எதிர்க்கட்சிகளின் கூட்டணி தனது பொது வேட்பாளரை அறிவித்துவிட்டது. முதல்வன் படத்தில் வரும் ஒரு நாள் முதல்வரைப்போல மைத்திரிபால சிறிசேனாவும் 100 நாள் ஜனாதிபதியாக இருப்பாராம். அதாவது, அவர் 100 நாட்களிற்குரிய ஒரு டம்மிதான். பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படக் கூடும் என்று ஊகிக்கப்பட்ட திருமதி சந்திரிகா, கரு ஜெயசூரிய, ரணில் போன்றவர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் அளவிற்கு மைத்திரிபால சிறிசேனா நட்சத்திர அந்தஸ்து உடையவர் அல்ல. கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகவும் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பதால் கட்சியை உடைந்து அதிக தொகை அதிருப்தியாளர்களை வெளியில் கொண்டு வரக்கூடியவர் என்ற ஓர் எதிர்பார்ப்பில் அவரைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே, தோற்றவர் என்பதால் அவருக்கு மகிந்தவுக்கு எதிராக நிற்கத் தேவையான ஜனவசியம் இல்லை என்று கருதி அவர் தவிர்க்கப்பட்டிருக்கிறார். இது ஓர் அடிப்படை உண்மைதான். அதேசமயம், கரு ஜெயசூரியா தெரிவு செய்யப்பட்டிருந்தால் அது ரணிலுக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும். ஏனெனில், கரு ஜெயசூரியாவிடம் சில சமயம் மகிந்த ராஜபக்ஷ தோற்றால் அது ராஜபக்ஷவின் தோல்வியாக மட்டுமிராது. ரணிலின் தலைமைத்துவத் தோல்வியாகவும் அமைந்துவிடும். அதன் பின் ரணில் கட்சிக்குள் தலையெடுப்பது கடினமானதாகிவிடும். எனவே, ரணிலின் தலைமைத்துவத்தை பாதுகாக்கும் ஓர் நிகழ்ச்சி நிரல் இதில் உண்டு. மேலும் சந்திரிகா போட்டியிடுவதில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவர் மீண்டும் போட்டியிடுவது தொடர்பான சட்டச் சிக்கலே அது.
இப்படிப் பார்த்தால் மைத்திரிபால சிறிசேனாவின் தெரிவு என்பது இரண்டு இலக்குகளைக் கொண்டிருக்கிறது. முதலாவது ராஜபக்ஷ சகோதரர்களைத் தோற்கடிப்பது. இரண்டாவது ரணிலின் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பது.
வெற்றி வாதத்தை எப்படி வெற்றி கொள்வது? இக்கேள்விக்குரிய விடைக்குள் தமிழ் மக்களின் துயரம் உறைந்துகிடக்கிறது. அதாவது, வெற்றி வாதத்தை அதற்கு வெளியில் இருக்கும் யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. பதிலாக அதை உள்ளிருக்கும் எதிரிகளை வைத்தே வெற்றிகொள்ள முடியும் என்பதேயே மைத்திரிபால சிறிசேனாவின் தெரிவு வெளிக் கொணர்ந்திருக்கிறது. நட்சத்திர அந்தஸ்து குறைந்தவர் எனினும் அவரை முன்னிறுத்தினால்தான் மகிந்தவை தோற்கடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. இதை மறுவளமாகச் சொன்னால், ராஜபக்ஷக்களுக்கு எதிராக நிற்கத்தக்க முகவசியமும் ஜனவசியமும் மிக்க ஒரு தலைவர் தங்கள் மத்தியில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றனவா?
