Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரசின் இன அழிப்பில் ஈழத் தமிழினம் எரிந்து அழிந்துகிடக்கிறது. அவர்களை அரவணைத்து ஆறதலளித்து இழந்த உரிமைகளை மீட்டெடுக்க ஆதரவு வழங்குவதற்கு பதிலாக நீங்களும் ஒட்டுமொத்தமாக வெட்டிவீழ்த்திவிடாதீர்கள் திரு. நரேந்திர மோடி அவர்களே!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்டுகொலையாளியான ராஜபக்சேவை தங்களது பதவியேற்பு நிகழ்வுக்கு அழைத்திருப்பதானது ஈழத்தமிழினத்தின் அழிவுகளையும் கண்ணீரையும் நீங்கள் இன்னமும் கண்டுகொள்ளவில்லையா என்கின்ற எண்ணத்தைதான் உலகத் தமிழ்மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. பெரு வலியை உண்டாக்கியுள்ளது.

சிங்கள அரசுகளால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு இன அழிவுக்கு
உள்ளாக்கப்பட்டு வந்த ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயத்தை நிராகரித்து
இந்தியாவும் உலக நாடுகளும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் பயங்கரவாதம் என்று
வர்ணிக்க

சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீதுகொடிய இனவழிப்பை நடத்தி
முடித்துள்ளது. இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஈழ மண்ணில் சிங்களப் படைகளால்
மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் வலிகள் காலம் நீண்டு சென்றாலும் கூட தமிழ்
மக்களின் மனங்களிலிருந்து என்றும் நீங்காது.

முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான எங்கள் உறவுகள் கொல்லப்பட ஏனையவர்கள்
வதைமுகாம்களிலும் தடுப்பு முகாம்களிலிலும் இன்றும் அவலவாழ்வை
வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஐ.நா மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சிங்களப்படைகளிடம் சரணடைந்த எங்கள்
உறவுகள் எவ்வாறு சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள் எவ்வாறு படுகொலை
செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்லிப் புரிந்துகொள்ள
வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று நினைக்கின்றோம்.

நிராயுத பாணிகளாக நின்ற போராளிகளை கைது செய்து, நிர்வாணமாக்கி,
கண்களையும், கைகளையும் கட்டி, தலையிலே சுட்டுப் படுகொலை செய்ததோடு,
பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொன்று குவித்தது இனவெறி சிங்கள
அரசு.

எங்களின் வலியை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா? அல்லது இன்னும் புரிந்துகொள்ளவில்லையா?

சிங்கள இனவெறி படைகளால் சிதைக்கப்பட்ட எங்களது குலப்பெண்களின்

உடலங்களை உலகம் முழுவதும் திரையிட்டுக் காட்டுகிறதே சனல் 4 உள்ளிட்ட
ஊடகங்கள். இதனை நீங்கள் பார்க்கவில்லையா?

இத்தனை கொடுமைகளையும் செய்தவன் ராஜபக்சதானே. அவனின் படைகள் தானே.

குஜராத்திலோ அல்லது உங்கள் உறவுகளில் ஒருவருக்கோ இந்த நிலை ஏற்பட்டால்
கொன்றவனை, கொடுமை செய்தவனை வரவேற்று மதிப்பளித்து விருந்தளிப்பீர்களா?

எங்களது உறவுகளின் இத்தனை அவலத்துக்கும் காரணம் ஆட்சியில் இருந்த
காங்கிரசும் அவர்களுக்கு துணைநின்றவர்களும் இன்று வரலாற்றிலிருந்தே
காணாமல் போயிருக்கின்றார்கள்.

தமிழக மக்கள் சரியான முடிவெடுத்துமுதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்
கரங்களைப் பலப்படுத்தியுள்ளனர். அவர் மீதான நம்பிக்கை உலகத்தமிழ்
மக்களிடம் உச்சம் பெற்றுள்ளது.

சிறிலங்கா அரசு மீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும். சிங்களப் படைகளுக்கு
இந்தியாவில் பயிற்சி வழங்கக்கூடாதென பல தீர்மானங்களை தமிழக அரசு
நிறைவேற்றியிருக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களும். உலகநாடுகளும் இனப்படுகொலையாளி மகிந்தவையும்
அவனது கும்பலையும் தண்டிக்கவேண்டும்,ஈழத்தமிழர்களுக்கு நீதி
கிடைக்கவேண்டும் என்று குரலெழுப்ப உங்களுக்கு மட்டும் எப்படி ஐய்யா மனம்
வந்தது ராஜபக்சேவிற்கு கைகொடுத்து வரவேற்று மதிப்பளித்து விருந்தளிக்க.

இலங்கையை ஏன் என்று தட்டிக் கேட்பதற்குரிய அதிகாரத்தில் அமரப்போகும்
நீங்கள் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் இந்த நடவடிக்கையை கைவிட்டு
இன அழிப்புக்கு ஆளாகி நிற்கும் தமிழர்களின் பக்கமும் தர்மத்தின்
பக்கமும் ஆதரவாக நிற்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

-நன்றி-

வ.கௌதமன்
இயக்குனர்

0 Responses to தமிழர் மனங்களை நீங்களும் ரணமாக்காதீர்கள்: மோடிக்கு இயக்குனர் கௌதமன் வேண்டுகோள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com