Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனவாதத்தை தூண்டியவர்களினால் பாதிக்கப்பட்டது நாட்டு மக்களே. ஆகவே, இனவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலான பிரேரணை தென்னிலங்கையில் இனவாதத்தை தூண்ட வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அனுர குமார திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனவாதமும் தோற்கடிக்கப்பட வேண்டும் அனைத்து இனவாதத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் சொத்துக்களும் அழிந்துள்ளன. சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடையே தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்படவேண்டும்.

ஜனநாயக துறைகளை பலப்படுத்துவதற்காக விசேடமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அரசியலுக்குள் நீக்கப்பட வேண்டும். அதே போன்று நாட்டில் ஜனநாயகத்தை நிறைவேற்ற சுயாதீனமான ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான முக்கியமான யோசனை இந்த அரசியலமைப்புக்குள் உள்ளடக்குவதற்கு யோசித்துள்ளோம்.

இந்த 100 நாட்களில் பாராளுமன்றில் நிறைவேற்று குழுவிற்காக நாங்கள் கதைத்துள்ளோம். தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறான விசேட அரசியல் அமைப்பு திருத்த சட்டமொன்றுக்கு நிறைவேற்று குழுவுக்கான நோக்கத்துடன் செயற்படுகின்றோம்.

2009 யுத்தத்துக்கு பின் பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதற்கு பேசியுள்ளோம். அரசியல் கைதிகளாக தடுப்பு முகாம், சிறையில் இருப்பவர்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிறைவேற்று சபையில் கலந்துரையாடி கேட்டிருந்தோம். அந்த அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில் அவர்களை விடுதலை செய்வதற்கும் கலந்துரையாடியுள்ளோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுதந்திரமாக நடமாடும் போது அவர்களின் பின்னால் சென்ற இளைஞர்கள் சிறையில் இருக்கிறார்கள். அதனால் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக காணிப்பிரச்சனைகள் அதாவது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள், வெளிநாடு சென்றவர்களின் காணிகள், போரில் உயிரிழந்தவர்களின் காணிகள் இவை அனைத்தையும் உரிய மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசேடமாக இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தேசிய பாதுகாப்பை காரணமாக கொண்டு அது தொடர்பாக விரிவான திட்டத்தை வகுத்து கையளிக்க வேண்டிய காணிகளை கையளிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்துக்கும் விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்து அவற்றை மேம்படுத்த வேண்டும் அத்துடன் வேலைவாய்ப்பு பிள்ளைகளின் கல்வி என்பவற்றை பெற்றுக்கொடுப்பது அரசின் கடமை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மிகவும் மோசமாக உள்ளது. வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வளத்தை சூறையாடுகிறார்கள். மீனவர்கள் சுதந்திரமாக தொழிலில் ஈடுபடுவதற்கு ஆவண செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும்.

அத்துடன் இந்த அரசு குறுகிய கால 100 நாள் அரசு இது நாட்டு மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். கடந்த கால ஆட்சி துஷ்டத்தனமான மோசமான ஆட்சியாக இருந்தபடியால் மக்கள் ஒன்று சேர்ந்து அந்த ஆட்சியை தோற்கடித்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ பணபலம், அரசபலம், ஊடகபலம் ஆகியவற்றை பிரயோகித்து தோல்வி கண்டார். இதன் மூலம் அனைத்து அதிகார பலமும் மக்கள் சக்திக்கு முன் ஈடற்றது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களித்தார்கள்.

நமது நாட்டின் தேசிய தலைவரை தேர்தெடுப்பதற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்ததில் நாம் பெருமை கொள்ள வேண்டும். தமது இருப்பை தக்கவைத்து கொள்வதற்காக மீண்டும் இனவாதத்தை தூண்ட இருக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது.

கடந்த காலங்களில் இனவாதத்தால் பாரிய அழிவு ஏற்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டது இனவாதத்தை தூண்டியவர்கள் இல்லை. சாதாரண மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். எனவே ராஜபக்ஷவின் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க இனவாதம் இடமளிக்கக்கூடாது.” என்றுள்ளார்.

0 Responses to இனவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்: யாழில் அனுரகுமார திஸ்ஸநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com