அது தான் உண்மை. வெற்றி வாதத்தை அதன் பங்காளிகளை வைத்தே தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவை நிறுத்தியபோதும் அவ்வாறு சிந்திக்கப்பட்டது. சரத் பொன்சேகா இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவர் மரியிழையில் உயிர் தப்பியபோது குண்டுகளால் சல்லடையாக்கப்பட்ட அவரது காரை ஒரு பிரசாரப் பொருளாக முன்வைக்கப்போவதாகக் கூறியதும் இந்த அடிப்படையில்தான். எதிர்க்கட்சிகள் வென்றால் அடுத்த பாதுகாப்பமைச்சர் சரத் பொன்சேகாவே என்று கூறப்படுவதும் இந்த அடிப்படையில்தான். அது மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது இனப்பிரச்சினை தொடர்பில் 13வது திருத்தத்தை தாண்டத் தயாரில்லை என்றவொரு தோற்றத்தை வெளிக்காட்டுவதும் இந்த அடிப்படையில்தான். இன்னுமொன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். மைத்திரிபால சிறிசேனா அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின் நடாத்திய முதலாவது ஊடக சந்திப்பின்போது வழங்கிய வாக்குறுதிகளில் இனப் பிரச்சினைகள் தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை.
அதாவது, தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்கும் உரிமைகளை கொடுக்கப் போவதில்லை என்பதை சூசகமாகவேனும் சிங்கள வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு என்று அர்த்தம்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்று காட்டப்படுகிறது. அதுவும் ஒரு காரணம் தான். ஆனால், அதுவே முழுக் காரணமும் அல்ல. இன்று ஜனாதிபதி முறைமைக்கு எதிராக பிரசாரம் செய்பவர்களில் 90 விகிதத்திற்கும் மேலானவர்கள் கடந்த தசாப்தங்களில் அந்த முறைமையை ஆதரித்தவர்கள்தான். உள்நாட்டுச் சக்திகள் மட்டுமல்ல இப்பொழுது ஜனாதிபதி முறைமையை அகற்ற வேண்டும் என்று மறைமுகமாகப் பாடுபடும் வெளிநாட்டுச் சக்திகளும்கூட முன்பு அதை கண்டும் காணாமலும் இருந்தவைதான்.
கடந்த ஆண்டு, தமிழ் மக்கள் மத்தியில் சிந்தனைக் குழாங்களை உருவாக்குவது தொடர்பாக தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளோடு மேற்கத்தய தொண்டு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி ஒருவர் உரையாடினார். இதன்போது நாடு எதேச்சாதிகார பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு சிவில் சமூகங்களையும் சிந்தனைக் குழாங்களையும் உருவாக்கிப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நவிப்பிள்ளை அம்மையார் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு வெளியேறும்போதும் இதே தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், நாடு எதேச்சதிகாரப் பாதையில் செல்வது என்பது கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் என்று மேற்கு நாடுகளும் அவற்றின் தொண்டு நிறுவனங்களும் கூறுவது முழு உண்மையல்ல. மேற்கு நாடுகளின் நண்பனான ஜெயவர்த்தனவின் காலத்திலிருந்தே தொடங்கியதொரு போக்கிது. ஆணைப் பெண்ணாக்குவது தவிர மற்ற எல்லாவற்றையும் செய்யத் தேவையான அதிகாரங்களைக் கொண்ட ஒரு பதவி என்று வர்ணிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் தந்தை ஜெவர்த்தனதான். எனவே, பிரச்சினைகளின் பிதா அவர்தான். நெகிழ்ச்சியற்ற மூடுண்ட ஒரு யாப்பை உருவாக்கியவர் அவர்தான். தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை எழுதி வாங்கி வைத்திருந்தவரும் அவர்தான்.
