Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் உள்ளக விசாரணைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அலுவலகப் பணியாளர்களும், பங்குதாரர்களும் பங்களிப்பாளர்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் 28வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நேற்று வியாழக்கிழமை சமர்பித்த வருடாந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில் உறுப்பு நாடுகள் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பான பேரவையின் தீர்மானம் அமுல்படுத்தப்பட்ட விதம் குறித்த எனது அறிக்கையை பரிசீலிக்க இருந்தன. இதில் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பான முடிவுகளும் இடம்பெற்றிருக்கும்.

எனினும், தீவிர ஆலோசனைக்கு பின்னர், விசாரணைக்குழுவின் நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்பவும், குறிப்பிட்ட அறிக்கையை வெளியிடுவதை செப்டெம்பரில் நடைபெறவுள்ள அமர்வு வரை தாமதிக்குமாறு நான் பரிந்துரை செய்துள்ளேன். இலங்கையில் மாற்றமடையும் சூழ்நிலைகள், அரசிடமிருந்து எனக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் கிடைத்துள்ள சமிக்ஞைகள், மேலும் தகவல்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் என்பவை குறித்து மதிப்பிட்ட பின்னரே நான் அவ்வாறு பரிந்துரை செய்தேன்.

இலங்கை அரசு உண்மை மற்றும் நீதிக்கான விசேட அறிக்கையாளரையும், பலவந்தமாக காணமற்போகச்செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவையும், என்னையும் செப்டெம்பர் மாத அமர்வுக்கு முன்னதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இக்காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அதில் தொடர்புட்ட சகலருடனும் பேச்சுகளை மேற்கொள்ளும்.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசுக்குக் கிடைத்துள்ள ஒரேயொரு வாய்ப்பு இது. பலனளிக்கக்கூடிய பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் உள்ளக விசாரணைகளில் ஐ.நா. பங்களிக்கும்: சையத் அல் ஹூசைன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com