Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் ஆட்சியை இறக்கியதே தமிழருக்கு அவர் செய்த பெரு நன்மைதான்.

இந்தியாவின் அரசியலே ஈழத் தமிழ் மக்களின் கண்ணீருக்கு முக்கிய காரணம், இந்தியா அல்லாத வேறொரு நாடு அருகில் இருந்திருந்தால் இதுபோல வரலாற்றுத் தவறு நடந்திருக்காது.. இது ஓர் ஆய்வு.

இந்த அவல நிலையில் மோடி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவார்…? இதுதான் இந்திய தேர்தலின் பின் புலம் பெயர் நாடுகளில் எழுந்துள்ள கேள்வி..

மோடி ஆட்சிக்கு வருவார் என்பதை முன்கூட்டியே அறிந்து காங்கிரஸ் அவசரமாக இரு காரியங்களைச் செய்து முடித்திருக்கிறது..

01. மோடி அடுத்த தேர்தலைச் சந்திக்கும்வரை ஐந்தாண்டு காலம் புலிகளுக்கு இந்தியாவில் தடை.

02. சிறீலங்கா அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 16 தமிழ் அமைப்புக்களுக்கும், 424 தமிழர்களுக்குமான தடையை இந்தியாவையும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளச் செய்தது.

செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்க அவர்கள் செய்த முக்கிய விடயங்கள் இவை இரண்டும்தான்.

இந்த இரண்டு விடயங்களையும் மோடி ஆட்சி மாற்றினால்… காங்கிரஸ் நீதிமன்று செல்லும்.. வழக்கு முடிவடைய அடுத்த தேர்தல் வந்துவிடும்..

இந்த முடிவுகளை ஒரு பாதுகாப்பிற்காக காங்கிரஸ் இயற்றினாலும், முன்னதாகவே புலிகள் தலைவரையும், அவர் சார்ந்த கொள்கைகளையும் ஆதரிக்க மாட்டோமென்று பா.ஜ.க தெரிவித்துவிட்டது.

இருந்தாலும் பா.ஜ.கவை இந்த விடயத்தில் காங்கிரஸ் நம்பவில்லை என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

ஏற்கெனவே வாஜ்பாய் காலத்தில் ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த பா.ஜ.க ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரசின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்து காட்டவில்லை.

இந்திய கொள்கை வகுப்பாளரின் திட்டங்களின் அடிப்படை அச்சாணியை மாற்ற பா.ஜ.கவினால் முடியவில்லை..

அப்படியிருக்க இப்பொழுது மட்டும் காங்கிரஸ் ஏன் அவசரப்பட்டது..

காரணம் அன்று பா.ஜ.கவிற்கு இல்லாத பெரும்பான்மை இப்போது பா.ஜ.கவிற்கு கிடைத்துவிடும் என்று காங்கிரசிற்கு தெரியும்.

வாஜ்பாய் – எல்.கே.அத்வானியின் பா.ஜ.க அல்ல இப்போது வந்திருப்பது இது மோடியின் பா.ஜ.க மிகவும் வித்தியாசமானது.

ஈழத் தமிழருக்காக இல்லாவிட்டாலும், காங்கிரசை பெரும் பொறிக்கிடங்கில் மாட்டிவிட அவர் ஈழத் தமிழர் விவகாரத்தை கையிலெடுக்க வாய்ப்புள்ளது.

இந்த எண்ணங்களுக்கு ஆதாரமாக இப்போது இரண்டு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன..

01. பா.ஜ.க அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது, அதன் ஆட்சியை ஆட்டுவதற்கு அடுத்த ஐந்து வருட காலத்திற்கு காங்கிரசால் முடியாது… நல்லாட்சி தந்தால் பத்தாண்டு காலமும் நீடிக்கலாம் பா.ஜ.க ஆட்சி..

02. தமிழகத்திலும் ஈழத் தமிழினத்திற்கு ஆதரவான கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன..

இப்படியொரு வாய்ப்பு 2009 தேர்தலில் ஏற்பட்டிருந்தால் தமிழர்கள் தப்பியிருப்பார்கள், இப்போது ஐந்தாண்டு கடந்து அந்தத் தாமரை மலர்ந்துள்ளது.

நரேந்திரமோடியும், ஜெயலலிதாவும் நட்புடையவர்கள், தமது அரசுடன் மோடி நட்பாக செயற்படுவார் என்று தமிழக முதல்வர் இன்று கருத்துரைத்துள்ளார்.

இதற்கு என்ன காரணம்…?

தமிழக முதல்வருக்கும் காங்கிரசிற்கும் கடந்த காலங்களில் நல்லுறவு நிலவவில்லை, காரணம் காங்கிரஸ் விரும்பாத பிரேரணைகளை எல்லாம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.

01. சட்டசபையில் சிறீலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி காங்கிரசை கதிகலங்க வைத்தவர்..

02. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஈழத் தமிழ் மக்கள் பிரிந்துபோக ஆவன செய்ய வேண்டுமெனக் கோரியவர்.

03. பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் போட்டவர்..

ஈழத்தமிழருக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் போட்ட முதல்வர்களில் இவருக்கு இணையானவர் எவரும் இல்லை.

இவரோடு நரேந்திரமோடி இணைந்தால் என்னவாகும்.. நிலமையில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படத்தான் செய்யும்.

இருப்பினும் தந்திரசாலியான நரேந்திரமோடி இலங்கைப் பிரச்சனையில் யாதொரு கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவிக்காமலே தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியவர்.