இலங்கைத்தீவின் அரசியலில் பன்மைத்துவம் மற்றும் பல்லினத் தன்மை என்பவற்றின் சவப்பெட்டியில் இறுதியாகத் தைக்கப்பட்ட ஆணியே இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு ஆகும். எனவே, இங்கு பிரச்சினை முழு அரசியல் அமைப்புந்தான். ஜனாதிபதி முறைமை மட்டும் அல்ல. இதை இன்னும் ஆழமாகச் சொன்னால், அரசியல் அமைப்பை உருவாக்கும் போது அதன் பின்னிருந்த சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையே மூலகாரணம் எனலாம். இலங்கைத்தீவின் யாப்பு வரலாறு எனப்படுவது இன ஒடுக்கு முறையின் வரலாறாகவே காணப்படுகிறது. அதன் ஆகப்பெரிய உச்சம் தான் இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு ஆகும். 18வது திருத்தத்தை உருவாக்கியதன் மூலம் இந்த அரசாங்கமும் தன் பங்கிற்கு அந்தச் சவப் பெட்டியில் மேலுமொரு ஆணியைத் தைத்திருக்கிறது.
ஜெயவர்த்தன மேற்கின் நண்பனாக இருந்தபடியால் அவர் செய்தவை எவையும் மேற்கின் கண்களை உறுத்தவில்லை. இப்பொழுது இந்த அரசாங்கம் மேற்கிற்கு கீழ்படியாக மறுப்பதால் அவர்கள் எதேச்சாதிகாரப் போக்கைப் பற்றி விமர்சித்து வருகிறார்கள். ராஜித சேனரட்ன 19வது திருத்தத்தை ஆதரித்தமைக்காக இப்பொழுது வருத்தம் தெரிவிக்கிறார். முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என். சில்வா ஓய்வுபெற்ற பின் பதவியிலிருக்கும் போது செய்த தவறுகளைக் கூறி பாவ மன்னிப்புக் கேட்கிறார். சந்திரிகாவும் கூட ஜனாதிபதியாக இருந்தவர்தான். அப்பொழுது வராத ஞானம் ஓய்வு பெற்றபின் வந்திருக்கிறது. இப்படியெல்லாம் ஓய்வூதியர்கள் ஞானம் பெற்று பாவ மன்னிப்புக் கேட்பதால் தமிழ் மக்கள் இழந்த உயிர்களையும், சொத்துச் சுகங்களையும் திரும்பப் பெறப்போவதில்லை.
இப்பொழுதும் கூட இந்த ஓய்வூதியர்களும் தேர்தலையொட்டி பரிநிர்வாணம் பெற்ற புதிய நீதிமான்களும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணி என்று கூறி வருகிறார்கள். வெற்றிவாதத்திற்குச் சவாலாக அதன் பங்காளி ஒருவரையே – அவர் ஒரு டம்மியாக இருந்தாலும்கூட – நிறுத்துவதன் மூலம் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முற்படுகிறார்கள். ஆனால், இந்த இடத்தில் தமிழ் மக்கள் கற்றுணர வேண்டிய மிக குரூரமாண உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும். வெற்றி வாதம் எனப்படுவது எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல இனவாதத்தின் ஆகப் பிந்திய வடிவம்தான் அல்லது இன ஒடுக்குமுறையின் ஆகப் பிந்திய வடிவம்தான். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் அரங்கில் நிற்கப் போவது இரண்டுமே இனவாதத்தின் வெ்வேறு முகங்கள்தான். இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகளும் இனவாதத்தையே முன்னிறுத்தியுள்ளன. அதாவது, வெற்றி வாதத்திற்கு எதிராக வெற்றி வாதத்தைத்தான் நிறுத்த முடிந்துள்ளது. நல்லிணக்க வாதத்தையோ அல்லது மெய்யான தேர பௌத்த வாதத்தையோ முன்னிறுத்த முடியாதுள்ளது. அதாவது, மே 19இற்குப் பின்னரான தேர்தல் களங்களில் வெற்றிவாதத்தை மீறி சிந்திக்க முடியாததொரு நிலை. இது தான் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தென்னிலங்கையின் ஆகப் பிந்திய அரசியல் யதார்த்தம். யார் ஆகக் கூடிய இனவாதத்தைப் பேசுகிறாரோ அவர்தான் இச்சிறு தீவின் அரசுத் தலைவராக வரமுடியும்.
