Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது வரலாற்றில் நவம்பர் மாதத்திற்குரிய பக்குவத்தை மரம் நாட்டிப் பறைசாற்றுகின்றோம். மறைந்த மனிதர்கள் போலாம் மறுத்தொதுக்கப்பட்ட மரங்களும். மறுபடியும் மரங்கள் யாவும் மிகுந்திருக்க மரநடுகையில் மதர்த்து நிற்கின்றோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மரநடுகை மாதத்துக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை நாரந்தனை கணேச வித்தியாலத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று முக்கியமான ஒரு கைங்கரியத்தினுள் உள் நுழைகின்றோம். மழைக்காலம் வந்துள்ளதால் எமக்கு மிக அத்தியாவசிமாக வேண்டியதான மரங்களை நட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

கடந்த சில வருடங்களாக மழை வீழ்ச்சியில் பின்னடைவைச் சந்தித்து வந்துள்ளோம். அதற்கான முக்கிய காரணம் எம்மால் தறித்து, வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட பல நீண்ட கால மரங்களே. முன்னெல்லாம் ஏ 9 வீதியால் நாங்கள் வரும் போது அடர்ந்த காடுகள் தெருவின் இரு பக்கமும் இருப்பதைக் காணலாம். வானளாவும் மரங்களைக் கண்டு எம் மனங்கள் குதூகலிப்பன.

இப்பொழுதோ நிலைமை மாறிவிட்டது. மரங்கள் பல தறித்து வெட்டி எடுத்துப் போயாகிவிட்டன. போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ 9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் கொண்டு வந்து குடியேற்றிய அந்நியர்களும் குடியிருக்கின்றார்கள். குடிமக்கள் செலவில் குளிர்காய்கின்றார்கள் அவர்கள்.

எனவே, நாம் எமது வனச் செறிவை உறுதிப் படுத்த வேண்டியுள்ளது. அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாகப் புதிய மரங்களை வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அரசாங்கம் நவம்பர் 15ஆம் திகதியை தேசிய மரம் நாட்டு நாளாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. நாமோ இந்த மாதம் முழுவதையுமே மரம் நடுகை மாதமாக அறிமுகப் படுத்தியுள்ளோம். எம் வரலாற்றில் இம்மாதத்திற்குரிய பக்குவத்தை மரம் நாட்டிப் பறைசாற்றுகின்றோம்.

பன்னிருகரனின் பதம் பார்த்துப் பணிகின்றோம். மறைந்த மனிதர்கள் போலாம் மறுத்தொதுக்கப்பட்ட மரங்களும். மறுபடியும் மரங்கள் யாவும் மிகுந்திருக்க மரநடுகையில் மதர்த்து நிற்கின்றோம்.

நாங்கள் மரம் நாட்டுகையில் சில பல விடயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்பேர்ப்பட்ட மரம் ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குஞ் சூழலுக்கும் பொருத்தமாகும், எந்த மரத்தை வளர்ப்பதால் அங்கு வாழும் மக்களுக்கு அது மிக அதிக நன்மை பயக்கும், பழவகை மரங்களா, நிழல் தருமரங்களா அல்லது விறகுக்கு உதவுந் தருக்களா உசிதமானது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

பின்னர் நாட்டிய மரத்தைப் பராமரிப்பது எப்படி, யார் நீரூற்றுவது, நாடிச் செல்லும் மாட்டுக் கூட்டங்களிடம் இருந்து அதனைப் பாதுகாப்பது எப்படி, அம்மரத்தின் விபரங்கள் விவரப் பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ளதா போன்ற விடயங்களை ஆராய்ந்து பார்த்து முறையான தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டும்.

மேலும் சூழல் மாசுபட்டுப் போவதைத் தடுக்கவும் மரங்கள் வேண்டியுள்ளன. அதுமட்டுமல்ல. எமது கோளின் மிக முக்கிய வளமான வனமர இருக்கைகள் உலகின் சுமார் 2 சதவிகித நிலத்தை மட்டுமே மூடி நிற்கின்றன. இவ்வுலகில் காணப்படும் ஜீவன்களில் பாதிக்கு மேற்பட்டவை இவ்விடங்களையே தமது வாழ்விடங்களாக வைத்துள்ளன.

ஆகவே எம்மைச் சுற்றியுள்ள தாவரங்களாவன பறவைகள், மிருகங்கள், மற்றும் ஜந்துக்கள் பலவற்றிற்கு வாழ்விடங்களாக அமைவதை நாம் மறத்தல் ஆகாது. மனிதன் மரந் தறித்து, நிலத்தில் மண் நிரப்பி, மாட மாளிகைகள் அமைப்பதால் அவன் சுயநலத்துடன் வாழலாம். ஆனால் சுற்றுச்சூழலுக்கு அவன் பகைவன் ஆகின்றான் என்பதை நாம் மறத்தல் ஆகாது.

இதனால்தான் பலர் பல்வித பாரிய தொழில் அகங்களைத் தோற்றுவிக்க எம்மை நாடி வந்திருந்தாலும் நாம் மிகக் கவனமாக அவதானமாக அவற்றின் சுற்றுச் சூழல் பாதிப்பைப் பற்றிக் கவனித்துப் பார்த்தே உள்வர உதவுகின்றோம். பாரிய தொழில் அகங்கள் பலருக்கு வாழ்வாதாரங்களை வழங்குவன என்பது உண்மைதான். ஆனால் குறுகிய கால நலன்களையே குறியாக வைத்து வருங்காலச் சந்ததியினரை நாம் வருத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது.

