இந்தியா வென்றது; இது இந்தியாவின் 14வது பிரதமராக எதிர்வரும் 21ஆம் திகதி பதவியேற்கப் போகும் ‘நமோ’ என்கிற நரேந்திர மோடி தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் இன்று (மே16) எழுதியது.
இந்தியா நீண்ட காலத்துக்குப் பின் அறுதிப் பெரும்பான்மை பெற்ற கட்சியொன்றினால் ஆளப்படப்போகிறது. கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதல்களுக்கு எந்தவித இடமும் கிடையாது. அதாவது, பாரதிய ஜனதாக் கட்சி தன்னுடைய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இனி ஐந்து ஆண்டுகள் பாரதிய ஜனதாக் கட்சியின் கைகளில். அல்லது மோடியின் கைகளில். காங்கிரஸ் என்கிற கையை மக்கள் ஒட்டுமொத்தமாக ஒடித்துவிட்டு பாரதிய ஜனதாவின் கைகளிடம் மக்கள் கொடுத்துள்ள வெற்றி இது. ஜனநாயகத்தின் வெற்றி பற்றிய அறிவித்தல்களுக்கு அப்பால், சுதந்திர இந்தியாவை நீண்ட காலமாக ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த மிகப்பெரிய அடி. அதிலிருந்து காங்கிரஸ் மீள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.
மோடி அலை சுனாமியான கதை!
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை புறந்தள்ளி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தருணத்தில் (அது நீண்டகால திட்டமிடல் என்கிற போதிலும்) இந்தியா மெல்ல ஆச்சரியமாகப் பார்த்தது. அந்த ஆச்சரியம் மோடி மீதான அலையாக மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்டது. அந்த அலையைத் தோற்றுவித்ததில் மோடிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதேயளவு பங்கு இந்திய ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஊடகங்களினாலும் ஆட்சியாளர்களை தீர்மானிக்க முடியும் என்கிற நிலை உறுதியாக இம்முறையும் வெளிப்பட்டிருக்கிறது.
அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு இரண்டாம் தலைமுறையிலுள்ள நரேந்திர மோடி பாரதிய ஜனதாவின் அடையாளமாக முன்னிறுத்தப்படுவது என்பது அந்தக் கட்சியின் இளையோரிடம் பெரும் எழுச்சியை பெற்றுக்கொடுத்தது. அந்த எழுச்சியை ஊடகங்கள் இன்னமும் பெருப்பித்துக்காட்ட மக்களும் அதை நம்ப ஆரம்பித்தார்கள். அத்தோடு, ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியின் பத்து ஆண்டுகால ஆட்சியின் மீதான வெறுப்பு மோடி அலையை சுனாமியாக்கியிருக்கிறது.
மோடி, தன்னைச் சுற்றி பலமான அணியொன்றை தோற்றுவித்தது போல காட்டினார். இந்தியா முழுவதும் பிரச்சாரங்களில் பங்கெடுத்தார். அதன்போது, மிகவும் துல்லியமான பிரச்சார முறையைக் கையாண்டார். எந்த இடத்திலும் தன்னுடைய உற்சாகத்தைக் கைவிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களை மிகவும் வேகமாக/மோசமாக விமர்சித்தார். அந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் கட்சியினால் பதிலளிக்க முடியவில்லை. இறுதித் தருணத்தில் பிரியங்கா காந்தி ஓரளவுக்கு மோடிக்கு எதிரான விமர்சனங்களை வைத்தார். ஆனால், அப்போது மோடி அலை சுனாமியாக மாறிவிட்ட தருணம். அந்த சுனாமிக்குள் பிரியங்காவினால் ஒன்றுமே செய்து கொள்ள முடியவில்லை.