ஜாதிக ஹெல உறுமயவின் பிரச்சினை நல்லாட்சியல்ல. ஜனாதிபதி முறைமையை நீக்குவதுமல்ல. அவர்களுடைய உண்மையான பிரச்சினை எதுவெனில், சிங்கள பௌத்த அடிப்படைவாதத்திற்கு யார் தலைமை தாங்குவது என்பதே. அரசாங்கத்தின் பின்பலத்தோடுள்ள பொதுபல சேனாவைவிடவும் தனக்கே அத்தகுதி அதிகமிருப்பதாக ஹெல உறுமய நம்புகிறது. இது சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கிடையிலான போட்டிதான். அதாவது, இனவாதிகளுக்கிடையிலான போட்டிதான்.
சஜித் பிரேமதாஸ கூறுகிறார், தனது தந்தை புலிகள் இயக்கத்திற்கு ஆயுதம் வழங்கியது, அந்த இயக்கத்தை உடைப்பதற்கே என்று. 2014இல் பாவ மன்னிப்புக் கேட்கும் ராஜித சேனரட்ண, 2004இல் சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் வசங்வாதய என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, ''இரண்டு வருட கால சமாதானத்தால் நீங்கள் சாதித்தது என்ன?' என்று. அதற்கு அவர் சொன்ன பதில், ''வடக்கையும், கிழக்கையும் பிரித்ததுதான்' என்பதே. அதாவது, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தமிழர்களின் எதிர்ப்புச் சக்தியை உடைப்பது அல்லது நீர்மூலமாக்குவது பற்றியே அவர்கள் சிந்திக்கிறார்கள். எதிர்க்கட்சியாய் இருக்கும்போது தேவை கருதி மேற்கொண்ட இரகசிய நகர்வுகளை பின்னாளில் தேர்தல் தேவை கருதி இனவிரோதம் தொனிக்கும் விதத்தில் வியாக்கியனாம் செய்கிறார்கள்.
இத்தகையதொரு பின்னணியில் ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேனா வெல்வரா? அல்லது அவரும் மற்றொரு சரத் பொன்சேகாவாக மங்கிப் போவரா? என்பது இப்பொழுது தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினை அல்ல. மாறாக, திரும்பவும் திரும்பவும் வெற்றி வாதத்தைத் தோற்கடிப்பதற்கு, அதாவது இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு புதிது புதிதாக இனவாத முகங்களையே கண்டுபிடிக்க வேண்டிய ஒரு தேவை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் அப்படியே மாறாதிருக்கிறது என்பதைத்தான் தமிழ் மக்கள் இங்கு உற்றுக் கவனிக்க வேண்டும். எனவே, தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்க எதிர்க்கட்சிகளால் முடியாது.
இந்நிலையில், தொடர்ந்தும் வெற்றி வாதத்திற்கு தலைமை ஒருவர் அல்லது நவம்பர் 21ஆம் திகதி வரை வெற்றிவாதத்தின் பங்காளியாக இருந்த ஒருவர். இருவரில் ஒருவரைத்தான் தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டியிருக்கும். அல்லது யாரையும் தெரிவு செய்யாமல் விலகி நிற்க வேண்டியிருக்கும்!
(எதிரணியின் பொது வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் கூட்டாளி மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் களம் என்ன காட்சிகளை பிரதிபலிக்கின்றது என்பது தொடர்பில் பத்தியாளர் நிலாந்தனின் தினக்குரலுக்கான இந்தக் கட்டுரை பேசுகின்றது. கட்டுரையின் இணைய வடிவம் குளோபல் தமிழ்ச் செய்திகள் தளத்திலிருந்து எடுத்தாளப்படுகின்றது. உள்ளடக்கங்களுக்கு கட்டுரையாசிரியரே பொறுப்புக்குரியவர்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

0 Responses to வெற்றி வாதத்திற்கு எதிராக வெற்றிவாதம்! - நிலாந்தன்