தமிழருவிமணியன், வை.கோபாலசாமி, ராமதாஸ் அவரோடு நட்பாக உள்ளனர், ஈழத்தமிழர் விவகாரத்தில் அதே கருத்தோடு அ.தி.மு.கவும் இருக்கிறது – திமுகவும் அதற்கு தடையாக இருக்காது.

தமிழகத்தில் காங்கிரஸ் குரல் ஏறத்தாழ அஸ்த்தமனமாகிவிட்டது..

இந்த நிலையில்… மோடிக்கு ஈழத்தமிழருக்கு உதவ சில வாய்ப்புக்கள் உள்ளன :

01. தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை அந்த அரசை மதித்து அங்கீகரிக்க வழியுள்ளது, தமிழகத்தில் கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன என்று சாக்குப்போக்குக் கூற இனி இடமில்லை.

நான் மாநில அரசை மதித்து நடக்கிறேன் அங்கு போய் கேள் என்று காங்கிரசுக்கு அவர் பதில் கூறலாம் -

02. காங்கிரசுடன் செய்த இரகசிய ஒப்பந்தங்களை வெளியிடுவேன் என்று மகிந்த அரசு மிரட்டினாலும் அதற்கு பணிய வேண்டிய தேவை மோடிக்கு இல்லை.

03. மேலும் கடும்போக்கு பௌத்த மதவாதியான மகிந்தவும், கடும்போக்கு இந்துத்துவா மோடியும் இணைய வாய்ப்பில்லை.

04. 1983 யூலையில் இருந்து இலங்கை தொடர்பாக நேரு குடும்பம் எடுத்த கொள்கைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருப்பதால் ஒரு மாற்று நிலைப்பாடு எடுத்தால் எப்படியிருக்குமென கூரிய மூளையுள்ள மோடி சிந்திக்கலாம்.

05. கண்ணுக்குத் தெரியாத அருவமாக தாய்லாந்து, சீனா, பர்மா என்று பௌத்த நாடுகள் ஓர் அணியாக உருவெடுப்பதை அவருடைய இந்துத்துவா கண்கள் கண்டிப்பாக அடையாளம் கண்டிருக்கும். சிறீலங்காவில் உடைக்கப்படும் இந்துக் கோயில்களும் அங்கு தலைவிரி கோலமாக ஆடும் மதவாதமும் அவருக்கு தெரியாத கூத்துக்கள் அல்ல.

இந்த ஐந்து காரணங்களும் மோடி ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க உதவும்.

இதை ஈழத் தமிழருக்கு முன்பே சரியாக எடைபோட்டவர் மகிந்த ராஜபக்ஷதான், அதுதான் போர்க்குற்ற விசாரணை மட்டும் இல்லை மற்ற அனைத்தையும் வழங்கத் தயார் என்று தனது ஏமாற்று வார்த்தைகளை மோடியை நோக்கி வீசியிருக்கிறார்.

ஆனால் மோடி அறிவு குன்றிய வட இந்திய அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல குஜராத்தில் இருந்து இந்திய அரசியலை சரியாக எடைபோட்டு, குறிவைத்து அடித்து வீழ்த்தியிருக்கிறார்.

இருப்பினும்; மோடி முன் இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் ஈழத்தமிழர் விவகாரம் ஒரு சிறிய பிரச்சனைதான்..

மேலும் காங்கிரசைப்போல ஈழத் தமிழரைப் பழி தீர்க்க வேண்டுமென்ற கோபம் அவருக்கு இல்லை.

எனவே இந்த விடயத்தில் அவர் நிதானமாக சிந்திக்க வாய்ப்புண்டு.

மிகவும் கெட்டித்தனமான நிர்வாகியான அவர் ஈழத் தமிழர் விவகாரத்தின் கருவூலத்தில் கை வைக்க முன்னர் புலம் பெயர் தமிழ் மக்களையும் இந்தியாவையும் பிளவுபடுத்த உருவாக்கப்பட்டுள்ள வியூகங்களை மாற்றினால் மற்றய விடயங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்.

அவர் அதைச் செய்வார் என்றே கருதப்படுகிறது.. இந்தியாவுடன் ஈழத் தமிழர் நட்பாக மாறக்கூடிய ஒரு சூழலை அழிக்க வேண்டிய வன்மம் எதுவும் அவர் மனதில் இல்லை.

இதையெல்லாம் சரியா உணராமல்…

மோடியும் ஒன்றுதான் காங்கிரசும் ஒன்றுதானென்று நம்மில் சிலர் விரக்தியில் பேசலாம்… எழுதலாம்..

ஆனால்.. கூர்ந்து சிந்தித்துப்பார்த்தால்..

காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே ஈழத் தமிழரைப் பிடித்திருந்த இருளில் பாதி விலகிவிட்டதென்பதன் அடையாளம் என்பதை புரிதல் வேண்டும்..

காங்கிரசை ஆட்சியில் இருந்து இறக்கியிருப்பதைவிட வேறென்ன பெரிய நன்மையை அவர் செய்திருக்க முடியும்..

வரும் ஐந்தாண்டு காலம் ஈழத் தமிழருக்கு மேலும் பிரகாசமாக இருக்க வேண்டும், அது தானாக பிரகாசிக்காது ஈழத் தமிழர்கள் நம்பிக்கையுடன் சர்வதேச தரத்தில் செயற்பட்டால் சாத்தியமாகும்.

மற்றவர்கள் சொன்னார்கள் செய்ய முடியவில்லை ஆனால் மோடி சொல்லவில்லை ஈழத் தமிழருக்கான முதல் பெரு நன்மையை அவர்தான் செயல் முறையில் செய்திருக்கிறார்.

அலைகள்

0 Responses to நரேந்திரமோடியின் வரவு ஈழத் தமிழருக்கு நன்மை தருமா..?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com