மோடியின் வெற்றியை இந்திய வாக்காளர்களின் குறிப்பிட்டளவானர்கள் மாற்றத்துக்கான வழியாகக் கண்டார்கள். (என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது) ஏனெனில், அப்படியில்லை என்றால் இவ்வாறானதொரு அறுதிப்பெரும்பான்மை வெற்றியை பாரதிய ஜனதாக் கட்சியினால் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. அதுபோலவே, இன்னொரு விடயமும் மிகவும் உறுத்தலாக வெளிப்பட்டு நிற்கிறது. அது, மத அடிப்படைவாதம். அது, இனவாதத்திலும் பார்க்க அதிகமான உணர்ச்சியைத் தூண்டக்கூடியது. அதுவும், மோடியின் வெற்றியில் பிரதிபலிக்கிறது.
இந்தக் கட்டுரை எழுதப்படும் போது பாரதிய ஜனதாக் கட்சி மட்டுமே தனித்து 283 இடங்களை வெற்றி கொள்ளும் நிலையிலுள்ளது. அத்தோடு, பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணியாக மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 334 தொகுதிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே, புதிதாக கூட்டணிக்குள் கட்சிகளை அழைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏதும் இல்லை. அதுபோக, ஏற்கனவே கூட்டணியிலுள்ள கட்சிகளினால் எந்தவித அழுத்தங்களையும், நெருக்குவாரங்களையும் கொடுக்க முடியாதளவுக்கான அறுதிப்பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. இது, மோடியை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அசைத்துப் பார்க்க முடியாதளவு சக்தியை வழங்கும். அந்தச் சக்தி அடுத்த தேர்தலிலும் பிரதிபலிக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும். எனவே, மோடியின் தலைமையிலான ஆட்சியை இந்திய மக்கள் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மோடியில் தெரியும் மஹிந்த!
இந்தக் கட்டுரைக்கு ‘நமோ நாமம் வென்றது: தெற்காசியாவில் இரண்டாவது மஹிந்த உதயம்’ என்றுதான் தலைப்பு வைக்க எண்ணியிருந்தேன். ஆனாலும், அதை பின்னராக மாற்றிக் கொண்டேன். நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையும், தொலைக்காட்சி பேட்டிகளையும் அவதானிக்கும் போது இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்ப்பது போன்ற தோற்றப்பாடு எனக்கு உண்டு. ‘நாடொன்றின் பெரும்பான்மையினரின் எண்ணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்’ என்கிற விதையை ஆழமாக விதைத்துவிட்டு தேர்தல்களை எதிர்கொள்வது.
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகுந்த போராட்டங்களுக்கு பின்னரேயே மஹிந்த ராஜபக்ஷவினால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவிக்குச் செல்ல முடிந்தது. அதுதான் இன்று மஹிந்த ராஜபக்ஷவை சர்வ வல்லமையும் கொண்டவராக இலங்கையில் நிலை நிறுத்தியிருக்கிறது. தன்னுடைய முதலாவது ஜனாதிபதித் தேர்தலை அவர், சிங்கள பெரும்பான்மையினரின் அதிக வாக்குகளைக் கொண்டு வெற்றி கொண்டார். அந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தார். ஜே.வி.பி உள்ளிட்ட அப்போது படுபயங்கரமாக இனவாதம் பேசிய கட்சிகளையெல்லாம் இணைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டு வெற்றி கொண்டார். அதன்பின்னர், அதாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், இந்த அரசியல் சதுரங்கத்தில் மிகவும் இயல்பாக காய்களை வெட்டினார். பல நேரங்களில் அனைவருக்கும் பதவி வழங்கினார். ஆனால், அந்தப் பதவிகளுக்கு அதிகாரங்களை வழங்குவதை மட்டும், அவர்களுக்குத் தெரியாமலேயே மட்டுறுத்தினார். அப்படியான மனநிலைக்காரராகவே மோடியையும் என்னால் பார்க்க முடிகிறது.
