Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபாட்டுக்கும் இடையில் காணப்பட்ட உறவுகள் ஒரு மர்மமான முறையில் இருந்ததாகவும், அவுஸ்திரேலியாவின் புதிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் இலங்கையின் கடந்த அரசாங்கத்தால் சிறந்த வரவேற்பு அழிக்கப்பட்டதாகவும் ‘த ஒஸ்ரேலியா’ பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத படகுகளைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் சாதித்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் அரசாங்கத்துடன் தொடர்புபட்டவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புகளை வைத்திருந்தனர். ஒரு தடவை இலங்கை அரசாங்கத்துக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு டீல் நடைபெற்றுள்ளது. இதனை நாம் மறுபக்கம் பார்க்கின்றோம்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கடற்படையினரின் ரோந்து செயற்பாடுகளை அதிகரித்திருந்தார். அவர்களின் அனுமதியின்றி எவரும் நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் விவகாரம் அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் பிரச்சினைக்குரிய விடயம். இருந்தபோதும் இலங்கையின் கடந்த அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் டீலுக்குச் செல்லவே விரும்பினர்.

அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இலங்கை வந்திருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மறுத்துவிட்டார். இதை அவுஸ்திரேலியாவின் நழுவல் போக்காகவே பார்க்கின்றோம். நாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் கடந்த கால அனுபவங்கள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு வழங்கின. மனித உரிமைகள் கால்களால் மிதிக்கப்பட்டபோது இந்த நாடுகள் அமைதியாக இருந்தன.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த அரசின் முக்கியஸ்தர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புபட்டிருந்தனர்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com