Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’சென்னைக்கு வருகை புரிந்த பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா மறைமலை நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சுமத்தியிருக்கிறார்.

ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதியே இல்லாதவர் அமித்ஷா. 2005–ல் குஜராத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் எண்கவுண்டர் வழக்கில் அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா கைது செய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது.

மூன்று மாத சிறை வாசத்திற்கு பிறகு குஜராத்தில் நுழையக்கூடாது. மும்பை மாநகரத்தில் தான் தங்கியிருக்க வேண்டுமென்று நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தவர் தான் இன்றைய பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் அமித்ஷா. இத்தகைய கிரிமினல் பின்னணி கொண்டவரை வைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டில் காலூன்ற கனவு காண்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என்று சொல்லுகிற அமித்ஷாவுக்கு சவாலாக ஒன்றை கேட்க விரும்புகிறோம். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் முக்கிய பங்கு வகித்த அன்னை சோனியா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள் எவர் மீதாவது இந்த நாட்டின் எந்த நீதிமன்றத்திலாவது ஊழல் வழக்கு இருப்பதாக அமித்ஷாவால் கூற முடியுமா?

சர்வதேச சந்தை விலைக்கு ஈடாக 50 சதவீதம் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால் 13 சதவீதம் தான் விலை குறைந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட பயனை மக்கள் அடையக்கூடாது என்கிற நோக்கத்திற்காக கலால் வரி விதித்து வருவாயை பெருக்கிக்கொள்ள முயலும் பா.ஜ.க. அரசு காங்கிரஸ் கட்சியை பற்றி குற்றச்சாட்டு கூறலாமா?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறியவர்கள் ஆறு மாதங்கள் ஆகியும் ஒரு பைசா கூட மீட்காதது ஏன்?

தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக இந்தி, சமஸ்கிருத திணிப்பை நயவஞ்சமாக செய்து வருகிற பா.ஜ.க.வினரின் சுயரூபத்தை தமிழக மக்கள் மிக நன்றாகவே அறிந்து வருகிறார்கள். இந்திய மீனவர்களுக்காக தனி துறை துவக்குவதாக சொன்ன பா.ஜ.க.வினர் இன்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக வெண்சாமரம் வீசுவது ஏன்?’’என்று கூறப்பட்டுள்ளது.

0 Responses to ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாஜகவினர் வெண்சாமரம் வீசுவது ஏன்? : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com