Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது காலம் கடந்த செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அனுமதி பெற்ற அரசாங்கம் மோதலை நடத்தியது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அரசாங்கம் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.

குறித்த பிரேரணையை எப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பது தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்று மோதல்களை முன்னெடுக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான 3 தடவைகள் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதன்போது, அது குறித்த பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச விசாரணைக்குழு இலங்கைக்கு எதிராக நியமிக்கப்பட்டதும், அரசாங்கம் பாராளுமன்றத்தை நாடுவது சரியல்ல. எனவே, அரசாங்கத்தின் பிரேரணையை ஆதரிக்கப்போவதில்லை. அது தவிரவும், அதுபற்றி விவாதிப்பதும் பலனற்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கோரும் அரசாங்கத்தின் பிரேரணை மீது எதிர்வரும் 17, 18ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றா அரசாங்கம் மோதலை நடத்தியது: சம்பந்தன் கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com