Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் தயாரில்லை. எனவே, தேசிய பாதுகாப்பை சுயநல அரசியலுக்காக எவரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்த அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, முதலாவதாக நேற்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமைய கத்துக்குச் சென்றார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சரை, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித்த குணதிலக உட்பட முப்படைகளின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பலாலி வந்தடைந்த அமைச்சர் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்துக்கு வருகைதந்த அமைச்சருக்கு அங்கு விசேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள பெரும் எண்ணிக்கையிலான முப்படைகள் மத்தியில் அமைச்சர் விசேட உரை நிகழ்த்தினார்.

அங்கு அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த காலங்களில் தவறான கருத்துக்கள் படையினர் மத்தியிலும் ஊடகங்கள் ஊடாகவும் கூறப்பட்டது. நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு போன்று ஏனைய சகல பகுதி மக்களினதும் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நிறுவப்பட்டுள்ள முகாம்கள் அப்புறப்படுத்தப்பட மாட்டாது.

மக்கள் முகங்கொடுக்கும் கஷ்டங்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் உரிய முறையில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று பாதுகாப்புப் படையினரைக் குறைக்க எந்த விதத்திலும் தயார் இல்லை.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதலாவதாக தாய்நாட்டுக்காக அங்கவீனமுற்ற படைவீரர்களைப் பார்வையிட நான் சென்றிருந்தேன். அடுத்த கட்டமாக வடக்கு, கிழக்கிற்கான விஜயத்தை ஆரம்பித்திருக்கின்றேன். அதில் முதற்கட்டமாக இன்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமைய கத்துக்கு வந்துள்ளேன். மூன்று தசாப்தங் களாக இந்த நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடிக்க உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படைவீரர்களை நான் பாராட்டுகிறேன்.

எமது நாட்டு மக்களின் உரிமை பயங்கரவாதத்தால் இல்லாதுபோயிருந்தது. பயங்கரவாத செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் சகல பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது யுத்தம் முடிவுற்ற பின்னர் சிறந்த ஒரு சூழலும் ஒளிமயமும் ஏற்பட்டுள்ளது. சிறந்ததொரு எதிர்காலம் காணப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் சுதந்திரத்தை நிலைநிறுத்து வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் செயற்படுவார்கள்.

தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் என அனைத்தின மக்களும் சுதந்திரமாக வாழும் சூழல் தொடர்ந்தும் பேணப்படும். தேசிய பாதுகாப்பை உதாசீனம் செய்யும் எந்த நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை. தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். இளம் அரசியல்வாதி யென்ற நிலையில் இது தொடர்பில் படைவீரர்களின் கருத்துக்களையும், தேவைகளையும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

படைவீரர்கள் இழந்த கெளரவத்தைப் பெற்றுத்தருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். படைவீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும், அவர்களின் குடும் பங்களுக்கான பாதுகாப்பையும் வழங்கு வதற்கு நாம் உரிய நடவடிக்கை எடுப் போம். புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கினோம். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள் ளன. பெற்றோல், மண்ணெண்ணெய் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளுக்கு நீங்களும் உரித்தானவர்கள் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

சர்வதேச மட்டத்தில் தமது உறவு வளர்ச்சியடைந்து வருவதால் ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இலங்கை பாதுகாப்புப் படையினரின் எண்ணிக் கையை மேலும் அதிகரிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று படை யினருக்கான பயிற்சிகள் வழங்குவதையும் கற்றல் நடவடிக்கைகளைப் பெற்றுக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் உள்ளிட்டவர்களுடன் பிரதேசத்தின் பாதுகாப்புத் தொடர்பில் விசேட கலந்துரையாட லொன்றிலும் அமைச்சர் ஈடுபட்டார்.

அதேநேரம், அமைச்சர் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்கிறார். நாளையதினம் கிழக்கு பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம், திருகோணமலை 22வது படைப்பிரிவு, திருமலை கடற்படை முகாம், சீனக்குடா முகாம் ஆகியவற்றுக்கும் செல்லவுள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரையோ, முகாம்களையோ குறைக்க முடியாது: ருவான் விஜேவர்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com