண்டியது தமிழர்களின் இன்றைய முக்கிய கடமையாகும்.

இந்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் பெயர் அற்றவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஒரு போலிக்குழுவினர் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்ககூடாது. தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை அற்ற நிலையிலேயே சர்வதேசத்திடம் சென்றுள்ளனர் என்பதனை எமது மக்கள் விளங்கிக்கொண்டு அதனை பலவீனப்படுத்துவதற்கு அரச ஆதரவு அடிவருடிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிரான ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com