Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனாலும், இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூடனான நேற்றைய (சனிக்கிழமை) சந்திப்பின் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மெற்கண்ட விடயத்தை எடுத்துக் கூறியுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியத் தரப்பிலிருந்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன், வெளிவிவகார செயலாளர் ஜெயசங்கர், இலங்கைக்கான இந்தியத்தூதுவர், இந்தியதுணைத்தூதுவர், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “மீள்குடியேற்றம் என்பது முழுமையாக நடைபெறவேண்டும். சொற்ப காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்தபோதும் இதுவரை ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் மீளத்திரும்பி வாழ்வதற்கு முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு (ஜே.வி.பி) பொதுமன்னிப்பு வழங்கியதைப் போன்று அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும். காணாமற்போனோர் தொடர்பில் தொடரும் அவலங்களுக்கு உறுதியான முடிவுகள் எட்டப்படவேண்டும்.

முன்னைய இலங்கை அரசின் ஆட்சியில் இந்திய மீனவர்கள் பலர் தாக்கப்பட்டிருந்தனர், சுடப்பட்டிருந்தனர், கைதுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது அவ்வாறான சூழ்நிலைகள் இல்லை. ஆனால், இந்திய மீனவர்கள் அத்துமீறி வடபகுதி எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவதும், எமது மீனவர்களுடைய வலைகளை அறுத்துச் செல்வதும் நடைபெறுகின்றன. இதனால் எமது மீனவர்கள் தொழிலில் ஈடுபடமுடியாத நிலையில் உள்ளாகின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத்துணைத்தூதருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

அத்தோடு, இந்தியப்பிரதமர் இங்கு வருகின்ற போது அவருடன் மீனவர்கள் சந்திக்க விரும்புவதையும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். இந்திய வெளிவிவகார அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டார். இது தொடர்பில் இருதரப்புக்குமிடையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to மீள்குடியேற்றம் முழுமையாக நடைபெற வேண்டும்; சுஷ்மா சுவராஜிடம் த.தே.கூ எடுத்துரைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com