Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளைக் கொடியுடன் மட்டுமல்ல, வெள்ளைக் கொடி இல்லாமல் போராட முடியாமல் சரணடைந்த ஒருவரைக்கூட சுட்டுக்கொல்ல எமக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை அவரைச் சுட்டுக்கொன்றால் நிச்சயமாக அது போர்க்குற்றம் தான். கட்டாயமாக தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாகும் என்று முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குவதுதான் இராணுவத்துக்கு கெளரவம். சம்பிரதாயமாக அதைச் செய்ய வேண்டும். அதைச் செய்யாவிட்டால் எமக்கு அவமானம். சம்பவத்துடன் தொடர்புடைய ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சிகள் இருந்தால் விசாரணை செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இடம் பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டபோதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சரணடையும் எதிரி, தீவிரவாதியாக இருக்கலாம், வேறு நாட்டு இராணுவத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். சரணடையும் எவரும், வெள்ளைக் கொடியுடன் வந்தால் மட்டுமல்ல, அவர் போராட்டத்தைக் கைவிட்டு வந்திருந்தால், அவர் காயமடைந்த நிலையில் விழுந்திருந்தால், அவரது கையிலிருந்த தோட்டாக்கள் முடிவடைந்து விழுந்திருந்தால் கூட சுடுவதற்கு எமக்கு எந்த அதிகாரமும் இல்லை. உயிருடன் பிடிக்க முடியும் என்றால், எமக்கு குண்டுத் தாக்குதல் நடத்தவேண்டிய அந்த இடத்தில் இல்லை என்றால், கைதுசெய்து அவரை நாம் கட்டாயமாகப் பாதுகாக்க வேண்டும்.

நாம் அதைச் செய்தோம். 12 ஆயிரம் பயங்கரவாதிகள் சரணடைந்தனர். ஏப்ரல் 19ஆம் திகதி ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் மத்தியில் 6 ஆயிரம் பயங்கரவாதிகள் இருந்தனர். 2009 மே மாதம் சிவில் மக்கள் 85 ஆயிரம் பேருள், 6 ஆயிரம் பயங்கரவாதிகள் சரணடைந்தனர். அவர்களை நாம் பாதுகாத்தோம். அதனை நான் அவதானித்தேன். அவர்களுக்கு உணவு, மருந்து எல்லாம் கொடுத்தோம். அதற்கு மேல், இரண்டு, மூன்று பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். மன்னார் பகுதியிலுள்ள ஆசிரியை ஒருவர், பெண் போராளிகள் இருவர். அவர்களை நாம் பாதுகாத்தோம். வெள்ளைக் கொடியுடனோ அல்லது வெள்ளைக் கொடி இல்லாமலோ சரணடைந்த ஒருவரைச் சுட்டுக்கொன்றால் நிச்சயமாக அது போர்க்குற்றம்தான். கட்டாயமாக தண்டணை வழங்கப்படவேண்டிய குற்றம்.

இதுபோன்ற குற்றம் புரிந்தவர்களுக்கு நாம் முன்னரும் தண்டனை வழங்கியுள்ளோம். மிகவும் பாரிய தண்டனை. 1971 கிளர்ச்சியின்போது இராணுவ அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனைகூட விதிக்கப்பட்டது. குற்றம் புரிந்தவருக்கு தண்டனை வழங்குவதுதான் இராணுவத்துக்கு கெளரவம். சம்பிரதாயமாக அதைச் செய்யவேண்டும். அதைச் செய்யாவிட்டால் எமக்கு அவமானம்.

இராணுவமோ, எந்தவொரு நாடோ, அரசோ நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சி இருந்தால், இடம், கண்ணால் பார்த்த சாட்சி, ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சி அல்லது நேரம் என்பன தெரிந்தால் அப்படியானதொன்று நடந்துள்ளதா என்று விசாரிக்க முடியும். விசாரணை நடத்தாவிட்டால், விசாரணை நடத்தாத குற்றத்திற்காக பார்ப்பவர்கள் குற்றாவாளியாக நினைக்க முடியும். அதனால், ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சிகள் இருந்தால் கட்டாயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்வது போர்க்குற்றம்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com