Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இருண்ட ஆட்சியிலிருந்து நாட்டைக் காப்பதற்காகவே அரசாங்கத்திலிருந்து விலகி வந்து மக்களின் மீது நம்பிக்கை வைத்து எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுகிறேன் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவை வரவேற்கும் நிகழ்வொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் நீண்ட காலமாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளேன். நான் பண பலத்திலும் அரசியல் செல்வாக்கிலும் அரசாங்கத்திற்கு வரவில்லை. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மக்களின் பசி, வறுமை, துன்பம் அனைத்தையும் உணர்ந்தவன். இன்று வரையில் நான் அவ்வாறே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன்.

இன்று நான் பொது வேட்பாளராக களமிறங்கியவுடன் மக்கள் என்னை சிறீலங்கா சுதந்திர கட்சிக்காரனா அல்லது ஐக்கிய தேசியக்கட்சி காரனா எனப் பார்க்கின்றனர். இதில் மக்கள் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது உருவாக்கியிருப்பது ஜனநாயக்கூட்டணி. அதன் வேலைத்திட்டம் மிகவும் பரந்தது. கடந்த காலங்களில் அரசாங்கம் கொடுத்த பொய் வாக்குறுதிகளை தகர்த்தெறிய ஜனநாயகத்தினை வென்றெடுக்க உருவாக்கியுள்ள புதிய கூட்டணி.

இலங்கையில் இன்று இருண்ட யுகம் நிலவுகின்றது. அன்று இந்தியாவில் தென்னாபிரிக்காவில் இவ்வாறான இருண்ட யுகம் நிலவியது. அன்று நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசம் சென்று பின்னர் தென்னாபிரிக்காவை ஜனநாயக நாடாக மாற்றியிருந்தார். மகாத்மா காந்தி இந்தியாவில் அஹிம்சைப் போராட்டத்தின் மூலம் விடுவித்தார். நான் மகாத்மாவோ அல்லது நெல்சன் மண்டேலாவோ அல்ல. ஆனால் நான் அவர்களின் கொள்கையினை பின்பற்றி இலங்கையினை சூழ்ந்துள்ள அராஜக ஆட்சியில் இருந்து நாட்டிற்கு விடுதலையினை பெற்றுக்கொடுப்பேன்.

2015ம் ஆண்டு ஜனநாயக ஆட்சிக்கான ஆண்டாக அமைய வேண்டும். மக்கள் தமது உரிமைகளை வெற்று மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழும் அரசாங்கமாக உருவாக வேண்டும். அதற்கு எமது கூட்டணி துணை நிற்கும். இன்று போராட்டம் ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ என்று சர்வாதிகளுக்கும் ஜனநாயக வாதிகளுக்குமே. எனவே இந்த ஆட்சியினை வென்றெடுக்க சகலரும் சகல கட்சிகளும் எம்முடன் இணைய வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியினை மாற்றியமைக்க வேண்டும். இதுவே தனித்தனி கொள்கைக்கொண்ட புதிய கூட்டணி. இதில் 100 நாட்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது கொள்கையில் போராட வேண்டும். பின்னர் தத்தமது சுய கொள்கையில் செயற்பட முடியும்.

மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்த வேண்டிய பொது வேட்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சகலருக்கும் தெரிந்திருக்கும். மஹிந்தவின் பணப்பலம் அதிகாரபலம் அனைவரையும் அழித்துவிடும். அவரைப்போல் பணபலமோ ஆயுத அதிகார பலமோ என்னிடம் இல்லை.

நான் பொது வேட்பாளராக களமிறங்கியது எனது குடும்பத்தின் உயிரை பணயம் வைத்தே. எனவே இன்று நான் என்னை பொது மக்களிடம் ஒப்படைத்துள்ளேன். எனக்கான பாதுகாப்பினை இனிமேல் பொது மக்கள் தான் வழங்க வேண்டும். இம்முறை என்னை ஆதரிக்க வேண்டியது நீங்கள் தான். எனவே என்னையும் எனது மனச்சாட்சியினையும் நம்பி எனக்கு வாக்களியுங்கள்” என்றுள்ளார்.

0 Responses to இருண்ட ஆட்சியிலிருந்து நாட்டைக் காக்க மக்களை நம்பி களமிறங்கியுள்ளேன்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com