Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக்குலுங்குகின்றன. நாமும் இக்கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் என்று விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையொட்டி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மழையின் வருகைக்கு மரங்கள் அவசியம். இன்று உலகளாவிய ரீதியில் பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து காலநிலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ள, வளியில் அதிகரித்துச் செல்லும் கரியமில வாயுவை உறிஞ்சுவதற்கும் மரங்கள் அவசியம். ஆனால், துரதிர்டவசமாக எமது இயற்கைக்காடுகள் பல்வேறு காரணங்களால் மிகப் பெருமளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டன. இலங்கைத் தீவில் பிரித்தானியர்கள் காலடி பதித்தபோது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 80 விழுக்காடு அளவில் செழித்திருந்த இயற்கைக்காடுகள் இன்று 23.87 விழுக்காடுகள் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டிருக்கிறது.

போராட்ட காலத்தில் பாதுகாக்கப்பட்ட வடக்கின் காடுகள்கூட இன்று தோல் இருக்கச் சுளை பிடுங்கும் கதையாகப் படைப்பலம் மிக்க அதிகாரவர்க்கத்தால் கபளிகரம் செய்யப்படுகிறது. இலங்கையின் வரண்ட வலயமான வடக்கில் காடழிப்பின் காரணமாகவே வெம்மையின் கொடுமையை தற்போது நாம் கூடுதலாக அனுபவிக்கவேண்டியுள்ளது. இதனால் இயற்கைச்சூழலின் சமநிலையைப் பேணுவதற்கும், இதனூடாக வடக்கில் எமது எதிர்காலச் சந்ததிகளின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும் மரநடுகையை ஒரு பேரியக்கமாகவே மேற்கொள்ளவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம். வடக்கில் மரநடுகையைப் பெருமளவில் முன்னெடுப்பதற்குத் தன்பெயரிலேயே ‘கார்’ என்று மழையின் பெயரைக்கொண்ட கார்த்திகை மாதமே மிகப்பொருத்தமான மாதமாகும். இம்மாதப்பகுதியிலேயே வடக்கில் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகிறது.

மேலும், தமிழர்கள் தம் வீடுகள் தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாளையும் இம்மாதம் தன்னகத்தே கொண்டுள்ளதால் தமிழர்களின் புனிதமான மாதமாகவும் கார்த்திகை கருதப்படுகிறது. இதன் பின்னணியிலும் மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழ்மக்களுக்கு மரநடுகையை மேற்கொள்ள மிகப்பொருத்தமான மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது.

இவற்றின் அடிப்படையிலேயே வடக்கு மாகாணசபை, கார்த்திகை 01 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியை வடமாகாண மரநடுகை மாதமாகத் தேர்வு செய்துள்ளது. பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்;த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக் கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக் குலுங்குகின்றன. நாமும் இக்கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம். ஆளுக்கொரு மரம் நடுவோம்; நாளுக்கொரு வரம் பெறுவோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம்! - அமைச்சர் ஐங்கரநேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com