Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தினை மகிழ்வோடு எதிர்கொண்டுள்ளோம். அவரின் வருகை தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு வழிசமைக்க வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த மன்னார் ஆயர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இந்திய பிரதமரின் வருகையினை நாங்கள் மகிழ்ச்சிக்குரிய விடயமாக பார்க்கிறோம். அவ்வாறான மகிழ்ச்சிக்குரிய வருகை, தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் தமிழ் மக்களின் வழிவகுப்பதாகவும் இருக்கவேண்டும்.

இந்தியாவில் பல இனங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்ற நிலையில், அவர்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் ஒரு நாட்டுக்குள் வாழ்கின்றார்கள்.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கார், இந்திய அரசியலமைப்பை எழுதும் போது சகல இனங்களினதும் உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படையில் அனைத்து இனங்களையும் தனித்துவமான தேசங்களாக அடையாளப்படுத்தினார்.

ஒரு தாயின் பிள்ளைகளாக அனைத்து தேசங்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். ஆனால் அவ்வாறான நிலை இங்கே இல்லை. இலங்கையின் தேசிய கீதத்தைக் கேட்டால் எமக்கு உணர்ச்சி வரவில்லை. நாம் இலங்கையர்கள் என்ற உணர்வு வரவில்லை.

நாட்டைவிட்டு வெளியே சென்றால் மாத்திரமே நாம் இலங்கையர்கள் என தெரிகின்றது. வரலாறு தோன்றாத காலத்துக்கு முன்னிருந்து இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் நாங்கள். எமக்கென பூர்வீகமான வாழ்விடம் இருக்கின்றது.

உலகில் உள்ள செவ்வியல் மொழிகளில் ஒன்று எங்களுடைய தமிழ் மொழி. மற்றையது சீன மொழி. அதனை விட ஆழ்ந்த கலாசாரத்தைக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், இந்த நாட்டில் எம்மை இரண்டாம் தர பிரஜைகளாக பார்க்கும் நிலையே இருக்கின்றது. வந்தான் வரத்தான் என்றும் தங்களில் ஒட்டி வாழ்பவர்கள் என்றும் கூட பலர் சொல்வது மிக கவலைக்குரிய விடயமாகும்.

எமது உறவு நாடான இந்தியாவின் பிரதமர் இங்கே வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்தியாவின் தீர்மானங்கள் அல்லது செயற்றிட்டங்கள் எமக்கு இன்றியமையாதவையாகும். பிரதமர் இங்கே வந்து இங்குள்ள உண்மைகளை கண்டறிந்து உண்மையின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் அரசியல் தீர்வை வழங்கி இந்த நாட்டில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியப் பிரதமரின் வருகை தமிழ் மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்: இராயப்பு ஜோசப்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com