Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவுக்கு வருகை தரும்போது எல்லாம் சிங்கள அரசுத் தலைவர்கள் தங்களை இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்​டவர்கள் போல் காட்டிக்கொள்வதும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்திய மண்ணையும் அரசையும் வளைக்க நாடகமாடுவதும் இயல்பாகிவிட்டது.

குறிப்பாக பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் இந்த நாடகத்தை ஆடி, ஆட்சியாளர்களை அவர்கள் குளிர்விக்கிறார்கள். திருப்பதி கோயிலுக்குப் போவதும் ஏழுமலையானைக் கும்பிடுவதும் இந்த நாடகத்தில் வழமையான ஒரு காட்சியாய் அமைகிறது.

முன்பு மகிந்த ராஜபக்ச‌ திருப்பதி வந்தார். இப்போது மைத்திரிபால சிறீசேன வருகிறார்.

இலங்கையில் சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்பே 'பஞ்சேஸ்வரங்கள்’ எனப்படும் ஐந்து பழம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன. ஆனால் இன்று இந்தச் சிவாலயங்களின் நிலை என்ன? சிங்கள இனவெறி அரசுகளும் புத்த சங்கங்களும் இந்தச் சிவாலயங்களை இன்று அழிவு நிலையிலேயே வைத்துள்ளன.

திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற 'திருக்கோணேஸ்வரம்’ சிவன் கோயிலில் வானைத்தொடும் புத்தர் சிலை ஒன்றைச் சிங்கள புத்த வெறியர்கள் நிறுவி உள்ளனர்.

சுந்தரர் பாடல் பெற்ற 'திருக்கேதீசுவரம்’ சிவன் கோயில் காணியில், 2009-க்குப் பின் சிங்கள புத்த இனவெறியாளர்கள் 'புத்த விகாரை’ ஒன்றைப் புதிதாக எழுப்பியுள்ளனர்.

கீரிமலை 'நகுலேஸ்வரம்’ சிவன் கோயில் சிங்களப் படையின் இரும்புச் செருப்புகளின் கீழ் சிக்கிக் கிடக்கிறது.

சிலாபத்தில் அமைந்துள்ள 'முனீஸ்வரம்’ சிவன் கோயில் 1901-ம் ஆண்டு நடந்த மாகாணப் பிரிவினையின் போது சிங்கள சிறீலங்காவில் சிக்கிக்கொண்டது.

தென்னிலங்கையில் உள்ள 'சந்திரமௌலீஸ்வரம்’ (தொண்டீச்சரம்) சிவன் கோயில் அழிவுற்றுக் கிடக்கிறது.

சிங்கள புத்த இனவெறி அரசுகளின் துணைகொண்டே இந்தக் கோயில்கள் அனைத்தும் சிதைக்கப்​பட்டன.

ஜெயவர்த்தனா, பிரேமதாச, சந்திரிகா, மகிந்த ராஜபக்‌ச, மைத்திரபால சிறீசேன ஆகியோர் சிங்கள அரசுத் தலைவர்களாகவும் துணைத் தலைவர்களாகவும் இருந்த காலத்தில்தான் தமிழ் ஈழத்தில் 2,076 இந்துக் கோயில்கள் மீது வான்படை விண்ணூர்திகள் குண்டு வீசித் தாக்கியதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்துக்களுக்கு எதிரான சிங்கள புத்த இன மதவெறி இலங்கையில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவதை இங்கே குறிப்பிட வேண்டும்.

100 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நிகழ்ந்த மத நல்லிணக்க மாநாட்டில் சிறப்புரை ஆற்றிவிட்டு சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பும் வழியில் இலங்கை செல்கிறார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் அவர் அனுராதபுரத்தை அடைகிறார். அங்கே சிங்கள புத்த இனவெறியர்கள் கறுப்புக் கொடி ஏந்தி 'இந்துச் சாமியே... திரும்பிப் போ! என்று அவரை விரட்டி அடித்ததை வரலாறு பதிவு செய்து இருக்கிறது.

பாணந்துறை இந்துக் கோயிலில் சிங்கள புத்த இனவெறியர்கள் ஒரு தமிழ்க் குருக்களை எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்ததையும், 'இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்த போதுதான் எனக்கு ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று’ என்று பிரபாகரன் பின்னாளில் அறிக்கை விட்டதையும் மறப்பதற்கு இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு 'திருக்கோணேஸ்வரம்’ சிவன் கோயில் ஐயர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோயில் குருக்களின் மனைவி சாரதாம்பாள் சிங்களப் படையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, இறந்துபோனார்.

முள்ளிவாய்க்கால் போருக்குப் (2009) பின் தமிழ் ஈழத்தில் உள்ள இந்துக்கள் வாழும் சிற்றூர்கள் அனைத்திலும் அரச மரங்களை நடுவதும் புத்தர் சிலைகளை நிறுவுவதும் சிங்கள ஆட்சியாளர்களின் வாழ்த்தோடு புத்த சங்கங்களின் துணையோடு, சிங்களப் படைகளின் காவலோடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தமிழ் ஈழத்தில் இருந்துவரும் செய்திகள் உறுதிபடக் கூறுகின்றன.

இத்தனை 'இந்து அழிப்பு’ நடவடிக்கை​களையும் இலங்கையில் மேற்கொண்டு​வரும் சிங்கள தலைவர்கள்தான், இந்தியா வரும் போது எல்லா இந்துக் கோயில்களையும் தேடித் தேடிக் கும்பிடுகிறார்கள்.

தமிழ் ஈழத்தில் சிவன் தலையிலும் அம்மன் தலையிலும் திருமால் தலையிலும் குண்டு போட்டவர்கள் திருப்பதி ஆண்டவனின் 'தரிசனம்’ பெற வருகிறார்கள்.

டெல்லியில் உள்ள பி.ஜே.பி ஆட்சி​யாளர்களுக்கு சிங்கள இன, மத வெறியர்களின் இந்தத் திருட்டு நாடகம் புரிந்தால் சரி.

0 Responses to இந்து கோயில்களுக்கு வருவது அவர்களது நாடகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com