அதுபோல, தன்னுடைய செயற்பாடு ஊடகத்தளத்தில் அல்லது சர்வதேச தளத்தில் பிழை என்று வரையறுக்கப்பட்ட பின்னும் அதை சரி என்று முழங்கி தன்னுடைய வாக்குகள் என்று நம்பும் மக்களை நம்ப வைப்பதில் இருவரும் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதையெல்லாம் கடந்து பெரும்பான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் என்ற தோற்றப்பட்டை தங்களுடைய உடல்மொழி மற்றும் பேச்சுக்களில் அதிகமாகப் பிரதிபலிக்கிறார்கள். அது, தெற்காசிய அரசியலில் மிகவும் முக்கியமானது. மஹிந்த ராஜபக்ஷ எப்படி அதிகாரத்தினை தன்னோடு வைத்துக் கொண்டு பொம்மைகளை உலாவ விட்டுள்ளாரோ, அதேபோன்றதொரு ஆட்சியை நரேந்திர மோடியும் நடத்தும் வாய்ப்புக்கள் உள்ளது. ஏற்கனவே, ‘அதிகாரத்தை பரவலாக்கும் சிந்தனை அற்றவர் மோடி’ என்கிற குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், மோடிக்கு கிடைத்திருக்கிற அறுதிப்பெரும்பான்மை என்கிற பலம், மிகையுச்ச அதிகாரத்தை அவரின்பால் வைத்துக் கொள்ள உதவும்.
முறிந்த காங்கிரஸின் கை!
காங்கிரஸ் கட்சி தன்னுடைய தோல்வியை சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது. கவர்ச்சியும், ஆளுமையும் அற்ற தலைவரொருவர் இன்றி காங்கிரஸ் கட்சி, ராஜிவ் காந்தியின் மறைவுக்குப் பின் தள்ளாட ஆரம்பித்துவிட்டது. இந்தியாவின் மாபெரும் கட்சியில் மக்களை வென்றெடுக்கக் கூடிய ஒருவருக்கான இடைவெளி பலமாகவே உருவாகிவிட்டது.
ராகுல் காந்தி தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் போது இளைஞர்களை இலக்கு வைப்பதாக சொல்லிக்கொண்டே வந்தார். ஆனால், அவரினால் தன்னுடைய தாயாரிடமிருந்தே அதிகாரங்களை சரியாக பெற்று கட்சியை கையாளத் தெரியவில்லை. ராகுல் காந்தியின் அரசியல் ஆற்றலின்மை சிறிய காலத்துக்குள்ளேயே வெளிப்பட்டது. மக்களையும், ஊடகங்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள எப்போதுமே ராகுல் தயாராக இருந்ததில்லை. அல்லது, அது அவருக்கு வரவில்லை. பல நேரங்களில் தாயின் நிழலில் வலம் வரும் செல்லப்பிள்ளைத் தோற்றத்தைக் கொடுத்தார்.
அதிரடி முடிவுகளை அச்சமின்றி எடுக்கும் இந்திரா காந்தியின் பரம்பரையில் ராகுல் காந்தி குறைவளர்ச்சியுள்ள அரசியல் குழந்தையாகவே இருந்தார். இன்னமும் இருக்கிறார். தோல்விகள் அவருக்கு பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிடும் அல்லது, அவரின் ஆளுமையில் வீரியத்தை ஏற்படுத்தி விடும் என்று எல்லாம் சிந்திக்க முடியாது.
தேர்தலொன்றை வெற்றி கொள்வதற்கு பிரசாரம் மட்டுமே போதுமென நம்பும் தலைவரையே காங்கிரஸ் கட்சி தற்போது கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் நேற்று (மே15) நடைபெற்ற கூட்டமொன்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரத்திலுள்ள குறைபாடுகள் குறித்து குறைபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியாவை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி தன்னுடைய தோல்விக்கு தேடிய காரணம் எவ்வளவு மோசமானதாக இருக்கின்றது. அதை, அந்தக் கட்சியின் தலைவி இறுகிய முகத்துடன் கட்சி முக்கியஸ்தர்களிடம் சொல்வதென்பது மிகவும் அபத்தமானது.
ரணிலை ஒத்த ராகுல்!
