Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை ஈச்சிலம்பத்தை பகுதி கடலோர கிராமங்களில் இன்று செவ்வாய்க்கிழமை இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ரி- 56 ரக துப்பாக்கி மீட்பு மற்றும் சந்தேகத்திற்குரிய இருவரது நடமாட்டம் அவதானிக்கப்பட்டதையடுத்தே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

ஈச்சிலம்பத்தை பகுதியிலுள்ள கடலோர கிராமங்களான வாழைத்தோட்டம், புண்ணையடி, முட்டுச்சேனை, கல்லடி மற்றும் இலங்கைத்துறை ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக இந்த தேடுதல் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 4 மணி தொடக்கம் காலை 6 மணி வரை தங்கள் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை அந்த பகுதியிலுள்ள வழிபாட்டு தலமொன்றில் கூடுமாறு பாதுகாப்புப் படையினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தில் கூடிய பொது மக்களிடம் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டங்கள் தொடர்பில் விழிப்பாக இருப்பதோடு தகவல் தர வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்திக் கூறப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
கிராமங்களை விட்டு எவரும் வெளியிடங்களுக்கு செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் நண்பகல் வரை பிரதேசத்தின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதேவேளை, இந்த பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவலில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் லங்கா பட்டுனா (இலங்கைத்துறை முகத்துவாரம்) கடற்படை முகாமுக்கு அருகாமையில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளும் பையொன்றில் போடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு முன்னதாக கடற்படை வீரர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான இருவரது நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டு அவர்களை கடற்படை நெருங்க முற்பட்ட வேளை தம்வசம் வைத்திருந்த பையொன்றை வீசிவிட்டு தப்பி ஒடிவிட்டனர். அந்த பையிலே குறித்த ரி –56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனையடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை என கூறப்பட்டுள்ளது.

போருக்கு முன்னர் ஈச்சிலம்பத்தை பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசமாகும். போருக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சுற்றிவளைப்பு தேடுதல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to திருகோணமலை கடலோரக் கிராமங்களில் இராணுவம், கடற்படையினர் இணைந்து தேடுதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com