ஏற்கனவே எமது நிலங்கள், சுற்றுச் சூழல், நிலத்தடி நீர் ஆகியவை மாசடைந்துள்ளன. உதாரணத்திற்கு மின்சாரம் வேண்டுமென்றதால் பாரிய எண்ணைத் தேக்கக் கிடங்குகளைச் சுண்ணாகத்தில் வடிவமைத்ததால் இன்று எண்ணையானது நிலத்தினுள் கசிந்து சென்று சுண்ணாகத்தில் மட்டுமல்ல மல்லாகத்திற்கு அப்பாலும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் இது பற்றி நான் யப்பானிய தூதுவருக்கு விபரித்தேன்.

உடனே போதிய தொழில் நுட்பத் திறன் தற்காலத்தில் உண்டு என்று கூறித் தம் அரசாங்கம் எமக்கு உதவ முன்வரும் என்றார். வேலைப் பளுவில் நான் மறந்து விட்டாலும் எமது வேட்டிகட்டும் வேளாண்மை அமைச்சர் எனக்கூடாக அந்த வேற்று நாட்டுத் தூதுவரின் உதவியைப் பெற ஆவன செய்வார் என்று நம்புகின்றேன்.

நிலத்தின் அடியில் மாசுடன் வாழ்வது நிந்தைக்குரிய ஒரு நிலை. நிபுணர்கள் உதவியுடன் ஒரு நிரந்தரத் தீர்வு இந்த நிலத்தடி மாசுக்கு நாம் காண வேண்டும். மரங்களை நாட்டுவதால் நாம் அடையும் பயன் பல இருக்கின்றன.

சுற்றுச் சூழலில் உள்ள ஒலி இரைச்சலைத் தணிக்க வல்லன மரங்கள். இதுகாறும் எம்மை வாகன ஓசைகள் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. இப்பொழுது வாகன இரைச்சல் மாசானது மெல்ல மெல்ல யாழ்ப்பாண நகரப் புறத்தைக் கவ்வி வருகின்றது. மரங்களைப் போதுமானதாக நாட்டி வைப்பது வாகன இரைச்சல் காதைத் துளைப்பதைக் கட்டுப் படுத்தும்.

மரங்கள் உயிரியமான பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. சுற்றியுள்ள சூழலை சுத்தப்படுத்துகின்றன. சுகமான சூழலை உண்டு பண்ணுகின்றன. சுழன்று வரும் பேய்க்காற்றைத் தடை போட்டு நிறுத்துந் தகைமை மரங்களுக்குண்டு. மேலும் மழைக்காலங்களில் மண் அரிப்பைத் தடை செய்வதும் மரங்களே.

எமது இந்து மதமானது ஒவ்வோர் தெய்வத்திற்கும் ஒரு விருட்சத்தை உடன் நிறுத்தி வைத்தார்கள். இந்தத் தெய்வத்திற்கு இந்த மரம் அல்லது செடி அல்லது மலர் இடமாகும் என்றார்கள். தாவரங்களுடன் எமக்கிருக்கும் அந்நியோன்யத்தை, அண்மித்த நிலையை அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

எமது முன்னோர்கள் மட்டுமல்ல இந்நாளில் நாங்கள் கூட மரங்களை மனமுவந்து வணங்குகின்றோம். வேம்பு, துளசி போன்றவை மக்களின் மரியாதையை இன்றும் பெற்ற மரங்கள். உரோமர்கள் கூட மரங்களைத் தெய்வமாக வழிபட்டார்கள். மரங்களாவன மாசைத்தரும் ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை மண்ணிலிருந்து பெற்று அவற்றைப் புறக்கணித்து அதேநேரத்தில் தனியாகத் தம் வசஞ் சேர்த்து வைக்கும் பாங்கை உடையவை. சில நேரங்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நல்லவையாக மாற்றவல்லன. எம் கழிவுப் பொருட்கள் அவற்றின் உரமாக மாறுகின்றன. கரிமத்தைத் தன்னுள் கரிசனையாய் வைத்திருந்து மரங்கள் மனித குலத்தைப் பாதுகாக்கின்றன.

இன்று எம் மக்களுக்கு வேண்டிய மிகப்பெரிய ஆற்றல் அல்லது ஆளுமை தன்னலம் மறந்து தரணி நலம் பேணல். அதுவும் தம்மக்கள் தடையறாது வாழ்ந்த இந்தத் தமிழ்ப் பேசுந் தரணி நலம்பேண! எம் வடக்கு மாகாணம் பலவித சோதனைகளையும் சோர்வுகளையும் சோகைகளையும் எதிர் நோக்கியிருக்கின்றது. அவற்றை எல்லாம் போக்கவல்லது நாம் சுயநலம் களைந்து பொது நலங் கருதி வாழும் வாழ்க்கை. அவ்வாழ்க்கைக்கு உரமூட்டக் கூடியது இந்த மரம் நடும் மாண்பாகும்” என்றுள்ளார்.

0 Responses to எமது வரலாற்றில் நவம்பர் மாதத்திற்குரிய பக்குவத்தை மரம் நாட்டி நிரூபிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com