ராகுல் காந்தியை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடம் ஒப்பிடத் தோன்றுகிறது. ரணில் விக்ரமசிங்க சில நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவிலிருந்து அரசியல் பயிற்சி விரிவுரைகளில் பங்கேற்றுவிட்டு நாட்டுக்குள் வந்திருக்கிறார். அவரின் அரசியல் அனுபவம் 50 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது வேறு கதை. ஏன், ராகுல் காந்தியும், ரணில் விக்ரமசிங்கவும் ஒரே மாதிரி தோன்றுகிறார்கள் என்றால், மக்களிடம் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தும் வல்லமை இருவரிடத்திலும் இயல்பாக இருப்பதில்லை. சுதந்திரக்குப் பிந்திய இலங்கை, இந்திய தேசியக் கட்சிகள் என்கிற அபிமானம் மட்டுமே அவர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் பேச்சில் அவ்வளவு முதிர்ச்சி இருப்பதில்லை. ஆனால், ரணிலின் பேச்சில் முதிர்ச்சி இருந்தாலும், அது மக்களை வெற்றி கொள்ள வைப்பதாக இருப்பதில்லை. அதுபோகவும், இருவருடைய உடல்மொழிகளும் நாட்டின் பெரும்பான்மையினரால் அவ்வளவு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இல்லை.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்று 20 வருடங்களுக்கும் மேலாகிறது. அதற்குள் 18க்கும் அதிகமான தேர்தல்களில் தோற்றுவிட்டார். ஆனாலும், கட்சியின் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுக்கவும் தயாராகவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கட்சியின் முக்கியஸ்தர்கள் மஹிந்தவோடு வேண்டா வெறுப்பாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படியான நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், ராகுல் காந்தியினால் எதிர்வரும் 10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்களை எட்டிப் பிடிப்பதென்பது இயலுமானதாக இருக்காது.
ஜெயலலிதாவின் கலைந்த கனவு!
இந்திய அரசியலில் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி இப்போதைக்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தமிழ்நாட்டில் மீண்டும் ஏகமாக ஜெயலலிதா ஜெயராமை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களின் மனங்களில் என்ன இருக்கின்றது என்பதை அதிக நேரங்களில் புரிந்து கொள்ள முடிவதில்லை. பிரதான கட்சிகளின் எல்லா கூட்டங்களிலும் கூட்டம் பெருக்கெடுக்கும். ஆனால், முடிவுகள் அப்படியே ஒருபக்கமாக இருக்கும். அண்மைய மூன்று நான்கு தேர்தல்களில் அதையேதான் பிரதிபலித்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தால், பலமாக அந்தக் கட்சியை ஆதரிப்பது. இல்லையென்றால் மற்றக்கட்சியை பெரும்பான்மையாக ஆதரிப்பது.
ஜெயலலிதாவை இறுமாப்பின் அடையாளமாக இந்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக முன்னிறுத்தி வந்திருக்கின்றன. அதில், பெருமளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், மாநிலமொன்றின் கட்சியை தன்னுடைய சுண்டுவிரல் அசைவுக்குள் வைத்துக் கொள்கின்ற வல்லமை என்பது பெரும் ஆளுமை சார்ந்ததாகவும் கொள்ளப்படுகிறது. தன்னுடைய 70 ஆண்டுகளையும் தாண்டிய அரசியல் அனுபவத்தில் மு.கருணாநிதியினால் செய்ய முடியாததை, ஜெயலலிதா இலகுவாக செய்கிறார். பல நேரங்களில் அது, கட்சிக்காரர்களை அடிமைகளை நடத்துவது போலவே இருக்கிறது. அதை மக்கள் உணர்ந்து கொள்ளாமலும் இல்லை. ஆனாலும், ஜெயலலிதா சொன்னதைச் செய்யக் கூடியவர் என அவரில் மக்கள் நம்பிக்கை கொள்ளவும் அதுவே காரணமாகவும் இருக்கிறது என்றும் கொள்ளலாம்.
மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் பிரதமர் ஆகலாம் என்கிற கனவு ஜெயலலிதாவுக்கு பலமாகவே இம்முறை இருந்தது. அதை, அவர் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், தன்னுடைய கட்சிக்காரர்களைக் கொண்டு பலமாக முன்னிறுத்தினார். அந்தக் கோஷமும் தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, 37 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றது. ஜெயலலிதாவின் பிரதமர் கனவு இந்தியாவின் மற்றைய மாநில மக்களினால் இம்முறை கலைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்காலம் குறித்த கனவும் அவரிடம் எஞ்சியிருக்கும் என்று நம்பலாம்.
ஸ்டாலின் வாங்கிய வரம்!
மு.க.ஸ்டாலின்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் தன்னுடைய ஒட்டுமொத்தமான திட்டமிடலுடனும், ஆளுமையுடனும் எதிர்கொண்ட தேர்தலில் படுதோல்வியடைந்திருக்கிறார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக அரசியல் தலைவராக ஸ்டாலினே எதிர்காலத்தில் இருப்பார். அதில், எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், (உத்தியோகப்பற்றற்ற ரீதியில்) அவர் தலைமையில் எதிர்கொண்ட தேர்தலில் தோல்வி இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் மட்டுமல்ல, மக்களே கூட எதிர்பார்க்கவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி தன்னுடைய இறுதித் தேர்தல் என்று அறிவித்த பின்னரும் கூட தமிழகத்தை நீண்ட காலமாக ஆட்சி செய்தவரின் கூற்றை மக்கள் கண்டு கொள்ளவில்லை. இது, திராவிட அரசியலில் பெரும் பின்னடைவாக கொள்ளப்படுகிறது. ஆனாலும், திராவிட முன்னேற்றக் கழகம் இம்முறை கண்ட தோல்வி போன்று ஏற்கனவே இரண்டு தடவைகள் அனுபவத்தைக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டெழுந்து வரும். அதில், யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஸ்டாலினின் தலைமைத்துவம் மீதான அதிருப்திகள் இன்னமும் வலுக்கக் கூடும். கருணாநிதி குடும்ப அரசியலுக்குள் ஸ்டாலினிக்கு தலைவலியாக இருந்த மு.க.அழகிரி வெட்டி எறியப்பட்ட பின்னர் கண்ட படுதோல்வி இது. அதிகமாகவே வலிக்கச் செய்யும்.
இறுதியாக,
தெற்காசிய அரசியல் சூழல் மாற்று அரசியல் சக்திகளை அவ்வளவாக அனுமதிப்பது இல்லை. ஊழல் பெருச்சாளிகளாக தேசியக் கட்சிகள் வலம் வந்தாலும், அவற்றையே மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றன. அதற்கு மக்கள் மட்டுமே காரணமல்ல. மாற்று அரசியல் கட்சிகளாக தங்களை முன்னிறுத்துபவர்களும் இயல்பில் தேசியவாதக் கட்சிகளினையே பிரதிபலிக்கின்றார்கள். அதுதான் அடிப்படைப் பிரச்சினை. இங்கு தேசியவாதமும், மதவாதமும் இன்றி அரசியலைச் செய்ய முடியாது. அதுதான், இந்தியாவில் இம்முறையும் வெளிப்பட்டிருக்கிறது. காங்கிரஸின் தோல்வி என்பது தேசியவாதத்தின் தோல்வி இல்லை. மாறாக, மதவாதத்துடன் சேர்ந்த தேசியவாதத்தின் வெற்றி. அதனையே, பாரதிய ஜனதாகவும், மோடியும் அறுவடை செய்திருக்கிறார்கள்.
மோடி அலை சுனாமியாக உருவெடுத்து வெற்றியை சுருட்டிக்கொண்டது உண்மைதான். அந்த வெற்றி மக்களின் வெற்றியாக அமைந்தால் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், எந்தத் தேர்தலிலும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் வென்றதாக வரலாறு கிடையாது. பொறுத்திருந்து பார்க்கலாம், “நமோ நாமம்“ இந்தியாவை எப்படி ஆள்கின்றது என்று!
-4தமிழ்மீடியா: புருஜோத்தமன் தங்கமயில்

0 Responses to மோடி அலை இந்தியாவை வென்றது!